|
இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 36
31 மார்ச் 2005
அன்புடையீர். வணக்கம்,
இந்த முறை ஏகப்பட்ட சிக்கல்கள். பொருளாதாரத் தட்டுப்பாடு. கடன்கேட்டால்கூடக்
கிடைக்காத நிலை. பெருளீட்ட அதிகம் உழைக்கவேண்டிய நிலை. அதனால் இருக்கிற நேரத்தையும் இழந்து,
ஒவ்வொரு ஊராக அலைந்து கொண்டிருக்கிற நிலை. கிடைத்த இரண்டு நாளில் எதற்கும் எழாமல், இருந்த
இடத்திலேயே அமர்நது கோப்புகளை உருவாக்கி வலையேற்ற வேண்டிய நிலை.
22-3-2005 அன்று 312 பேர் தமிழம் வலையைப் பார்த்துள்ளனர். வியப்பு மேலிடுகிறது. இன்னும் நுட்பமாகச்
செய்யவேண்டும் என்ற உந்துதல் நெருப்பாகக் கனன்றுகொண்டு இருக்கிறது.
பழைய இதழ்களை வைத்திருப்பவர்கள் அருள்கூர்ந்து அனுப்பி வைக்கவும். வரலாற்றுப் பதிவிற்கு வழிஅமைக்க,
உதவ வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 30 - 3 - 2005
வேண்டுதல்
(கட்டுரை)
நாரண. திருவிடச் செல்வன்.
ஒருவருக்குக் கடுமையான வயிற்றுவலி. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உண்டால் நோய் குணமாகிவிடும்
என்னும் நம்பிக்கையோடு ஒரு மருத்துவரை நாடிச் செல்கிறார்.
நோயாளி, மருத்துவர் கொடுத்த மருந்தை நோய் குணமாக்கிவிடும் என்னும் நம்பிக்கையில் உட்கொள்கிறார். ஆனால்
வயிற்றுவலி குணமாகவில்லை. மீண்டும் மீண்டும் அதே மருத்துவரிடம் சென்று பலமாதிரியான மருந்துகளைச்
சாப்பிட்டும் குணம் தெரியவில்லை.
இம்முறை ஒரு சீன மருத்துவரிடம் செல்கிறார். பயனில்லை. பின் ஓமியோபதி. சித்தமருத்துவம் - இப்படி எந்த
மருந்துக்கும் கட்டுப்பட மறுக்கிறது, வயிற்றுவலி.
இனி எந்த மருந்தாலும் தன் நோய் குணமாகாது, காலமெல்லாம் வயிற்றுவலியோடு போராடிக் கொண்டிருப்பதை
விட "தற்கொலை செய்து கொள்வதே மேல்" என்னும் முடிவுக்கும் வருகிறார் நோயாளி.
இந்நிலையில்....
பெரியவர் ஒருவர் அவர் படும் துன்பம் கண்டு வருந்தி..."தம்பி மரத்தாண்டவர் ஆற்றல் மிக்கவர். அவரிடம்
வேண்டிக்கொள். உன் நோய் கட்டாயம் குணமாகும்" - என்று ஆறுதல் கூறுகிறார். தன் நோயை எந்த மருந்தாலும்
குணப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை என்ற அளவிற்கு வந்துவிட்ட
நேரத்தில் பெரியவரின் சொற்களைக் கேட்ட நோயாளியிடம் ஒரு புதிய நம்பிக்கை துளிர்விடுகிறது.
ஒரு நோயை யாராலும் குணப்படுத்த முடியாது என்கின்ற ஒரு நிலை ஏற்படும்பொழுது பலருக்கு இறுதி
நம்பிக்கைக்குரியதாக இருப்பது தெய்வம். மருத்துவத் துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள்கூட சில
நோயாளிகளைக் குணப்படுத்த முடியாத நிலையில்...
