இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 37

15 ஏப்ரல் 2005


அன்புடையீர். வணக்கம்,

நண்பர் திரு விஸ்வநாதன் (அழகி எழுத்துருக்கள்) யுனிகோட் எழுத்துருக்களை வடிவமைத்து விட்டார். யுனிகோடு எழுத்துருக்களின் சோதனைப் பக்கங்களைத் தமிழமுது.வணி - இணையதளத்தில் வைத்துள்ளார். இன்னும் கொஞ்சம் நாள்களுக்குள் நாமும் யுனிகோடு எழுத்துருக்களில் இணையதளப் பக்கங்களை வடிவமைத்து விடலாம். தன் ஒவ்வொரு மணித்துளிகளையும் தமிழுக்காகச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இயங்குகிற திரு.விஸ்வநாதன் அவர்களது பணி மேலும் சிறக்க நெஞ்சு நிறைய வாழ்த்துகிறோம்.

உலக அளவிலான தமிழ் கற்பிப்பதற்காக - www.thamizamthu.com/nasan என்ற இணையதளமானது, கதம்பம் இணையதள நண்பரின் உதவியால் அமைக்கப்பட்டுவிட்டது. 1 GB இடமுள்ள இந்த இணையதளத்தில் தமிழின் பல்வேறு கூறுகளை எளிமையாக, நுட்பமாக இணைக்க விரும்புகிறேன். தமிழ் எழுத்துகள் அறிமுக நிலையிலிருந்து தமிழ்ப்புலமை பெறுகிற வரையுள்ள பாடங்களைச் சுவையாக, ஒளி, ஒலி, படஅசைவுக் காட்சிகளின்வழி ஈர்ப்போடு இணைக்க விரும்புகிறேன். தமிழ் கற்போரை ஊக்குவித்து, படிக்கவைத்து, தேர்வு வைத்து, சான்றிதழ் தர விரும்புகிறேன். தமிழைக் கற்க விரும்புவோருக்கு எந்தவிதப் பொருளாதாரச் செலவுமின்றி தமிழ் கற்க இந்த இணையதளம் வழி அமைக்கும். இந்த இணைய பல்கலைக்கழகத்திற்கு பாடத்திட்ட உறுப்பினராக இருந்து, திட்டமிட்டு, பாடம் எழுதித்தர ஆர்வமுள்ள வல்லுநர்களை அன்போடு அழைக்கிறேன். தமிழின் கூறுகளை விரித்துரைக்கிற கருத்துகளை நூல் வடிவில் பதிவுசெய்திருந்தால் அந்த நூலை அனுப்பினால் போதும். தரமானவை பாடத்திட்டத்தில் இணைக்கப்படும். பாடத்திட்டங்கள் ஒவ்வொன்றும் ஐந்து நிலைகளில் முறைபடுத்தப்படும்.

1. அறிமுக நிலை
2. பொதுவான நிலை (அறிமுகம்)
3. பொதுவான நிலை (சிறப்பு)
4. முழுமையான நிலை
5. ஆய்வு, விமர்சன நிலை.

அடுத்த வலையேற்றத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிற தலைப்புகள் பட்டியலிடப்படும். இணையத்தில் கற்போர், தமிழின் பல்வேறு கூறுகளை அறிவதோடு - பா இயற்றவும் - கலை பண்பாடு பற்றி விளக்கவும் - தமிழின் பன்முக ஆற்றலை, வரலாற்றை அறிகிற வகையிலும், தற்கால இலக்கியம் முதல் தொல் தமிழின் நுட்பம்வரை உணர்கிற வகையிலும், கணினித் தொழில் நுட்பத்தின் அத்தனை ஆற்றல்களையும் உள்ளடக்கியதான ஈர்ப்புடைய, சுவையான பாடங்களுடன் கற்பித்தலுக்கு அடித்தளமிட விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் வாழுகிற நம் தமிழ் மக்களுக்கான முயற்சி இது.

உலகெங்குமுள்ள தமிழ் ஆர்வலர்கள் இது குறித்து மின் அஞ்சல் செய்ய அன்போடு அழைக்கிறேன். இணைய பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக, பாடங்களை எழுத உலகெங்குமுள்ள தமிழார்வமுள்ள தமிழ்ச் சான்றோர்களை அன்போடு அழைக்கிறேன்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
15 - 4 - 2005



மறப்பேனா ?

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா ?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் - என்றன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா ?

பட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா ?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வதைத்தாலும் - என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வரும் புகழொடு
சிரிக்க மறப்பேனா ?

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்

நன்றி : கம்பன் இதழ் - 15 - 4 - 2001



மாவீரர் மறைவாரோ ?

நாவீரம் படைத்தவர்கள் நடிங்கி ஓட
நரிமனத்துக் கொடியவர்கள் கொட்டம் வீழ
தாவீரம் என்றோதித் தமிழை வாழ்த்தித்
தம்தலைவர் வழியேற்றுப் போர் புரிந்த
மாவீரர் மறைவரோ? தமிழர் நெஞ்சுள்
மறமூட்டி ஒளிர்கின்றார் அவர்தம் சீரைப்
பாவீரப் பாவலரே பாடிப் பாடிப்
பைந்தமிழால் ஈழத்தை மணக்கச் செய்வீர் !

