இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 25

15 செப்டம்பர் 2004


அன்புடையீர். வணக்கம்,

தமிழம் வலை பற்றிய குறிப்பினை தமிழ் கம்ப்யூட்டர் (செப்1-15) இதழில் திரு. சந்திரன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். எழுதிய சந்திரன் அவர்களுக்கும் வெளியிட்ட தமிழ் கம்யூட்டர் இதழாளர் திரு. க. ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடிய விடிய இரவு இரண்டு மணிவரை கூட கணினியின் முன் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்ததற்கு வாழ்த்துவதாக தமிழ் கம்ப்யூட்டர் இதழில் அறிமுகம் செய்த நண்பர்களை அன்போடு வணங்குகிறேன். வாழ்த்துகிறேன்.

இன்று (12-9-04) தமிழம் வலை நூலகம் காண சரஸ்வதி இதழாளர் திரு. விஜயபாஸ்கரன் அவர்கள் வந்திருந்தார். வானம்பாடிக்கு அடுத்ததாக " டமாரம் " இதழைக் குறுவட்டில் பதிவுசெய்தாகி விட்டது. 1950 களில் எட்டு வருடங்கள் தரமாக நடந்த " சரஸ்வதி " இதழைக் குறுவட்டு ஆக்கும் பணியைத் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். இரண்டாண்டுத் தொகுப்பினை ஒரு குறுவட்டில் பதிவுசெய்து முடித்துவிட்டேன். வெளிநாடுகளில் வாழுகிற இலக்கியவாதிகள் ஆர்வலர்கள் குறுவட்டு வெளியீட்டிற்கான உதவி செய்யலாம். தொடர்ந்து தயாரிக்கும் ஒவ்வொரு குறுவட்டினையும் ஒரு நாட்டில் வெளியிட விரும்புகிறேன். ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
15 - 9 - 2004




உனக்காகவே !

யாழெடுத்து நீயிசைத்த இசைகேட்டு என் செவி குளிர்ந்து
யான் உறக்கம் மறந்த வகை சொன்னேன் அறிவாயோ ?

தேனெடுத்து நீ புனைந்த உன் வாய்மொழி கேட்டு என் சுவையரும்பு
தேய்ந்திங்கு உணவின் சுவை மறந்து உடல் மெலிந்த நிலை அறிவாயோ ?

குளிரெடுத்து உன் பார்வை வீசிய அந்த இளந்தென்றல் என் மேனி தொட்டு
கூதல் ஏறி என் உடல் நடுங்க நான் போர்த்த ஓர் நிலவரம் அறிவாயோ ?

விழியெடுத்து நீ தொடுத்த அம்பு என்னெஞ்சத் துளைத்தொரு காயம்
விளைத்து யான் வேதனையில் துடித்ததந்த கதை அறிவாயோ ?

காலெடித்து நீ நடந்த அடி ஒவ்வொன்றும் என்னிதயத்தின் மீது
காலத்தால் அழியாச் சுவடுகளை ஆக்கியதொரு கதையறிவாயோ ?

நாளெடுத்து உன் எண்ணம் என் காதொடு நீ சொல்ல நேர்ந்தாலும்
நானிந்தப் புவியினிலே வாழ்வெடுத்து காத்திருப்பேன் அறியாயோ

சத்தி சக்திதாசன்
sakthithasan@bt.com




மலேசியாவில் வாழுகிற முத்தம்மாள் என்பவர் இலக்கிய நண்பர். நூல்கள் எழுதியவர். மலேசியாவில் குடிபெயர்ந்த மக்களின் இன்னல்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி வருபவர். அங்குள்ள மக்களிடம் வாய்மொழியாக உலவி வருகிற தாலாட்டு ஒப்பாரி போன்ற பாடல்களைத் தொகுத்து வருகிறார். இவர் ஒரு கட்குடியனின் பாடலாகத் திரட்டிய இப்பாடலை நமது இணைய தளத்திற்கு அனுப்பியுள்ளார்.

கள்ளு குடித்த வெறியிலே
கண்ணும் மண்ணும் தெரியலே
உட்டான் பாரு லெப்டிலே
உழுந்தேன் பாரு சேத்திலே
தூக்கி விட்டான் மேட்டிலே
"தெரிமா காசி" சொல்லலே
திருப்பி உட்டான் ரைட்டிலே
திருந்திப் போனேன் ரூட்டிலே.

