|
இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 24
31 ஆகத்து 2004
அன்புடையீர். வணக்கம்,
சென்ற முறை வலையேற்றுவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. ஒரு வாரம் சென்னை செல்ல வேண்டியிருந்ததால்
பூட்டிய அறைக்குள் எலி நுழைந்து கணினியின் இணைப்புகளைக் கடித்துக் குதறிவிட்டது. வந்து பார்த்தால்
துண்டு துண்டாக ஒயர்கள். தொலைபேசியில் கணினியைச் சரிசெய்யும் நண்பர் மகேசுடன் தொடர்பு கொண்டால்,
சின்ன ஒயர்தானே பரவாயில்லை. மதர்போர்டிலிருந்து அதைப் பிடுங்கிவிட்டு, திருப்புலியால் தொட்டுக்கொண்டே
வாருங்கள் கணினி இயங்கும் என்றார். அதுபோலவே நீட்டிக் கொண்டிருந்த இரண்டு கம்பிகளைத் தொட்டபோது
காற்றாடி சுழன்று கணினி இயங்கியது(இன்று வரை அதே நிலைதான்).
கணினியை இயக்கி இணையத்திற்கு இணைப்புத் தந்தால் தமிழம்.வலைக்குள் செல்ல மறுக்கிறது. தலை சுற்றியது.
இணையதளம் தந்து உதவிய நெட்சாப்ட் ஆன்லைன் திரு அரவிந்தசாமியிடம் உடனே தொடர்பு கொண்டேன்.
அவர் சிறிது நேரத்தில் ஓராண்டுக்காலம் முடிந்துவிட்டது. இனிப்புதுப்பிக்கவேண்டும். நாளை செய்து விடுகிறேன்
என அன்போடு கூறினார். அடுத்து என்ன செய்வது ? ஒன்றுமே புரியவில்லை. வலையேற்ற வேண்டிய
அனைத்தையும் குறுந்தகடில் பதிவு செய்தேன். நாளை சென்னை செல்லும் பொழுது அங்கிருந்து வலையேற்றம்
செய்யலாம் என்று முடிவுசெய்தேன். எனவே 15 ஆம் தேதி வலையேற்ற முடியவில்லை.
திரு அரவிந்தசாமி 17 ஆம் தேதி இணையத்திற்கான புதுப்பித்தலைச் செய்துவிட்டார். அப்பொழுது நான்
சென்னையில் இருக்கிறேன். 18 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு சென்னையிலுள்ள அழகி விஸ்வநாதன்
அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவரது உதவியால் 6,30 மணிக்கு அவரது கணினியிலிருந்து தமிழம்.வலை
வலையேற்றம் செய்யப்பட்டது. இணையதளத்திற்கு அடித்தளமாக இருக்கிற இந்த நண்பர்களுக்கு நான் என்றும்
கடமைப்பட்டுள்ளேன்.
16, 17 ஆகிய இரண்டு நாள்களிலும் இணையதளம் இயங்காது இருந்திருக்கும். பார்வையாளர்கள் அருள்கூர்ந்து
பொருத்தருள்க.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 30 - 8 - 2004
ஒன்றை நீ முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டால்
அதிலிருந்து உன்னால் விடுபட முடியாது - ஓசோ -
துளிப்பாக்கள்
(o) சேரி எங்கும் குடிசை
ஒரே ஒரு கட்டிடம்
கோயில்.
(o) கூட்டம் கூடக் கூட
தொலைந்து போனது
மாந்த நேயம்.
(o) கடைத் தெருவில்
வாங்குபவரைத் தேடுகிறது
புல்லாங்குழல்.
(o) உள்வாங்கும் விழிகள்
நடனமிடும் விரல்கள்
தாளில் கவிதை.
(o) ஓவியக் கண்காட்சியில்
அழகாக இருந்தது
ஒட்டடை
(o) காலையில் உயிருடன்
மாலையில் உயிரின்றி
தொட்டி மலர்கள்.
(o) ஊர் மக்களிடம்
சிக்கித் தவிக்கிறது
கோயில் தேர்.
(o) நகைக் கடையில்
விலையின்றிக் கிடைத்தது
மழலையின் புன்னகை.
நன்றி : செந்தமிழினியன்,
நூல் : தூறல் விண்ணப்பம்.
(o) காண்கையில்
குமட்டுகிறது
மேய்ச்சல் பார்வை.
(o) தேவைப்படின்
ஆய்தம்
காலனி.
(o) நாய் தின்னக்கூடாதாம்
காக்கைக்கு வைத்தனர்
படைத்த இலை.
(o) தமிழ் நாட்டில்
சாகும்வரை பட்டினி
தமிழில் கல்வி.
(o) மாந்தப்பயிர் வளர
களை... களை...
காதி.
(o) நகரத்தில்
அதிக விலைக்கு
பானை சோறு.
(o) தலையாட்டி முறைக்கும்
ஓணான்
கல்லால் அடித்தும்.
(o) ' இலவசம் '
கூடாது
புத்தகம் - அறிவுரை.
(o) நாமாவோம்
மூன்று குரங்கு பொம்மை
தொலைக்காட்சி.
(o) போர்த்தினால் புழுக்கம்
எடுத்தால் கொசுக்கடி
பணச் சிக்கல்.
(o) நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலி.
(o) ஆசிரியர்கள்
குப்பை கொட்டுகிறார்கள்
ஆங்கிலப்பள்ளி.
(o) மூடநம்பிக்கையைத்
தடை செய்வோம்
திரைப்படம்.
