இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 22

31 சூலை 2004


அன்புடையீர். வணக்கம்,

கடந்த 15 ஆம் தேதியிலிருந்து இணையத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இணையத்தில் தமிழ் கற்போம் பகுதிக்கு மாணவர்களாக மும்பையிலிருந்தும், நெதர்லேண்டிலிருந்தும் பதிவு செய்துள்ளது மகிழ்வாக இருக்கிறது. இநத முறை கல்வி வினாக்கள் பகுதிக்கு கேட்கப்பட்ட வினா நுட்பமாகவும் நிறைவாகவும் உள்ளது. இணையத்தைக் கண்டு கருத்துகளால் வளர்த்தெடுக்கும் பார்வையாளர்களுக்கும், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திக் காணவைக்கும் அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்நத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006



சோறு தான் போட்டாள்.

அவசர காலமாய்
அம்மா எங்களுக்கு
அரை உப்பே போட்டாள்.

நானோ
என் பிள்ளைகளுக்கு
உப்பிட்ட சோறு போடுவதில்லை..

உப்பு நோய் ஊருக்குத் தானென்று
உரக்கச் சொல்லிவிட்டு
உள்ளே போனால்,

தடா, பொடாவெனத்
தட்டி யெழுப்பித் தகவல் சொல்லுமா ?
உப்பு நோய் உனக்கே முதலென்று..

நா. சுப்புலட்சுமி
சாட்சி வைத்த கொலைகள் கவிதைகள் - நூலில் (நிரஞ்சனா வெளியிடு)



பள்ளிக்கூடம்

இருபது வருடம் புத்தக சுமைதூக்கும்
என்னை
பத்து மாதம் சுமந்தவள்
அழைக்கிறாள்...
அறிவுகெட்ட கழுதை என்று
போட்ட உடையில் புழுதி படாது
தூக்கம் தொலைத்து
தொண்ணூற்றாறு மதிப்பெண்ணை
இதயங்குளிர ஏந்தி வந்தால்...
மீதம் நாலெங்கே ?
எனப் பெற்றோர் கேட்க
மறந்துபோனேன் படித்ததை...

ஆட்டம், பாட்டம், அருமை,
கதையின்றி
போட்டிகள் குவித்து
பொறாமைகள் வளர்த்து
தெய்வங்கள் சிலைகளாவதும் சாபக்கேடு
நகரங்கள் நாகரிகமானதால்
கிராமங்கள் அறிவொளியில் மின்னுகிறது...

வசந்தம் பாடிய சின்னக் குயில்கள்
காட்சிக்காய் அடைத்து வைப்பதால்
அவை
நடந்து தேய்ந்த தளங்கள்
அன்னியமாகிப் போகிறது.

நா. சுப்புலட்சுமி
சாட்சி வைத்த கொலைகள் கவிதைகள் - நூலில் (நிரஞ்சனா வெளியிடு)



சோற்றுத் தமிழன்

சோற்றுப் பருக்கையில் சொருக்கத்தைக் காண்கின்ற
சிறிய கோழியின் நெஞ்சுடையான்,
ஆற்றல் இருந்துங்கீழ் அடிமையாய் ஆனானைச்
சோற்றுத் தமிழனே என்றழைப்போம்.

நாட்டின் நலத்தையும் தாய்மொழி நலத்தையும்
தம்மக்கள் நலத்தையும் நினையாமல்
கூடாகிப் போய்உயிர் கொள்கை இழப்பவன்
தமிழனே என்பதும் வெட்கமடா.

ஒருபிடி சோறுதான் இவன்முன் தெரிந்திடும்
உலகமே இவனக்குத் தெரியாது
உலகினைச் சொல்லியே நல்வழிக் காட்டினால்
ஒத்துப் போகும் புத்தி வாராது.

வயிற்றை நிரப்பிப்பெருஞ் செல்வத்தை வாரியே
சேர்ப்பவன் வாழ்வதோ மாளிகையில் ?
வயிற்றைக் கழுவவும் அவன்பொரு ளால்கடன்
தீர்க்கவு முடியானோ வாடிக்கையில் ?

கோ. கலைவேந்தன்
தமிழ்த் துடிப்பு - நூலில் (தேங்கனி பதிப்பகம்)



தேவைதானா ?

காகிதத்தில் எழுதிவைத்த உருவமெல்லாம்
கடவுளின் அவதாரம் என்பீராயின்
காகிதத்தை உண்ணுகின்ற மிருகமெல்லாம்
கடவுளரை வென்ற அவதாரமாமோ ?

கட்டைகளைப் பூட்டி அதில் வண்ணந்தீட்டி
கற்பனையை வீணடித்து உழலுவோரே
கட்டைகளைக் தீயிலிட்டால் வெந்திடாதோ ?
கடவுளரும் தீயினிலே மாள்வதுண்டோ ?

கற்சிலையைக் கடல்தாண்டிக் கொண்டு சென்று
காசாக்க விழைவதுவும் எதனாலய்யா ?
சிற்பியின் கைவண்ணம் காசாகுமல்லால்
சிவனென்றா காசுக்கு வாங்குகின்றார் ?

கற்பனையின் சிறகுகளைப் பறக்கவிட்டீர்
கல்லாலும் மண்ணாலும் உருவம் செய்தீர்
கற்பனையே கருத்ததனை உண்டதாலே
கடவுளரின் உறவினர்கள் பிறக்கலானார்.