( "தெரிமா காசி" என்பது மலாய் மொழியில் நன்றி என்பதைக் குறிக்கும்)



தம்பி கேக்காமலேயே
வீட்டுப் பாடத்திற்கு
உதவியிருக்கிறேன்....

அப்பா சொல்லாமலே
அவரின் ஆடைகளை
அடித்துத் துவைத்திருக்கிறேன்.

அம்மாவே
எதிர்பார்த்திராதபடி
விடியலுக்கு முன்பாகவே
சமையலை முடித்திருக்கிறேன்...

ஆனால்
அம்மாவும் யோசிக்கவில்லை
அப்பாவும் ஆராயவில்லை
வயதின் எண்ணிக்கைகளைச்
சுமந்தபடி
காலம் கடத்தும்
என்னைப்பற்றி.

- கவியோவியத் தமிழன்.
நன்றி : சாம்பலாடை நூல்.



குறும்பாக்கள்

(o) விருந்தில் கேட்டனர்
"ரைஸ்"..."ரைஸ்"...
தமிழுக்கு வாய்க்கரிசி.

(o) சேர்நதிருந்தும்
தனித் தனியாய்
மணல்மாந்தன்.

(o) குளத்து நீரும்
துள்ளிக் குதிக்கும்
மழைப்பாட்டு கேட்டு

(o) கொலைக் கருவியோடு
கடவுள்கள்
பலி ஆடாய் மாந்தன்.

(o) பாறாங்கல்
பட்டாம்பூச்சி சிறகில்
பாடத்திட்டம்.

(o) மதம் பிடித்தது
யானைக்கு
நாமம் போட்டதும்.

(o) அன்னை இல்லம்
பெற்றோர் இருப்பதோ
முதியோர் இல்லம்.

(o) வட்டிக் கடையில்
அடங்கிப் போனது
மகளின் கொலுசொலி.

(o) இலவச மனைப்பட்டா
வாங்குகிறான்
மண்ணின் மைந்தன்.

(o) அயல்நாட்டுத் துணி
விற்பனையகம்
வ.உ.சி.திடலில்.

- புதுவை தமிழ் நெஞ்சன்
நன்றி: பதுங்குகுழி நூலில்



வாழத் தெரிந்தது யாருக்கு ?

ஆயிரம் பறவைகள்
என்னைத் தாண்டி
பறக்கின்றன..
நானோ
அண்ணாந்து பார்க்கிறேன்.

நாம் அனைவரும் ஒரே இனம்
பிறக்கும் போதும்
பறக்கும் போதும்
சேர்ந்தே வாழ்வோம் - எனச்
சிறகு விரிக்கும் பறவைகள்.

நான்
பக்கத்தில் நடந்து வரும்
இரு மனிதர்களைக்
காண்கிறேன்...

இனம் வேறு, சாதி வேறு,
உன்னுடன் வாழ்வது எவ்வாறு ?
மனம் சுருங்கும் மனிதர்கள்.

வெளிச்சம் சுமந்து
விடியலை நோக்கி...
பறவைகள்.

பகைமை சுமந்து
இருளை நோக்கி..
மனிதர்கள்.

வினோதன், கொடா
நன்றி : செம்பருத்தி கவிச்சோலை சூன் 2004



ஏளனம்

விளையாடியது
வீட்டில் குழந்தை.

கல்லை வைத்துச்
சாமி என்றது.

கையில் எடுத்த கயிற்றை
மாலை ஆக்கியது.

அக்கா கிழித்த பேப்பரை
விரித்து இலையாகப் பாவித்தது

உடைந்த பாட்டில் மூடி
ஆரத்தித் தட்டாம்.

மனத்தில் குழந்தையாகி
வெள்ளையாக உருண்டையாக இருந்ததை
ஆவலோடு கேட்டேன்
" கற்பூரமா ? "

ஏளனமாகப் பார்த்துச் சொன்னது.
" இதுகூடத் தெரியாதா
சாக்பீஸ் "

பொன். குமார்.
நன்றி : இன்று - நூல்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061