இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 29

14 நவம்பர் 2004


அன்புடையீர். வணக்கம்,

தமிழுக்கும் நம் தமிழ் மக்களுக்கும் நாம் செய்ய வேண்டியன நிறைய உள்ளன. நேரமும், பொருளாதாரமும், நண்பர்கள் தொடர்பும் கிடைத்தால் திட்டமிட்டதைச் செவ்வனே செய்ய இயலும்.

1. உலகம் முழுவதும் வாழுகிற நம் தமிழ்க் குழந்தைகளுக்கான அயற்சொற்களற்ற, இசையுடன் கூடிய, எளிமையான, முப்பரிமாண அசையும் படத்தொகுப்புடன் கூடிய - மொழிகற்பிக்கிற, பண்பாடுகளைக் கற்பிக்கிற, தமிழின் பெருமையை உணர்த்துகிற - குறுவட்டுகள் வேண்டும்.

2. உலகம் முழுவதும் வாழுகிற நம் தமிழ் மக்களின் நுட்பமான கலை, இலக்கிய, அறிவியல், பண்பாட்டுப் பதிவுகள் திரட்டப்பட்டு, பதிவாக்கப்பட்டு, பாதுகாக்கப் பட்டு, பின்வரும் தலைமுறையினர் கண்டு வழி தொடர்வதற்கேற்றவாறு முறைபடுத்தப்படவேண்டும்.

3. உலகம் முழுவதும் வாழுகிற நம் தமிழ் மக்கள் தன்னலம் மிகுந்து சுருங்கிப் போகாமல், வேறுபாடுகளுக்குள் மூழ்கிப் பிரிந்து நிற்காமல், அன்போடு, புரிந்துணர்வோடு ஒன்றிணையத் திட்டமிட வேண்டும்.

4. உலகம் முழுவதும் வாழுகிற நம் தமிழ் மக்கள் பொருளாதார வளர்ச்சியில் மேலெழுந்து - "தொடர் உழைப்புகளுடன் கிளர்ந்தெழுகிற", பகுத்தறிவும், அறிவியலும் இணைந்த தமிழ்க் குமுகாயத்தைக் கட்டமைக்கிற பணிகளுக்காகப் பாடுபடவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் நமக்கான துறைகளில் தமிழ் உணர்வோடு செயலாற்றுவோம். அனைவரது உழைப்பும் ஒன்றுசேர அது மா மலையாகும். திட்டமிடுவோம். வெற்றி பெறுவோம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
14 - 11 - 2004



சங்க நூல்களைச் சாகாது வழங்கிய உ.வே.சா.

அக்காலத்தில் இருந்த ஏடுகளின் படி கிடைப்பது அரிதாக இருந்தது. உ.வே.சா.பட்ட துன்பங்கள் பல். திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து, அதைப் பெறுவதற்குப் பல மைல் நடந்திருக்கிறார். இராமாயணம் ஏழு காண்டங்களும் மாயூரத்தில் ஒரு கடையில் இருந்ததைக் கண்டு உடனே அதன் விலைக்காகும் தொகையைப் பெற்றுவரத் திருவாடுதுறைக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

அரிதான ஏடுகளுங்கூட முறையாக அழிக்கப்பட்டு வந்த விதத்தையும் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார். அவர் பழைய தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சென்றபோது, வரகுண பாண்டியன் வைத்திருந்த ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருக்கின்றன என்று கேள்வியுற்று வினவியபோது, அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ஒருவர், "குப்பைக் கூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூளங்களை யெல்லாம் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாத்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்து விட்டார்கள்" என்று கூறினார்.

அதைக் கேட்ட உ.வே.சா -விற்கு ஒன்றும் புரியவில்லையாம். என்ன செய்து விட்டார்கள் - என்று பதட்டத்துடன் கேட்டாராம்.

பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து. ஹோமம் செய்து விட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள் - என்றார் அவர்.

ஆ - என்று தம்மையும் மறந்து அலறினார் உ.வே.சா. குழி வெட்டி அக்னி வளர்த்து, நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள். என்றார் அவர். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தை அல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும் - என்று கோபமாக வந்தது என்று உ.வே.சா. வேதனையை வெளியிடுகின்றார்.