"நாங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து பார்த்துவிட்டோம். இனி எங்களால் ஆகக்கூடியது ஒன்றுமே
இல்லை. இதற்குமேல் கடவுளை வேண்டிக் கொண்டால் கடவுள் உதவலாம். அல்லது அவரும் கைவிடலாம்"
மருத்துவர்களால் கைவிடப்படும் நோயாளிகள் பிழைப்பது என்பது மிகமிக அரிது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆயிரத்தில் ஒன்றோ, இரண்டோ குணமாகலாம். வேண்டப்படும் எல்லா நோயாளிகளும் குணமாகி விடுவார்கள்
என்று சொல்ல முடியாது. இருப்பினும்....
"இறுதி நம்பிக்கையாக இறுதி முயற்சியாக தெய்வத்திடம் முறையிட்டு இறைஞ்சுவதையே " வேண்டுதல் "
எனப்படுகிறது.
மாந்தனுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு ஓர் அளவு ஏது? அப்படிப்பட்ட துன்பங்களையெல்லாம் போக்கும் வல்லமை
உடையது தெய்வம் என எண்ணி - நம்பி - தங்கள் துன்பங்களைப் போக்குமாறு தெய்வத்தைப் பலவாறாக வேண்டிக்
கொள்கின்றனர்.
(o) அகவை ஏறிக்கொண்டே போகிறது. மகளுக்கு மணமகன் வரவில்லை. விரைவில் திருமணம் ஆகவேண்டும்
என்பதற்காக ஒரு வேண்டுதல்..
(o) முதல் மகப்பேறு சிக்கல் ஏதும் இல்லாமல் குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக ஒரு வேண்டுதல்.
(o) திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் பிள்ளைப் பேறு கிடைக்காமல் இருப்பதற்காக வருந்தி அதற்கு ஒரு
வேண்டுதல்...
இப்படிப் பல காரணங்களுக்காகத் தெய்வத்திடம் பக்கதர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள்
வேண்டிக் கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் மற்றவர்கள் யாரும் தலையிட உரிமை இல்லை.
ஆனால்...
தெய்வத்திடம் வேண்டும் எவரும், வெறுமனே வேண்டிக் கொள்வதில்லை. இது சம்பந்தமாக இருவிதக் கருத்துகள்
கூறப்படுகின்றன.
வேண்டுதல் நிறைவேறினால், உனக்கு நான் அதைச் செய்கிறேன். இதைச் செய்கிறேன் என வேண்டுவது பேரம்
பேசுவதைப் போன்றது. அரசு அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கு
ஒப்பானது. ஒருவர் தான் படும் துன்பத்தை உள்ளம் உருக கண்ணீர் மல்க.. தெய்வத்தின் முன் இறைஞ்சி
நின்றாலே போதும். அன்பே உருவான எல்லாம் வல்ல தெய்வம் மனம் இரங்கி உதவி புரியம். எளிய மாந்தர்
தருவதாகக் கூறும் எளிய காணிக்கைகளுக்கெல்லாம் விருப்பப்பட்டு தெய்வம் வேண்டுதல்களை நிறைவேற்றி
வைப்பதாக நினைப்பது தெய்வத்தின் மிக உயரிய தத்துவத்திற்கே இழுக்காகும். தெய்வத்தைச்
சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பது ஒரு கருத்து.
வேண்டுதல் நிறைவேறிய களிப்பில் திளைத்திருக்கும் பக்தன் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள முயல்வது
இயற்கையே. அந்த அடிப்படையில் செலுத்தப்படும் காணிக்கை அன்புக் காணிக்கை. அன்பின் மேலீட்டால்
நன்றியுடன் செலுத்தப்படும் நேர்த்திக்கடன் கையூட்டு ஆகாது - என்பது மற்றொரு கருத்து.
மேற்காணும் இரு கருத்துகளில் இரண்டாவது கருத்தே சரி என எடுத்துக்கொண்டு பார்ப்போம். ஒருவர் ஏதோ ஒரு
காரணத்திற்காக அவர் விருமபி கும்பிடும் தெய்வத்திடம் வேண்டும்பொழுது, என் வேண்டுதல் நிறைவேறினால்,
"நான் தீயில் இறங்குகிறேன், பதினாறு அடி அலகு குத்திக் கவடி எடுக்கிறேன். தீச்சட்டி ஏந்துகிறேன். கத்திமேல்
நிற்கிறேன். ஆட்டுகிடா வெட்டுகிறேன். 500 தேங்காய் உடைக்கிறேன்"
என்றுதான் வேண்டிக்கொள்ள வேண்டுமா? ஏன் வேறு மாதிரியாகவும் வேண்டிக் கொள்ளலாமே. மேலே உள்ளது
போல இல்லாமல் இன்னும் பல முறைகள் உள்ளனவே.