நன்றி : ஆலா.
நூல் : உயிர்வேலி.
(o) மரத்தடியிலும்
குடிசைக்குள்ளும்
மழைநீர் சொட்டு.
(o) கூரை வீடு
மண்சுவரில் ஓவியம்
மூட்டைப்பூச்சி நசுக்கல்.
(o) கைதிக்கும்
வீட்டிற்கும்
வரிசை எண்.
(o) தள்ளி நிற்கும் பேருந்து
நிழற் குடையில்
தலைவர் பெயர்.
(o) வித விதத் தழைச்சத்து
தின்ன ருசிக்கும்
வெள்ளாட்டுக் கறி.
(o) விலை கொடுத்து
எந்திரம் வாங்கினர்
ரூபாய் நோட்டடிக்க.
(o) குன்றின் மேல்
பணப்பயிர்
கோயில்கள்.
நன்றி : டி. ராஜேந்திரன்,
நூல் : இன்று பவுர்ணமி.
உரைவீச்சுகள்
அசல் முகங்கள்
அந்தத் தெருக்கோடிக்கப்பால்
ஓடைக்குப் பக்கத்தில்தான்
எல்லாம் முடிந்தது.
அம்மாவின் உயிர் பிரிந்த
கடைசி இரவில்
மரணத்தின் குதறல் கண்டேன்.
தெருவின் புளியமரத்தோடு
நின்று விட்டது
அழுகையில் மிதந்த
அக்காவும் அண்ணி சகிதமான
பெண்கள் கூட்டம்.
வாழ்வின் முழுப் பாரமும் சுமந்தபடி
அப்பா நடந்து வந்தார்.
கூட்டத்து நடுவில்.
பூந்தேர்
ஆடிக்குலுங்கியபடி...
தூக்கிக் கொண்டு நடந்தவர் தடுமாற்றம்
எல்லோரும் செத்துத் தெலையலாம் போலிருந்தது.
எங்களை
இன்னும் உயிருடன் சுமந்தவாறு
அம்மாவின் உறக்கம்.
உடைந்து சிதறிய அழுகையை
மிதித்துக் கொண்டு
மூத்தாள் மண்தள்ள
தயக்கமாய் விழுந்தது மண்.
தாராளமாய் மூடியது மண்வெட்டி.
அந்தக் குழியில் புதைந்த
எங்கள் சகோதர முகங்கள்
இன்றுவரை மேடேறவில்லை
நலம் பகிர.
அம்மாவோடு
செத்துவிட்டன
எங்கள்
அசல் முகங்கள்.
நன்றி : அகவி
நூல் : சும்மாடு
பெயர்
நிலவு
மேகம்
நட்சத்திரம்
நதி
எத்தனை
எத்தனை பெயர்கள்
எமக்கு
துணிவிருக்கிறதா
உங்களுக்கு
சூரியன் என்று
பெயர் சூட்ட.
- இமயபாலன்
கவலை
பாழடைந்த பின்பு
பக்கம் வருவதில்லை யாரும்
தெரியாமல் இறங்கும்
வாளிகள்
நிரம்புகிறது
அழுக்கு நீரால்.
முட்கள் அடர்ந்து கிடக்க
உள் நெளியும்
நச்சுப் பாம்புகள்.
துருவேறிய சகடை
விட்டு வைத்தால்
இன்னும் சிலரின்
உயிர் குடிக்குமோ ?
தூர்த்து விடலாம்தான்
எங்கு போய் வாழும்
மீன் குடும்பம்.
- பழ. புகழேந்தி.
சீவகாருண்யம்
வெட்டிப் போட்ட
இலையின் மீது
வாழக்காய் கூட்டு,
தண்டுப் பொரியல்,
சோறு, குழம்புடன்
ஓரமாய் ஒரு
வாழைப்பழம்.
சைவச் சாப்பாடாம். !
வாசலில் கிடந்தது
வெட்டுண்ட அந்த
வாழை மரம். !
நீர் கசியப்
பார்த்தது அதை -
வாழைக் கன்று. !
- தி. ஜெயமுருகன்.
நன்றி : த.மு.எ.ச. சேலம் வெளியிட்டுள்ள பிரவாகம் நூல்
புன்னகை மந்திரம்
புன்னகைத்தது குழந்தை
எனக்குள் இருந்த
மிருகம்
தொலைந்து போனது.
புன்னகைத்தார் உடனிருந்த பயணி
எனக்குள் இருந்த
சுயநலக்காரன் உட்கார
இடம் கொடுத்தான்.
புன்னகைத்தார் அதிகாரி
எனக்குள் இருந்த
பொறுப்புணர்வு இன்னும் கூடியது .
புன்னகைத்தார் அம்மா
எனக்குள் இருந்த
அன்பு விசாலமானது.
புன்னகைத்தான் நண்பன்
எனக்குள் இருந்த
பலம் தெரிந்தது.
புன்னகைத்தாய் நீ
எனக்குள் இருந்த
சொற்கள் சேர்ந்து கவிதைகளாயின.
புன்னகைத்தது வானம்
விழுந்த தூறலில்
ஈரமானது எனது மனதும்.
இந்தப் பாறையைப்
புன்னகைகள் செதுக்கச் செதுக்க
இப்போது என் கைவசமும்
புன்னகைகள்.
நன்றி : ராஜ சந்திரசேகர்.,
ஒற்றைக் கனவும் அதைவிடாத நானும் நூல் - காவ்யா. சென்னை.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|