ஆகமத்தின் பெயரால் வளர்ந்த அறியாமை, நெய்க்கு மட்டுமேயன்றித் தமிழுக்கே அழிவை உண்டாக்கியதை இது காட்டும். பழைய சுவடிகள் சிதிலமான நிலையில், அவற்றை புதிய படி எடுத்துக் கொண்டு, பழையனவற்றை ஆகுதி செய்வது வழக்கம். பிற்காலத்து மேதாவிகள், படி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள் என்னே பேதமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகத்திலிருந்து மறைந்தன என்றும் அது முதல் என் உள்ளத்தில் அமைதியில்லாமற் போயிற்று. இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா? என்றும் எழுதியுள்ளார்.

மற்றோர் இடத்திற்குச் சுவடி தேடிச் சென்றபோது அவருக்குக் கிடைத்த பதில் இது.

எங்கள் வீட்டில், ஊர்க்காட்டு வாத்தியார் சுவடிகள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுது பட்டு ஒடிந்து போய்விட்டன. பயனின்றி இடத்தை அடைத்துக் கொண்டிருந்த அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்க்கவும் எனக்குத் திறமை இல்லை. அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இக்காலத்தில் இவற்றைச் சுமந்து கொண்டிருப்பது என்ன பயன் என்றெண்ணினேன். ஆற்றிலே போட்டு விடலாமென்றும், ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போல் கட்டி ஆற்றிலே விடுவது முறையென்றும் சில முதியபெண்கள் சொன்னார்கள். நான் அவற்றை அவ்வாறே ஓர் ஆடிப் பதினெட்டாந்தேதி அவற்றை வாய்க்காலில் விட்டு விட்டேன்.

இதைக் கேட்டு, தமிழின் பெருமையைச் சொல்லிய சிலர், அது நெருப்பிலே எரியாது நின்றதென்றும், நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டியிருக்கிறார்கள். அதே தமிழ் இன்று நெருப்பில் எரிந்தும், நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய்விட்டார்கள். பார்த்து இரங்குதற்கு நாம் இருக்கிறோம் - எனக் கூறிக் கண்ணீர் விடுகிறார் உ.வே.சா.

மற்றொரு கவிராயரிடத்தே சென்றபோது, அவர் சிலப்பதிகாரம் என்று சொல்லக்கூடாது, அவர் சிறப்பதிகாரம் என்றுதான் கூறவேண்டும் என்று உரைத்ததோடு, அதைக் காட்டுமாறு கேட்டபோது, அவ்வளவு சுலபமாகக் காட்ட முடியுமா? இப்போதெல்லாம் அவற்றைத் தொடலாமோ! சரசுவதி பூசையில்தான் அர்ச்சனை பண்ணிப் பூசை செய்து எடுக்கவேண்டும். என்றும் கூறினாராம். இவ்வாறு பூசை மனப்பாங்கு வளர்ந்து, அறிவுக்குத் தடை விதித்து அர்ச்சனை என்னும் பெயரால் சுவடிகள் அரிக்கப்பட்டு வந்ததை இது காட்டும்.

மற்றொரிடத்தில், ஏட்டுச் சுவடிகளின் (ஓலை தொடுக்கும்) கயிறுகளை எல்லாம் உருவி எடுத்துக் கொண்டு ஒரு கயிற்றில் பல சுவடிகளைக் கட்டியிருந்தார்கள். சுவடிகளைக் காட்டிலும் கயிறுதான் அவர்களுக்குப் பெரிதாகப்பட்டது. கணக்குச் சுருளைகளும் கம்ப இராமாயண ஏடுகளும் கலந்திருந்தன - என்று உ.வே.சா கூறுகிறார்.

இவ்வாறு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பழந்தமிழ் ஏடுகளைப் பதிப்பித்து வெளியிடும் விருப்பம் கொண்ட உழைப்பு சிறிதன்று.

ஏடு தேடும் முயற்சியில் நாடெங்கும் உள்ள கவிராயர் வீடெல்லாம் ஏறி இறங்கவேண்டும். வேண்டிய ஏடு கண்டபோது அதை உரியவரிடமிருந்து பெறுவதும் எளிதாக இராது. ஒரு நூலைப் பதிப்பிக்கும் முன் கிடைத்த சுவடியை வேறு பல சுவடிகளோடு ஒப்பு நோக்கிக் காணவேண்டும். அவ்வாறு நெடிய பலப்பல இரவுகள் கண் விழித்திடவும் வேண்டும். ஒப்பு நோக்குமிடத்துப் பாட வேற்றுமை தோன்றின், சரியான பாடத்தைத் தெளிய, உரையும் தெளிய வேண்டும். பழைய உரையுள்ள ஏடெனில் உரையில் ஆளப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை உரிய நூலும் இடமும் காட்டிக் குறிக்க வேண்டும். இவ்வாறு ஒப்பு நோக்கி ஆராய்ந்து மூல பாடம் இதுவெனவும், முறையான உரை இதுவெனவும் முடிவு கட்டிப் பாட வேறுபாடும் குறிப்புத் தந்து அச்சியற்ற முற்படும்போது, அச்சுப்பிழை மலியாதவாறு பரிசீலித்த வண்ணம் இருக்கவேண்டும். அச்சு இயற்றியவுடன் விலைக்கு வாங்கத் தக்காரிடத்தே முன்னமே ஒப்பமும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு பணியும் இடையூறின்றியே நிறைவேறிடுமா? வரும் இடையூறுகளைத் தாங்கிக் கொள்ள உரமும் வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நூலையும் முற்ற முடித்து வெளியிடுதல் அரிய செயலன்றோ?

