இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 35

15 மார்ச் 2005


அன்புடையீர். வணக்கம்,

ஒவ்வொரு நாளும் இணையத்தைக் காணுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இணையத்தைக் கண்டு எழுதுபவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரியதாக்குகிறேன். உங்களின் கருத்துகள் என்னைச் செழுமைப் படுத்தும். எழுதுங்கள்...

ஒரு மகிழ்ச்சியான செய்தி

நமது www.thamizham.net இணையதளத்திற்கு netsoftonline நண்பர் திரு அரவிந்த் கே.சாமி மேலும் 70 MB இடத்தினை இலவயமாகத் தந்துள்ளார். ஆக தற்பொழுது தமிழம்.வலைக்கு 100 MB இடமுள்ளது. இணையதளம் பற்றிய கருத்துரைகளைத் தொடர்ந்து தருவதோடு இணையத்திற்கான இடத்தினையும் அவர் தந்துள்ளது இன்னும் நிறைய இயங்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளிக்கிறது. அவருக்கு எனது நெஞ்சு நிறைந்த வாழ்த்துகள்.

உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிற தமிழ்ப் பள்ளிகள், தங்களது மாணவர்களின் புகைப்படங்கள், பள்ளியின் புகைப்படம், குறிப்பு போன்றவற்றை அருள்கூர்ந்து அனுப்பி வைக்கவும். பார்வையாளர்கள்கூட இந்த வகையில் உதவ வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
15 - 3 - 2005



தில்லையாடி வள்ளியம்மை

புதுவை டூப்ளே தெருவில் குடியிருந்த இளைஞர் ஆர்.முனுசாமிக்கும், மயிலாடுதுறை அருகில் உள்ள் தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, தில்லையாடியில் இருவரும் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்தனர். ஆங்கிலேயர், இங்கிலாந்திலிருந்து உயர்தர ஆலைத் துணிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து பொருள் குவித்தனர். எனவே, கைததறி நெசவுத் தொழில் படுத்துவிட்டது. மாற்றுத் தொழிலை முனசாமி - ஜானகி இணையர் தேடிக் கொண்டிருக்கையில், தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளை ஏற்றுமதி செய்யும் கங்காணிகள் தொடர்பு ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் அன்றைய நிலை என்ன?

வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தியதுடன், உலகப்புகழ் பெற்ற வைரச் சுரங்கங்களைத் தோண்டுவதற்கு அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோக்களின் உடல் வலிமையையும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் பெறாத நீக்ரோக்கள் வெள்ளை முதலாளிகளுடன் அடிக்கடி மோதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். எனவே வெள்ளையர்கள், நீக்ரோக்களை வேலைக்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்தியாவிலிருந்த கங்காணிகள். 1860 ஆம் ஆண்டிலிருந்தே தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளை கப்பலில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் முனுசாமியையும் இணங்க வைத்துவிட்டனர். வயிற்றில் சிசுவோடிருந்த மனைவி ஜானகியோடு ஆப்பிரிக்கா புறப்பட்டார் முனுசாமி.

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் தங்கிய முனுசாமி சிறு கடை வைத்து உணவு பண்ட வணிகம் செய்து வந்தார்.

1898 ஆம் ஆண்டில் பெண் மகவு பிறந்தது. வள்ளியம்மை எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.

அங்குள்ள காலனி அரசு பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். உலக ஞானம் புரிகிற வயதில், தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து வந்தாள் அந்தப் பெண்.

சூரியன் மறையாத அளவுக்குச் சாம்ராஜ்யத்தைக் கொண்டவர்களல்லவா, வெள்ளை அரசு.

தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியரை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினர் ?

இந்தியர்கள் கூலிகளாகவே அழைக்கப்பட்டனர். இவர்களை அடிக்கலாம். உதைக்கலாம். என்ன கொடுமை செய்தாலும் எதிர்த்துக் கேட்க முடியாது.அவர்களின் எசமானை விட்டு வேறு எசமானரிடமும் செல்ல முடியாது. பொது இடங்களிலும் அவமானப்படுத்தப்பட்டார்கள். வாக்குரிமை கிடையாது. வெள்ளையரோடு பயணம் செய்யவும் கூடாது. இவர்கள் வாழும் பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளாகவே இருந்தன.