இங்கு நாம் ஒன்றை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
வேண்டுதல் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இல்லை. கட்டாயமும் இல்லை. ஆனால்
யார் எப்படி வேண்டிக் கொண்டாலும்,
அது பொருள் உள்ளதாக இருக்கவேண்டும். தெய்வத்திடம் தங்கள் மனக்குறையைச் சொல்லி வேண்டிக்
கொள்கிறவர்கள்... தெய்வமே, என் வேண்டுதலை நீ நிறைவேற்றி வைத்தால் உன் பெயரால்.....
(o) இராமகிருட்டிண ஆசிரமத்திற்கு 5 மூட்டை அரிசி வாங்கி அனுப்புகிறேன்.
(o) ஓர் ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்கிறேன்.
(o) வள்ளலார் மன்றத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு மாதம் உணவளிக்கிறேன்.
(o) புற்றுநோய் தடுப்புக் கழகத்திற்கு ஆயிரம் வெள்ளி நன்கொடை அளிக்கிறேன்.
(o) முதியோர் இல்லத்திற்கு 30 கம்பளி போர்வைகள் வாங்கித் தருகிறேன்.
ஏன் இப்படியெல்லாம் வேண்டிக் கொள்ளக்கூடாது. இப்படியெல்லாம் வேண்டிக்கொண்டால் அது தெய்வத்தின்
பெயரால் மனித குலத்திற்கு நன்மை பயப்பதாக அமையுமல்லவா ?
ஏழ்மை நிலையில் உள்ள பக்தர்கள் மேலே கண்டவாறு வேண்டிக் கொள்ள பொருளாதாரம் தடையாக இருந்ததால்,
"மலர், இளநீர், சர்க்கரை காவடி எடுத்துப் பக்கதிப் பாடல்களைப் பாடிக் கொண்டு பவித்திரமாகவும், தூய்மையாகவும்
நம் முன்னோர் ஆண்டவனுக்குக் காணிக்கைச் செலுத்தினர்" என்று திரு.கிருபானந்த வாரியார் கூறுவது போலச்
செய்யலாமே. ஏழ்மை நிலையில் உள்ள ஒரு பக்தர், மலேசியப் பார்வையற்றோர் சங்கத்திற்குத் தன் சக்திக்கு
ஏற்றபடி சிறு நன்கொடை அளிப்பதாக வேண்டிக் கொண்டால் அவர் நம்பி வணங்கும் தெய்வம் அவரைப்
பாராட்டாதா ?
ஒருவர் தீயில் இறங்குவதாக வேண்டிக் கொண்டாலோ, உடலெல்லாம் எலுமிச்சம் பழம் கோர்த்த ஊசியைக் குத்திக்
கொண்டு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டாலோ, 12 அடி நீளத்தில் அலகு குத்திக்கொள்வதாக வேண்டிக்
கொண்டாலோ. 300 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாலோ அதனால் அந்தத் தெய்வம் அடையும்
நன்னை என்ன?
ஒருவர் வேண்டுதலின் பெயரால், தன் உடலெல்லாம் ஊசிக்குத்திக் கொண்டு தன்னையே துன்புறுத்திக்
கொள்வதை "அன்பே வடிவான" "கருணை உள்ளம்" கொண்ட எந்தத் தெய்வமாவது ஏற்றுக் கொள்ளுமா?
தமிழர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
காணிக்கை செலுத்துதல் என்பதெல்லாம் அவரவரது தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.
ஆனால் செலுத்துகின்ற காணிக்கை தெய்வத்தின் மூலம் மக்களுக்கு உதவக்கூடியதாக இருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும் ? என்பதைத் தெய்வத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே
என் வேண்டுகோள்.
நன்றி : நாரண. திருவிடச் செல்வன்.