உ.வே.சா முதன் முதல் பதிப்பித்த இலக்கியம் சீவக சிந்தாமணி. அதைப் பதிப்பிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் அருமையை அவர் எழுதிய இக்குறிப்பால் உணரலாம்.

நன்றி : பெற்றோர் ஆசிரியர் கழகச் செய்தி மடல் - ஏப் 2001



கல்விச் சிந்தனைகள்.

(o) பொருத்தமான பொறுப்புகள் கிடைத்துவிட்டால் மனிதர்கள், "மாமனிதர்கள்" ஆகிவிடுகிறார்கள்.

(o) என்ன திறமை இருந்தால் என்ன, ஒரு முன்கோபம் போதும் - வகுப்பறையின் முகத்தில் கீறல்களை உண்டுபண்ண.

(o) அனாவசியத் தலையீடு இல்லாவிட்டால் - வாழ்க்கை, வகுப்பறை இன்பமாகத்தான் இருக்கின்றன.

(o) வகுப்பறை என்பது கூட்டு முயற்சி. ஒரு கூட்டிசை. கூட்டிசை கேட்காத இடங்களில் கொசுக்களின் ரீங்காரம் தலை தூக்கும்! கூடவே - கொசுவை விரட்டும், கைதட்டல் ஓசையும்.

(o) வெற்றி - தோல்வி, அன்பு - நட்பு, எழுச்சி - வீழ்ச்சி, அனைத்தும் கலந்த ஒரு உயிருள்ள சந்திப்புதான் வகுப்பறை.

(o) ஆசிரியருக்கு நூறு முகம் வேண்டும். வகுப்பறைக்கு நூற்றுக் கணக்காய் கண்கள் வேண்டும். எதற்கு? ஒவ்வொரு மாணவரையும் பார்ப்பதற்கு, கண்டுபிடிப்பதற்கு.

(o) ஓர் ஆசிரியர் காயப்படுத்தாமல் இருந்தால் மட்டும் போதுமா? கண்டு பிடித்து மருந்து போட வேண்டாமா?

(o) நடிப்பைப் போல கற்பனை நிறைந்த பணி ஆசிரியர் பணி. ஆசிரியர் புதிய புதிய தோற்றம் எடுக்கவேண்டும். கூசி ஒடுங்கவும் கூடாது. இறுகிப் போய் விடவும் கூடாது.

(o) பூட்டிய வாய்களும், அவற்றின் உறைந்த மெளனமுமே வகுப்பறையின் இலக்கணமாகியுள்ளன.

(o) பொருளுடைய உரையாடலுக்குப் பதிலாக, ஆசிரியரின் ஒற்றைக் குரலே வகுப்பறையின் முதன்மையாக உள்ளது.

(o) வீட்டுக்குள் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும். பள்ளிக்கூடத்துக்குள் ஒரு வீடு வேண்டும். இதயமுள்ள வீடு.

(o) வகுப்பறைக்கு வெளியே நிகழும் சந்திப்புகள், வகுப்பறை நட்பைக் கெட்டிப்படுத்துகின்றன.

(o) ஒவ்வொருவரும் வெளிப்பட ஒரு சந்தர்ப்பம் வேண்டும். வெளிப்படும் போது காண்பதற்குக் கண்கள் வேண்டும்.

(o) பூக்கள் அனைவரது கண்களிலும் படுகின்றன. செடியாகவும், வேராகவும், மண்ணாகவும் அமைந்த பல திறமைகள் தாங்கள் கவனிக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கின்றன.

(o) திணிப்பதல்ல கல்வி, வசப்படுத்துவது அல்ல கல்வி, பங்கேற்க வைப்பது கல்வி, உருவாக்குவது கல்வி.