இந்நிலையில் இந்திய வம்சாவளியின்ர் தென்னாப்பிரிக்காவில் வாழ 3 பவுன் தலைவரி கட்ட ேவ்ணடும் என்றது வெள்ளை அரசு.

1893 இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. தாதா அப்துல்லா கம்பெனிக்காக 105 பவுன் சம்பளத்தில் ஓராண்டு பணியாற்ற வந்தார்.

ஆனால் 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலரக) அவர் அங்குத் தங்க நேரிட்டது.

ஒரு கம்பெனி வழக்கறிஞராக வந்த அவர், இந்தியர்களின் அவல நிலையைக் கண்டார். இம்மக்களின் அவல நிலையைக் கண்டாா. இம்மக்களின் உரிமைக்காக, தனது சட்ட அறிவையும் திறமையையும் பயன்படுத்தத் தொடங்கினார். ஆம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி- காந்தியடிகளாகப் பண்படுத்தப்பட்டார்.

11-9-1906 இல் 3 பவுன் தலைவரி கட்டவேண்டும் என்ற கறுப்புச் சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாட்டைக் கூட்டினார். சுமார் மூவாயிரம் பேர் கூடிய மாநாட்டில், அகிம்சைப் போராட்டத்தை அறிவித்தார். முதல் அகிம்சைப் போராட்டம் இதுதான். அடுத்துக் குடியேற்றக் கட்டுப்பாடு மசோதாவை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தினார்.

1912 அக்டோபரில் இந்த எதிர்ப்பின் விளைவாக, கறுப்புச் சட்டம் ஒரு ஆண்டிற்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்றும், இநதியர்கள் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்படும் என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் நடந்தது என்ன ?

ஓராண்டாகியும் கறுப்புச் சட்டம் ரத்து செய்யபடவில்லை. 3 பவுன் தலைவரியும் ரத்து செய்யப்படவில்லை.

மாறாக, 14-3-1913 அன்று கேப் உச்ச நீதிமன்ற நீதிபதி சியர்லே என்பவர் ஒரு அதிர்ச்சித் தீர்ப்புக் கொடுத்தார்.

அத்தீர்ப்பின்படி, கிறித்தவர் சடங்குப்படி நடந்து பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே செல்லும் என்பதாகும்.

இச்சட்டத்தினால்...

மணமான இந்துப் பெண்கள் சட்டபூர்வ மனைவி தகுதியை இழந்துவிடுவர்.

கணவன், மனைவி, பிள்ளைகள் - உறவுகள் மறுக்கப்படும் நிலை.

திருமணமான இந்தியப் பெண்கள் வைப்பாட்டிகளாகக் கருதப்படும் நிலை.

மேலும் பதிவுப் பத்திரத்தில் தங்களுடைய விரல்களின் முத்திரைகளைப் பதிக்க வேண்டும் எனும் உத்திரவு.

இனவெறி, நிறவெறி அரசு - மதவெறி அரசாகவும் ஆனது.

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து வந்த பதினாறு வயதுப் பெண் வள்ளியம்மை கொதித்தெழுந்தாள்.

காந்தியடிகள் போராட்டத்தை அறிவித்து, இப்போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார்.

அச்சமயம் வள்ளியம்மையின் தந்தை, உடல்நலக குறைவின் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். வள்ளியம்மையுடன் அவர் தாயார் ஜானகி அம்மையாரும் போராட்டத்தில் இறங்கினார்.

29-10-1913 இல் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு மகளிர் சத்தியாகிரகப் போர்ப்படை புறப்பட்டது.

கஸ்தூரிபாய் அம்மையாருடன் 16 பெண்கள் இப்படையில் இருந்தனர். இதில் 10 பெண்கள் தமிழர்களாவார்.

நியூகாசில் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மகளிர் பைடையின் வேண்டுகோளுக்கிணங்க வேலை நிறுத்தம் செய்தனர்.

போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் எல்லையைக் கடக்கும்போது வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில் 1913 திசம்பர் 22 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. சிறையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகக் கருதினார் வள்ளியம்மை.

நாட்டிலேயே அடிமைகளாய், நாயினும் கீழாய் நடத்தியவர்களின் சிறை எப்படி இருக்கும் ?

கொளை, கொள்ளை, திருட்டுக் குற்றவாளிகளுடன் வள்ளியம்மை சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதுடன், கடினமான வேலைகள் அவரிடம் கொடுத்தனர். தகுதியற்ற உணவு சித்திரவதை ஆகியவற்றுடன் சுகாதாரக்கேடு நிறைந்த சிறை வாழ்க்கை. வள்ளியம்மையை கடுமையான காய்ச்சலில் ஆட்படுத்தியது. தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.

இந்நிலையில் உரிய அபராதத் தொகையைக் கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுபடுக எனக் கூறியும் வள்ளியம்மை கேட்கவில்லை.

உடலநிலை மோசமளித்தது. உடனே சிறையிலிருந்து தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக 11-2-1914 இல் விடுவிக்கப்பட்டார்.

செல்லப்பிள்ளையாய், இன்று புவியில் பெண்கள் சிறு நிலையில் இருக்கவில்லை, விழித்துக் கொண்டார் - எனும் புரட்சிக் கவிஞரின் கருத்துக்கு விளக்கமாய்த் திகழ்ந்து துள்ளித் திரிகின்ற வயதில் பெருமகிழ்வுடன் சிறையேகிய வள்ளியம்மை, சிறையிலிருந்து வெளியேறும்போது எப்படி இருந்தார் ?

மெலிந்து, துவண்டு. கந்தல் துணிபோல, பலவினமாக, அரை மயக்கத்திலிருந்த வள்ளியம்மையை, ஒரு சமக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குச் சுமந்து சென்றனர். என்னே கொடுமை...

அதன்பின் நோயிலிருந்து மீளாமலேயே 23-2-1914 அன்று பதினாறு வயது வீராங்கனை வீரமரணம் அடைந்தார்.

நன்றி : தன்மானக் குரல் - பிப் 2005




நன்றி : காசி ஆனந்தன் ஹைகூ கதைகள்

உய்வு

காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.

" பார்த்தீர்களா ? " நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்.." என்று தன் பெருமயைப் பறைசாற்றியது.

பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.

" நூல் இனி எதற்கு ? " என்று கூறிக் கொண்டே நூலைப் படடென்று அது அறுத்துக் கொண்டது.

கொஞ்ச நேரத்தில்...

ஊரின் மூலையில் - ஒரு முள் மரத்தில் விழுந்தது. கிழிந்து உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.

காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது :

" ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்! "





பாய்ச்சல்

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடாரியும், கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

" இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா ? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது. ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா ? " என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடாரி.

" மரங்கொத்தியால் அது முடியாது " என்றது கயிறு.

" ஏன் அப்படிச் சொல்கிறாய் ? "

கயிறு சொன்னது :

" நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை "





முனைப்பு

காலைப்பனி.

கொக்கும் குருவியும் குளிரால் நடுங்கின.

தங்களுக்குள்ளேயே பேசி அவை ஒரு முடிவுக்கு வந்தன.

" இன்று நான் குளத்துக்குப் போவதில்லை - வேண்டுமானால் மீன் இங்கே வரட்டும் " என்றது கொக்கு.

" நானுந்தான் தோப்புக்குப் போவதில்லை - வேண்டுமானால் பழம் இங்கே வரட்டும் " என்றது குருவி.

பொழுது கரைந்தது.

பசி வயிற்றைக் கிள்ளியது.

நடுப்பகல் தாண்டிய பின்பும் பசியை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் ?

கொக்கு குளத்துக்குப் போனது. குருவி பழத்துக்குப் போனது.

மரத்தில் இருந்த அணில் பாடியது :

" கொக்கைத் தேடி குளம் வராது

குருவியைத் தேடி பழம் வராது "





தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061