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒன்றாய்க் கூடிப்
புகழ்கொண்ட மாவீரர் மேன்மை போற்றி
உளம்நிறைந்த அஞ்சலியைச் செலுத்து கின்றார்
உலகுக்குத் தமிழ்நெறியை ஓது கின்றார்
பலம்நிறைந்த போர்மறவர் கொள்கை ஏற்றுப்
பறைசாற்றி முழங்குவதால் ஈழம் பூக்கும்
வளம்நிறைந்த நல்வாழ்வைத் தமிழர் காண
வழிவகுத்த தமிழ்த்தலைவர் வாழ்க! வாழ்க!!

மண்ணுரிமை மொழியுரிமை இழந்து விட்டால்
வரலாற்றில் இடமின்றி மறைந்து போவோம்
பெண்ணுரிமை பறிக்கின்ற அரசு பொல்லாப்
பேயுலாவும் காடாக இருளே சூழும்
முன்னுரிமை பெற்றவரைக் கீழே தள்ளி
முதுகொடிக்க நினைத்திட்ட பகைவர் வீழ
தன்னுரிமைப் போர்தொடுத்த தமிழன் என்று
சான்றோர்கள் உரைக்கின்றார் வெற்றி காண்போம் !

பனைமரத்துக் காடெல்லாம் நினைவில் ஆட
படரன்பு நட்புகளை எண்ணி வாட
எனைமறந்து நிற்கின்றேன்! காலஞ் செய்த
இழிவுகளை மாய்த்திடவே கடமை யெண்ணி
அணைதிறந்து பாய்ந்தோடும் வெள்ளம் போன்றே
அணிதிரண்டு போராடி ஒளி கொடுத்தார்
மனஞ்சிறந்த மாவீரர் தாள்கள் தம்மை
மதியேந்தி வணங்கிடுவோம் வாரீர்! வாரீர்!

கவிஞர். கி.பாரதிதாசன்.

நன்றி : கம்பன் இலக்கியத் திங்களிதழ் 15-11-2003


நண்பனா, திருடனா ?

ஒரு வீட்டிற்கு திருட வந்தவனும், அதே வீட்டில் இருந்த நாயும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டார்கள். நாய் குரைக்காமல், அந்த மனிதனையே உற்றுப் பார்த்தது. எப்போது வேண்டுமானாலும் அது தன்னைக் கடித்து விடலாம் என்று அஞ்சிய அவன், தன்னிடமிருந்த இறைச்சித் துண்டை அதற்கு உணவாகப் போட்டான். அதை முகர்ந்து பார்த்துவிட்டு, அந்த நாய் அவன் மீது பாய்ந்து விழுந்து கடிக்க ஆரம்பித்தது.

அவன் சண்டையிட்டுக் கொண்டே, "நான்தான் உனக்கு இறைச்சி தந்திருக்கிறேன்.. என்னை ஏன் கடிக்கிறாய்?" என்று நாயிடம் கேட்டான்.

அதற்கு "இறைச்சியை எனக்கு நீ தருகிற வரை நீ நண்பனா அல்லது திருடனா என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது. எப்போது நீ எனக்கு லஞ்சமாக இந்த இறைச்சியைப் போட்டாயோ, அப்போதே நீ திருடன் என்று தெரிந்து கொண்டேன்" என்று நாய் சொன்னது.

பாரதி கிருஷ்ணகுமார்

நன்றி : புதிய ஆசிரியன் - ஏப்ரல் 2005



கடவுளோடு ஒரு விளையாட்டு

அம்மா சொன்னாள்
தூக்கத்தில்
குழந்தை தானாகச் சிரித்தால்
இறைவனோடு
பேசிச் சிரிப்பதாய்.

நானும் அப்படித்தான்
பேசியிருக்கிறேனாம்....
பல பத்து
வருடங்களுக்கு முன்பு.

நேற்று
ஞாயிற்றுக்கிழமை
காத்திருந்தேன்
கடவுளோடு சாவகாசமாய்
பேசலாமென.

வந்தான்.
தட்டினான், அறைக்கதவை
மெளனம் பேசிளோம்
ஐந்து நிமிடம்.

அப்புறம்
அவனே கேட்டான்
" சிகரெட் வைத்திருக்கிறாயா ? "
புகைத்தோம்.
ஊற்றிக் கொடுத்தான்
வாங்கிவந்த
மதுவை.

சீட்டாடினோம்
தொடர்ந்தது என்
தோற்பு .

" குடிக்கவில்லையென்றால்
நான்தான் ஜெயித்திருப்பேன் "
என்றேன்.
அடித்தான்.
பூப்போட்ட புதுச் சட்டை கிழிய.

கோபத்தில்
காலை வாறினேன்.
கடித்துவிட்டான்.
கீழே விழுந்தது அவன்
கிரீடம்.

என் உறக்கத்தோடு
கட்டை விரலையும் கீறி
ஓடியது எலி.

காணாமல் போயிருந்தான்
கடவுளும்,
தலையணைக்கு
அருகில் இருந்ததென்
தலைக்கவசம்.

அம்மாவிடம் சொன்னேன்
கடவுளோடு
விளையாடியதை.

அவள் சொன்னாள் :
கீறியது எலியென்றால்
வந்தது
பிள்ளையாரென்று.

- பழநி பாரதி -

நன்றி : இரத்தினமாலை - ஏப்ரல் 2005


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061