(o) புத்தகங்களில் நிறையக் கற்ற ஆசிரியருக்கும், மாணவரிடம் கற்க வேண்டிய அனுபவம் எப்போதும் பாக்கி இருக்கிறது. தீராத கடன் போல.

நன்றி : ச.மாடசாமி எழுதியுள்ள "எனக்குரிய இடம் எங்கே?" நூல்



தெலுங்கு கவிதை

கவிஞனின் மனைவி

மந்தரப்பு ஹேமாவதி

தமிழாக்கம் - புதிய மாதவி.

உன் காதலின் பரிசு
நித்தமும் எனக்குப்
புத்தம் புது மலர்களாய்.
அப்போதெல்லாம்
பார்க்கும் பொருள்களில் எங்கும்
கவிதையின் சாயல்.

இன்று காதலி மனைவியானாள்
வசந்த காலத்தில்
பாடிக் கொண்டிருந்த குயில்
இதோ
பறந்து சென்றுவிட்டது.
கவிதை
உரைநடை ஆகிவிட்டது.

அழுக்குப் பாத்திரமும்
அழுக்கான துணியுமே
கவிதையின் கருப்பொருளாய்
வீட்டுச் சிறையில் நான்.

மின்னும் வசீகரமில்லாத
என்னிடமிருந்து
விலகியிருக்வே
நீ
விரும்புகின்றாய்.

என் வட்டம்
சுருங்கி விட்டது.
நான்கு சுவர்களுக்கு நடுவில்
வீட்டின் காவலாய்
உன் கைகளில் தேநீராய்
காத்திருக்கின்றேன்.

நீ
உன் நண்பர்களுடனும்
உன் சனங்களுடனும்
தெருவில்
வலம் வருகின்றாய்.

வீட்டுக்கு வந்ததும்
இப்போதெல்லாம்
நீ கேட்பது
என்ன சமையல் ?
என்பது மட்டும்தான்.
மறந்தும்கூட
நீ பேசுவதில்லை
என்னிடம்
இலக்கியம் பற்றி.

இப்படியே
எத்தனை ஆண்டுகள்
உன் ஆயாவாய்
உன் தாதியாய்
குழந்தைக்கு ஆசானாய்
என் நாட்கள்
பறந்து விட்டன.
உன் காலைத் தேநீரிலும்
இரவுப் படுக்கையிலும்!
ஆனாலும்
நீ
அதிகம் வெந்த அரிசியிலும்
அடுப்பில் தீய்ந்த கறியிலும்
என் மனைமாட்சி
மங்கிவிட்டதாக
முகம் கோணுகின்றாய்

சமைத்தல்
ஊட்டுதல்
துவைத்தல்
துடைத்தல்
இதுவே நானாகி
இதிலேயே
முடிந்துபோன
என் வாழ்க்கையில்
சின்னதாக
ஓர் ஒளிக்கீற்று
என் வாசிப்பு.

வாழ்க்கையின் ஓட்டத்தில்
எனக்காகச் சிலநேரம்
நித்தமும்
வாசிப்பு மட்டுமாவது
வசப்பட வேண்டும்
புத்தகம்
தாயைப் போல
என் இதயக் கதவுகளை
தன் பக்கங்களால்
தட்டிக் கொடுக்கின்றது
தாலாட்டுப் பாடுகின்றது.

நான்
என்
எழுதுகோலை எடுத்து
தட்டுத் தடுமாறி
கவிஞர்களின் வரிசையில்
என் பெயரையும்
எழுதிடும் நேரம்
இதோ... அழுகுரல்
குழந்தையின் அழுகுரல்

நீ
எழுதிக் கொண்டிருக்கின்றாய்
வானொலிக்கு கவிதையோ..
புத்தக விமர்சனமோ..
எதையோ
எழுதிக் கொண்டிருக்கின்றாய்.

உன் பார்வையில்
என்னைத் தண்டிக்கும்
இரக்கமற்ற
உன் சாபங்கள்.

என் கைகள்
தானாகவே
நழுவவிடுகின்றன
எழுதுகோலை.

என் கைகள்
அழுகின்ற குழந்தைக்கு
தொட்டிலாகின்றன.

நான்... இனி
கவிதைப்பெண் கமலாதாசாக
ஆகவே முடியாதா...?
முடியாது..

ஏனென்றால்
நான்
கவிஞனின் மனைவி.

நன்றி : திசையெட்டும் - மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ் அக்-டிச 2004


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061