|
இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 27
15 அக்டோபர் 2004
அன்புடையீர். வணக்கம்,
தமிழம் வலையைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேயிருப்பது மகிழ்வாக
இருக்கிறது. இன்னும் நிறைய செய்திகளைத் தரவேண்டும் என்கிற நினைவு மேலெழுகிறது. இணையத்தில்
உள்ள குறை நிறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். உங்கள் மடல்கள் எங்களை வளர்த்தெடுக்கும்.
பெங்களூரில் வாழுகிற திரு உமா மகேஸ்வரன் அவர்கள் உதவியால் கடந்த 9-10-2004 அன்று சொக்கன்.
ஜகந்நாதராஜா, வேதகுமார் போன்ற நண்பர்களைச் சந்திக்கவும் கிடைத்தற்கரிய சிறுவர் இதழ்கள், இலக்கிய
இதழ்களைத் (கிடைத்தற்கரிய 29 இதழ்களை) திரட்டவும் முடிந்தது. எமது பயணத்தில் அவரது பங்கு மறக்க
முடியாதது.
இந்த வலையேற்றத்திலிருந்து தமிழும் கணினியும் என்கிற புதிய பகுதியானது அறிமுகப் படுத்தப்படுகிறது.
பத்ரி, சொக்கன், உமா மகேஸ்வரன், வேதகுமார் போன்ற நண்பர்களோடு பெங்களூரில் கலந்துரையாடிய பொழுது
தோன்றிய எண்ணமே இது.
1990 களில் 286 கணினியை Dos வழி இயக்கிய பொழுது தமிழில் எழுத்துருக்களை இலவசமாக அனுப்பி
"தமிழ் வளர்ச்சிக்கு இயங்குபவர்களுக்கு இலவயமாகவே அனுப்புகிறேன்" - என்று அனுப்பிய "திரு" "நளினம்"
"ஆதமி" போன்ற எழுத்துருக்களை ஆக்கியவர்கள் நெஞ்சில் நிலைத்திருப்பவர்கள். இன்றைய தலைமுறையினருக்கு
இது பற்றித் தெரியவில்லை. எனவே இப் பகுதியில் தமிழ் வளர்ச்சிக்காகக் கணினிவழி உழைத்த அனைவரையும்
வரிசைப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மென்பொருள்கள், குழந்தைகளுக்கான குறுவட்டுகள் எனக் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு,
உருவாக்கிய அனைவரையும், உருவாக்கிய பொருள்கள் பற்றிய விளக்கத்தையும், பயன்பாட்டையும்
இப் பகுதியில் வரிசைப்படுத்துவோம். தங்களுக்குத் தெரிந்த இது தொடர்பான செய்திகளை அனுப்பி உதவவும்.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 30 - 9 - 2004
சன்னலோர சீட்டில்
அயர்ந்து கண் உறங்கும்
என்னை
உரிமையோடு தலைமுடி
பற்றி உலுக்கி
எழுப்பியது முன் சீட்டிலுள்ள
விளையாட்டுக் குழந்தை.
- சந்தியூர் கோவிந்தன் -
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|