இறைவனையே நினைத்திருந்து பூசிப்போரும்
இயற்கைதரும் நோயாலே வாடும்போது
இறைவனையே நினைத்திருந்து பூசிக்காமல்
ஏனய்யா ஊசியைத் தேடுகின்றார் ?

பாவலர் எழுஞாயிறு
மனம் குறையா மல்லிகை நூலில் (முப்பாலிகை பதிப்பகம்)



..................
கிளைக்கரம் நீட்டி
மரம்
உன்னை அன்போடு
அழைக்கும் போது
உன் அம்மாவை...

ஈரக்காற்றெடுத்து
மரம்
சில்லென்று தழுவும்போது
உன் மனைவியை...

பூக்களைச் சிந்தி
மரம்
உன்னைக் குதூகலப்படுத்தும்போது
உன் குழந்தையை....

எப்போதாவது
உணர்ந்திருக்கிறாயா ?

இப்போது சொல்
உன் தாயை
உன் மனைவியை
உன் குழந்தையை
ஒரே நேரத்தில்
உன்னால் கொலை செய்ய இயலுமா ?

பழநி பாரதி
காதலின் பின்கதவு நூலில் (குமரன் பதிப்பகம்)



அறிவின் வழியே அறவழியாகும்
ஆலயம் தொழுவது சாலவும் தீது
இறைவன் என்பது இயற்கையே யாகும்.
ஈசன் என்பவன் நீசனே யாவான்.
உன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை.
ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே.
எல்லாம் உன் செயல் என்பதை நீ அறி.
ஏழை என்பவன் கோழையே ஆவான்.
ஒதுங்கிநில் என்றாளல் ஒட்டி நீ நிற்பாய்.
ஓதுவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்.

கடவுள் என்பது கயவர்கள் கற்பனை.
காசிக்குப் போவது காசுக்கு நட்டமே.
கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை.
கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்.
குட்டக் குட்கக் குனிபவன் முட்டாள்.
கூடி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்.
கெட்டாலும் மானம் விட்டுக் கெடாதே.
கேள்வி ஞானமே கேடிலா ஞானம்.
கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை.
கொடுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்.
கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு.

சரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்.
சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை.
சிந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்.
சீவனை விட்டபின் சிரார்த்தம் எதற்கு ?
சுகமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை.
சூட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்.
செத்தும் விடுவான் மருத்துவன்.
சேக்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்.
சொர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே.
சோதிடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி.

தன்மானம் இலாதவன் தமிழன் ஆகான்.
தாழ்வு மனப்பான்மை தனைநீ தவிர்ப்பாய்.
திராவிடர்க் கில்லை திதியும் திவசமும்.
தீண்டாமை என்பது வேண்டாமை யாகும்.
துணிந்தோர்க் கில்லை துன்பமும் துயரமும்.
தூய்மை என்பதை வாய்மையில் காண்பாய்.
தெய்வத்தை நம்பித் தெருவில் நிற்காதே.
தேவரின் பேரால் திருடரே பெருகினர்.
தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே.
தோல்வி எதிலும் துணிந்தோர்க் கில்லை.

நன்றி : பெரியார் அறிவுச் சுவடி - விந்தன்
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுனம்.



முடி

குட்டிக் கதை

டேய் அருண் மேசையில் தேநீர் வைச்சிருக்கேன். எழுந்து ஆறிப்போறதுக்கள்ள குடிச்சிடு..

அம்மாவின் குரல் கேட்டு, படுக்கையிலிருந்து எழுந்தவன் தேநீர்க் குவளையை எடுத்துக் குடிக்க நினைக்கையில் அந்த ஒரு முடி கண்ணில் பட்டது. லேசான கோபத்துடன் தேநீர்க் குவளையை வைத்துவிட்டு, குளியளறைக்குள் சென்றவன், வாளியில் நீர் பிடித்துக் குளித்திட நினைக்கையில் அதிலேயும் முடி...

அலுவலகம் புறப்படும் அவசரத்தில், சாப்பாட்டுத் தட்டின் முன் அமர, அம்மா எடுத்து வைத்த உப்புமாவிலும் ஒரு முடியிருக்க, சினத்துடன் தட்டைத் தள்ளிவைத்துவிட்டு "எனக்கு ஒன்றும் வேண்டாம்" என்று வெளியேறி வந்தவன் ஒரு உணவகத்தில் நுழைந்து தோசை வாங்கி உண்ண நினைக்கும்போது அதிலேயும் முடியிருக்க அதிர்ந்தான்.

" என்னடா இது ! காலையிலிருந்து எல்லாவற்றிலும் முடி மயமாய் இருக்கிறது ? " என்ன காரணம் என்று சிந்தித்தவாறு தலையைக் கோத கையோடு சில முடிகளும் வந்தன.

" அட என் தலையில் இருந்துதான் முடி உதிர்ந்திருக்கிறது. அது தெரியாமல் அம்மாவை வேறு சினந்து வருத்தப்பட வைத்துவிட்டோமே - என வருந்தியவனாய் அலுவலகம் சென்றான் அருண்.

நன்றி : புதிய தென்றல் சூலை 2004



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061