அலகுக் காவடி, தீமிதி, அருளா? அறிவியலா ? நூல்
புரோகித மறுப்பு ஏன் ?
நம் இனத்திலேயே எவ்வளவேர் அறிஞர்களும், சான்றோர்களும் இருக்கும்போது, புரோகிதர் வந்து திருமணம் நடத்தி
வைக்க வேண்டும் என்பது நம்மை நாமே இழிவு செய்து கொள்கின்ற செயலாகும்.
திருமணத்தின்போது, சொல்லப்படுகின்ற மந்திரமும் நம்மை இழிவு படுத்தவும், அவர்களை உயர்வு படுத்தவும்
ஆகும்.
வைதீக முறைப்படி புரோகிதர் மந்திரம் ஓத திருமணம் செய்து கொள்ளுகின்றவன் தனக்கு மனைவியாக
வருகின்றவர் ஒரு விபச்சாரி என்று ஒத்துக் கொள்கிறான் என்பதே பொருள்.
"சூத்திரன் என்றால் பிராமணனின் வைப்பாட்டி மகன்" என்று இந்துமத சாஸ்திரங்கள் கூறுவதற்குக் காரணம்
இதுதான்.
திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லுவார். அவற்றுள் மணமகளைப்
பார்த்துச் சொல்லும் மந்திரத்தின் பொருளை அறிந்தால் இந்த அவலத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
ஸோமோ: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதியோ அக்நிஷ்டே பதி:
துரியஸ்தே மநுஷ்யஜா.....
ஸோமோ (அ)தத் கந்தர்வாய...
கந்தர்வோ (அ)தத் அக்நயே
ரயிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர்மஹ்யதோ இமாம்.....
இதன் பொருள் : மணப்பெண்னை சோமன் முதலில் கணவனாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அவளைக்
கணவனாக அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி. நான்காவது கணவன் மனித சாதியில்
பிறந்தவன். (ஆதாரம் : கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் எழுதிய விவாஹ மந்த்ரார்த்த போதினி எனும் நூல்)
சோமன் உன்னை கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன்
இவளுக்குச் செல்வத்தையும் குழந்தைையும் கொடுத்துப் பிறகு எனக்குத் தந்தான்.
கண்ணுக்குக் கண்ணாய் கட்டுக் காவலோடு களங்கமில்லாமல் வளர்த்து, மணமேடையில் அமர்ந்திருக்கும் நம்
தமிழ்ப் பெண்ணைப் பார்த்து, உன்னை இதற்கு முன் பலர் மனைவியாக வைத்திருந்தனர். நான்காவதாக
உன்னை இவன் மணக்கப் போகிறான் என்று கூறுவதைவிட மானக்கேடு, கேவலம் இருக்க முடியுமா?
இப்படிப்பட்ட கேவலத்தை ஏற்கவா புரோகிதரை வைத்துத் திருமணம் நடத்தவேண்டும் ? மானமுள்ளவர்கள்
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
- மஞ்சை வசந்தன் -
நன்றி : கண்ணியம் மார்ச் 2005
அறிவுச் சுவடி
அன்பாய்ப் பேசு - அறிவாய்ப் பேசு
ஆற்றலாய்ப் பேசு - ஆக்கமாய்ப் பேசு
இனிக்கப் பேசு - இன்பமாய்ப் பேசு
ஈகையாய்ப் பேசு - ஈட்டியாய்ப் பேசு
உண்மைப் பேசு - உணர்ந்து பேசு
ஊக்கமாய்ப் பேசு - ஊக்கிப் பேசு
எளிமையாய்ப் பேசு - எல்லாம் பேசு
ஏணியாய்ப் பேசு - ஏற்றிப் பேசு
ஐயமின்றிப் பேசு - ஐயம் நீக்கிப் பேசு
ஒன்றிப் பேசு - ஒன்றாகப் பேசு
ஓங்கிப் பேசு - ஓதிப் பேசு
ஒளவைப் பேசு
- புதுவை. தமிழ் நெஞ்சன் -
நன்றி : தமிழ்ச் சிட்டு - மீனம் இதழ்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|