இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 38

5 நவம்பர் 2005


அன்புடையீர். வணக்கம்,

2005 ஏப்ரல் திங்களில் நிறுத்தப்பட்ட இந்த இணைய இதழ் இப்பொழுது மீண்டும் தொடங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலையேற்றம் செய்யப்பட்தை ஒழுங்குபடுத்தி எளிமையாகக் காணும் வகையில் முறைபடுத்தி - இந்த வலையேற்றத்தை வடிவமைக்கும் பொழுது - இணைய இதழின் பங்கு சிறப்பானதாகவே இருப்பதை அறிய முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்தாலும், இறுதியில் மிகப் பெரிய பதிவாகவே இருந்தது. எனவே கூடுதலாக சில மணிநேரங்கள் உழைத்து, இந்த இணைய இதழையும் தொடருவது என முடிவு செய்தேன். இணையத்தின் பார்வையாளர்கள் இது குறித்துத் தங்களது கருத்தினைத் தெரிவிக்கலாம். படைப்பாளர்கள் தங்களது தரமான தமிழிய நோக்கிலுள்ள படைப்பாக்கங்களை அனுப்பி உதவ வேண்டும்.

எனக்கு வருகிற இதழிலிருந்து சுவைத்தவற்றை -சுவைத்த பக்கங்கள் - எனத் தொடர்ந்து தந்துள்ளேன். சில படைப்பாக்களின் மீது எதிர்வினை புரியவேண்டிய நிலையும் உள்ளது. மிகத் தரமாக எழுதியுள்ள அந்தப் படைப்பாக்கங்கள் எப்படி இந்த நிலையோடு பொருந்திப் போகிறது என்பதனைக் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனவே இநத இதழை மீண்டும் தொடருகிறேன்.

பார்வையாளர்கள் தாங்கள் சுவைத்த தரமான படைப்பாக்கங்களைக்கூட அனுப்பி வைக்கலாம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
5 - 11 - 2005



உலகத்தமிழர் பேரமைப்பு



6.தெற்கு மதகுத்தெரு, கோட்டூர்புரம், சென்னை - 600 085

தமிழ் அமைப்புகளுக்கு வேண்டுகோள்

அன்புடையீர்,

வணக்கம். உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட உலகத்தமிழர் பேரமைப்பு - கடந்த 3 ஆண்டுக் காலத்தில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் உலகத்தமிழர் பேரமைப்பில் இணைந்து வருகின்றன.

இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை இணைப்பதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூர்த் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் புலவர். கு.சுப்பிரமணியம், புலவர் அறிவுடைநம்பி, இலங்கைநாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பெறுப்பேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள தமிழர் அமைப்புகளை உலகத் தமிழ் அமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்.

விவரம் அறிய விரும்புவோர் அஞ்சலட்டையில் தங்கள் அமைப்பின் முகவரியை எழுதிஅனுப்பினால் அவர்களுக்கு இணைப்புப் படிவமும், உலகத்தமிழர் பேரமைப்புக் கொள்கைப் பட்டயமும் அனுப்பி வைக்கப்படும்.

பழ. நெடுமாறன்.(தலைவர்)



செம்மொழி - தொடரும் ஏமாற்று வேலை.

செம்மொழி பற்றிய இந்திய அரசின் அறிவிப்புகள் தமிழர்களை ஏமாளிகளாக்கும் முயற்சிகளாகவே தொடர்கின்றன.

மத்திய மனிதவளத்துறையினால் தமிழ் செம்மொழி அறிவிப்பு வெளியிடப்படாமல் மத்தியப் பண்பாட்டுத் துறையின் மூலம் வெளியிடப்பட்டது ஏமாற்று வேலையாகும்.

சமக்கிருதம் முதலான செம்மொழிகளோடு தமிழைச் சேர்க்க மனமில்லாமல் இரண்டாந்தரச் செம்மொழியாக ஆக்கவே பண்பாட்டுத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது எனத் தமிழ் அறிஞர்களின் கண்டனம் எழுந்தது.

சம்பந்தப்பட்ட மனிதவளத்துறை அமைச்சர் அர்சுன்சிங் பதிலளிக்காமல் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சுற்றுலாத்துறை அமைச்சர் ராசா பின்வரும் விளக்கம் தந்தார்

"சமக்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என மரபு வழியில் கொண்டாடப் பட்டாலும் இதுவரை இந்திய அரசு அம்மொழிகளைச் செம்மொழிகள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. உண்மையில் இப்போதுதான் இந்திய அரசால் முதல் செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இனி சமக்கிருதம் உள்பட மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட இருக்கின்றன" என அறிவித்துத தமிழர் காதில் பூ சுத்தினார்.

ஆனால் 14-8-2005 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இவ்வாண்டு செம்மொழி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சமக்கிருத அறிஞர்கள் 15 பேர், பாலி அறிஞர் ஒருவர், பிராகிருத மொழி அறிஞர் மூவர், அரபு மொழி அறிஞர் மூவர், பாரசீக அறிஞர் மூவர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழறிஞர் ஒருவருக்குக் கூட விருது வழங்கப்படவில்லை. அமைச்சர் ராசா மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பலர் அளித்த வாக்குறுதிகள் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டன.

உண்மையில் சமக்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளே இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன என்பதும், அந்தப் பட்டியலில் தமிழுக்கு இடமில்லை என்பதும் அம்பலமாகி விட்டது.

தொடர்ந்து ஏமாறுவது தமிழர்களின் வழிவழி வந்த பழக்கமோ ?

நன்றி : ஏழைதாசன் - அக் 2005


இக்குறிப்பின் தொடர்ச்சியாக பல சிந்தனைகள் நம்முள் எழுகின்றன.

