இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 30

14 டிசம்பர் 2004


அன்புடையீர். வணக்கம்,

இணைய இதழுக்கு படைப்புகள் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன். தரமான படைப்புகள் வலையேற்றம் செய்யப்படும்.

அழகி எழுத்தாளர் யுனிகோட் எழுத்துருக்களை உருவாக்கியிருப்பது தமிழுக்கு மட்டுமல்லாமல் தமிழம் வலைக்குக் கிடைத்த பேறு. யுனிகோடில் எப்பொழுது தமிழம் வலை வரும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இன்னும் இரண்டு திங்களுக்குள் யுளிகோடில் தமிழம் வலை வருவதைக் கண்டு மகிழலாம்.

வாழ்த்துகள் அனைத்தும் அழகி பா.விஸ்வநாதன் அவர்களையே சேரும். வாழ்த்த விரும்புபவர்கள் vishy@azhagi.com க்கு மின் அஞ்சல் செய்யவும்

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
14 - 11 - 2004



ஆலங்கட்டி மழை

எங்கேயோ விழுந்து
வெடிக்கிறது வெடி.

உறுப்புகள் தெறித்து
திசையெங்கும் பறக்க
எழும்
கடைசிக் கேவலாய்
ஓலமிடுகிறது காற்று.

மின்சாரம் செத்து விழ
எங்கும்
பிணமாய் அழுத்துகிறது இருட்டு.
தொண்டையில் சிக்கிய
உணவுக் கவளம் சிதற
அலறுகின்றன குழந்தைகள்.

கூரையின் பிளவுவழி
விழுகிறது மின்னல்.
உயிரோலம் எழுப்பும் பிள்ளைகளை
அடிவயிற்றில் பொதித்துக் கொண்டு
மேல் கவிகிறார் அம்மா....

விமான இறக்கைகளாய்க்
காற்றைக் கிழித்தவாறு
பனி எறி குண்டுகளைப் பொழிந்து கொண்டு
உணர்ச்சியற்றுப் பெய்கிறது.
அந்நிய தேசத்து
ஆலங்கட்டி மழை.

செந்தில் குமார் - உடுமலைப்பேட்டை



வீடு

வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களைப்
பார்த்துப்
பித்தன் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன்

கூடு கட்டுவதாக
நினைத்துக் கொண்டு
இந்தப் பறவைகள்
கூண்டுகள் செய்கின்றன.
என்றான்.

அவன் மேலும் சொன்னான்.

வீடு கட்டுவதற்கு
மலையிலிருந்து
கற்களைக்
கொண்டு வருகிறீர்கள்.

மலையின் மெளனத்தையும்
உங்களால்
கொண்டுவர முடிந்திருந்தால்...

காட்டிலிருந்து
மரங்களைக்
கொண்டு வருகிறீர்கள்.

காட்டின் சுதந்திரத்தையும்
உங்களால்
கொண்டுவர முடிந்திருந்தால்...

கடலிலிருந்து
சிப்பிகளைக்
கொண்டுவருகிறீர்கள்.

கடலின்
பெருமையையும்
உங்களால்
கொண்டுவர முடிந்திருந்தால்...

நதியிலிருந்து
நீரைக்
கொண்டு வருகிறீர்கள்.

நதியின்
பாடலையும்
உங்களால்
கொண்டுவர முடிந்திருந்தால்...

வெயிலிலிருந்து தப்பிக்க
கூரை கட்டுகிறீர்கள்
அதனால்
நிலவை இழந்து விடுகிறீர்கள்.

புயலைத்
தடுக்கச்
சுவர் எழுப்புகிறீர்கள்.
அதனால்
தென்றலையும் தடுத்துவிடுகிறீர்கள்.

நான்கு சுவர்களால்
நீங்கள்
நான்கு திசைகளையும்
இழந்துவிட வில்லையா ?

உங்கள்
வீடுகளுக்குள் மட்டுமல்ல,
உங்களுக்குள்ளும்
அறைகளைக்
கட்டிக் கொள்கிறீர்கள்

உங்கள் வீடு
மொட்டாகவும்
நீங்கள்
காற்றாகவும்
இருந்திருந்தால்
உங்கள் வாசம்
வாசமாகியிருக்குமே !