அப்படியே இந்திய அரசு அளிக்க முன்வந்தாலும் நம்முள் உள்ள பிளவுகளின் காரணமாக செயகாந்தன் போன்றவர்களுக்கு அளிப்பதும் - அதன் தொடரியாகச் சர்ச்சைகள் எழுவதும், பின் அடங்கிப் போவதும - எனச் சடங்குதான் நிறைவேறும். மொழி வல்லுநர் ஒருவருக்குப் பரிசு கிடைக்காது.

தமிழ் இலக்கணப்புலவர் திருமிகு திருமுருகனார் அவர்கள் (புதுவை) புதுவை அரசால் விருது கொடுத்தும், அரசால் மக்களுக்குத் தமிழ் மொழி தொடர்பான எதுவும் நகராது என்ற கட்டத்தில் விருது பெற்ற அனைவரும் திருமுருகனார் தலைமையில் "விருது திரும்ப வழங்கு விழா" என அறிவித்துத் தாரை தப்பட்டைகளோடு முழக்கி, ஊர்வலமாகச் சென்று - பணமுடிப்பையும் விருதையும் திருப்பிக் கொடுத்த தன்மை - வீறுடைய செம்மை - நிமிர்வு - தமிழுக்காக இயங்காத தன்மைக் கெதிராகக் கிளர்ந்தெழுதல், என்பவை வேறு எந்த மொழியிலுமே நடக்காது.

அடிவருடிகளாகத் தன்புகழை வளர்த்தெடுக்காது மக்களுக்காக இயங்குகிற தமிழ் மறவர்கள் தமிழ் மொழியில் இருப்பதால் தான் விருது வழங்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இதுவே பெருமைதான். எப்படியும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு அடிவருடியை உருவாக்கி அவர்களுக்கு விருது வழங்குவார்கள்,
இது நடக்கும்.

செம்மொழியின் தொடரியாக தனிப்பட்ட மனிதர்களுக்கு விருதுகள் வேண்டாம். அரசிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ - தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் திரட்டப்படுகிற ஒவ்வொரு காசும் பின்வரும் அடிப்படைக் கட்டமைப்பிற்காகத் திட்டமிட்டுச் செயற்படுத்தவேண்டும்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பான

1) தமிழ் மொழியை தொடக்கக் கல்விவரை தமிழ் நாட்டில் கட்டாய்ப் பயிற்று மொழி ஆக்குதல்.

2) முதுநிலை வரை தமிழ்மொழிப் பாடம் இல்லாத பாடத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் புறந்தள்ளுதல்

3) தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமையும், வேலைவாய்ப்பும் தமிழ்நாட்டில் அளித்தல்.

4) வளர்ந்து வருகிற அனைத்துத் துறைகளுக்குமான தமிழ்ப் பெயர்ப்பையும், பாடத்திட்டங்களையும் ஆக்குதல்.

5) தொன்மையும், வளமையும் நிறைந்த தமிழ் மொழியின் பல்வேறு கூறுகளை (ஓலைச் சுவடிகள், நூல்கள், இதழ்கள், வரலாற்று எச்சங்கள் - போன்றவற்றை) நுட்பமாகத் திரட்டி தமிழ், தமிழர் வரலாறு காட்ட அடித்தளமிடுதல்.

6) தரமாக இயங்குகிற தமிழுணர்வாளர்களுக்கு அடித்தளம் அமைத்து வளர்த்தெடுத்தல்.

இந்த நிலையடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிடுவோம். வெற்றி பெறுவோம்.



சாப்பிடாதீர்கள்



பசி இல்லாதபோது சாப்பிடாதீர்கள்.

உணவுப் பொருள் அல்லாதவற்றைச் சாப்பிடாதீர்கள்.

கவலையாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

தூக்கம் மிகுந்திருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

தூக்க மயக்கத்தில் சாப்பிடாதீர்கள்.

களைப்பாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

வேலை நிறைய இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

உணவுக்குப்பின் ஓய்வில்லை என்றால் சாப்பிடாதீர்கள்.

கோபமாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

உடல்நலம் கெட்டிருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

அவசரச் சூழ்நிலையில் சாப்பிடாதீர்கள்.

புளிப்புப் பண்டங்களைச் சாப்பிடாதீர்கள்.

கெட்டுப்போன பழைய பண்டங்களைச் சாப்பிடாதீர்கள்.

அவசியம் இல்லை என்றால் சாப்பிடாதீர்கள்.

வீணாகி விடுமே என்பதற்காகச் சாப்பிடாதீர்கள்.

அளவுக்கு மீறிச் சாப்பிடாதீர்கள்.

நாவின் சுருசிக்காகச் சாப்பிடாதீர்கள்.

அடுத்தவரைத் திருப்திப் படுத்தச் சாப்பிடாதீர்கள்.

கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடாதீர்கள்.

கண்ட கண்ட இடங்களில் தயாரித்தவற்றைச் சாப்பிடாதீர்கள்.

காய்கறி, கீரை உணவின்றிச் சாப்பிடாதீர்கள்.

மெல்லாமல் விழுங்கிச் சாப்பிடாதீர்கள்.

மசாலா போட்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.

உடலுக்குப் பொருந்தாத உணவைச் சாப்பிடாதீர்கள்.

நன்றி :- இமைகள் - செப் 2005

நன்றி :- புதுகைத் தென்றல் - அக் 2005


(o) (இப்படியெல்லாம் சாப்பிடுவதால் தான் நிறைய பேருக்குச் சாப்பிட ஏதுமின்றி தவிக்கிறார்கள் - எனவே இதனை உணர்ந்து சாப்பிட்டால் சாப்பிடுபவர்களுக்கும் நல்லது, சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் உதவுவது)



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061