உங்கள் வீடு
தாயின் மார்பகமாகவும்
நீங்கள்
ரத்தமாகவும்
இருந்திருந்தால்
நீங்கள்
பாலாகியிருப்பீர்கள் !

உங்கள் வீடு
கூடாகவும்
நீங்கள்
பட்டாம் பூச்சியாகவும்
இருந்திருந்தால்
நீங்கள்
சிறகுகளைப்
பெற்றிருப்பீர்களே !

வீட்டுக்குள்
நுழையும்போது
செருப்புகளை மட்டுமே
உங்களால்
வெளியே விட முடிகிறது.

வெளியே செல்லும் போதும்
நத்தையைப் போல்
வீட்டையும்
சுமந்து கொண்டுதான்
செல்லுகிறீர்கள்.

உங்கள் வீட்டுக்குள்
நுழையும் போதெல்லாம்
உங்கள் ஏக்கம்
உங்கள் வீட்டைத்
தேடுகிறதல்லவா ?

குயில்
கூடு கட்டுவதில்லை..
அதனால் தான்
அது பாடுகிறது.

- அப்துல் ரகுமான் - எழுதிய பித்தன் நூல்.

நன்றி : நேசனல் பப்ளிசர்ஸ், சென்னை 17



கற்கள்

அவன் தலையில் நின்று கொண்டிருந்தான்
எட்டுத் திசைகளிலிருந்தும்
அவனை நோக்கிக்
கற்கள் வீசப்பட்டன.

சிறிது
காலத்திற்குப் பிறகு
அவன் ஒரு குன்றின் மீது நின்று கொண்டிருந்தான்.
அது அவனைத் தாக்கிய கற்களாலானது.

காலம் உருள்கிறது
இப்போது
அவன் ஒரு மலைச் சிகரத்தின் உச்சியில்
நின்று கொண்டிருக்கிறான்.
அவனைத் தொட முயன்றுத்
தோற்று உருள்கின்றன கற்கள்.

ஆனால்
அவன் உயர்ந்து கொண்டேதான் செல்கிறான்...
ஒவ்வொரு கல்லுக்கும்.

செந்தில் குமார் - உடுமலைப்பேட்டை



தீக்குச்சி

தீக்குச்சி
விளக்கை ஏற்றியது.

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.

பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய் ?
என்று கேட்டேன்.

ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்தது அல்லவா ? - என்றான்.

அவன் மேலும் சொன்னான்.

தீக்குச்சிதான்
பிரசவிக்கிறது
விளக்கோ
வெறும் தொட்டில்.

தீக்குச்சிதான்
எழுதுகிறது
விளக்கோ
வெறும் காகிதம்.

தீக்குச்சி
பிச்சை போடுகிறது.
விளக்கோ
வெறும் பிச்சைப் பாத்திரம்.

தீக்குச்சி ஒரே வார்த்தையில்
பேசி விடுகிறது.
விளக்கோ
வளவளக்கிறது.

தீக்குச்சி
ஒளிக்காகத் தன்னையே
தியாகம் செய்து கொள்கிறது.
விளக்கோ
ஒளியினால் பிழைக்கிறது.

நீங்கள்
உங்கள் தீக்குச்சிகளைக்
கொண்டாடுவதில்லை..
விளக்குகளையே
கொண்டாடுகிறீர்கள்.

அதனால்தான்
உங்கள் திருவிழாக்கள்
இருட்டாகவே இருக்கின்றன.

நீங்களும்
தீக்குச்சியாக இருக்க
விரும்புவதில்லை.
விளக்காக இருக்கவே
விரும்புகிறீர்கள்.

அதனால்தான்
சூரிய வேளையில்
நீங்கள்
அணைக்கப்பட்டு விடுகிறீர்கள்.

இதோ, இந்தக்
குச்சியிலிருந்து புறப்படும்
அமர ஒளியை
உங்களால்
காண முடிந்திருந்தால்
உங்கள் ஆடம்பர விளக்குகளின்
பிரகாசத்தில்
உங்கள் கண்
குருடாயிருந்திருக்காது.

- அப்துல் ரகுமான் - எழுதிய பித்தன் நூல்.

நன்றி : நேசனல் பப்ளிசர்ஸ், சென்னை 17



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061