|
இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 21
14 சூலை 2004
அன்புடையீர். வணக்கம்,
டெக்சாசு நா. கணேசன் அவர்கள் நமது நூலகம் காண வந்திருந்தார். தமிழ் இலக்கியத்தின் மீது பற்றும்
மரபுப்பாக்களில் முதிர்ச்சியும் உடைய அவரது ஒவ்வொரு சொற்களும் தமிழின் மீது அவர் கொண்டுள்ள தணியாத
வேட்கையைக் காட்டியது. பழைய ஓலைச்சுவடிகள், மரபுப்பாக்கள் ஆகியவற்றைத்திரட்டி, அதனைக் கணினிவழிப்
பதிவு செய்கிற செயற்பாடுகளை அவர் விளக்கியபோது நெஞ்சு நிமிர்ந்தேன். தோசை குறித்து அவர் எழுதிய மரபுப்பா
இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழ் உணர்வுடன் உலகம் முழுவதும் இயங்குகிற நல்ல உள்ளங்களை நாம்
திரட்டுவோம். தமிழுக்கு நம்மால் இயன்ற செயலை நாம் தொடர்ச்சியாகச் செய்வோம்.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 642 006
தோசை
சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையினர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் தான்தகு அரிசியை
மாலின் வண்ணமாம் மையள் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வட்ட நிலாவே
நாக. கணேசன்
பெண்
பெண்
கிளியென்பான்
பிடித்தபின்
சிறை, சிறை.
பெண்
நதியென்பான்
அடக்கி ஒடுக்க
கரை, கரை.
பெண்
தேவதையென்பான்
தேவைக்குப் பின்
வதை, வதை.
பெண்
தெய்வமென்பான்
வணங்கிய பின்
பூட்டு, பூட்டு.
பெண்விழி
அழகு அழகு என்பான்
பெண்ணே விழி, விழி.
திருவைக் குமரன் - கவிக்காவிரி இதழ்.
கைப்பிள்ளையோடு
நாலஞ்சு மைலு தனியா போற
வழியில
காத்து கருப்பு அடிச்சிடும்
பேய் பிசாசு புடுச்சிடுமுன்னு சொல்லி
தலையில கொஞ்சம்
வேப்பிலையை சொருகிவிடும் அம்மா
உனக்குத் தெரியுமா ?
நான்
வாக்கப்பட்டுப் போனதே
ஒரு பேய்க்குத் தான் என்பதை
திருவைக் குமரன் - கவிக்காவிரி இதழ்.
- பொழில் படைப்பரங்கத்தில்
படிக்கப்பட்ட பாக்கள்.
- சாலையோரக்
கோவிலைப் பார்த்து
பேருந்தின் ஓரத்தில்
அமர்ந்திருந்தவர்
கன்னத்தில்
போட்டுக்கொண்ட போதுதான்
பஞ்சர் ஆனது
பேருந்து..
புன்னகை சேது.
- பொய் சொன்னா
சாமி
கண்ணக்குத்தும்
பூச்சாண்டி
புடிச்சுக்குவான்
தினமும்
சொல்லியபடி இருக்கிறேன்
குழந்தையிடம்
சில பொய்களை.
சோழ நிலா
ஓ... இளைஞனே
சாதி எனும் சாக்கடைக்குள்
புதைந்துபோய்...
பெண்களை அடிமையாக்குவதில்
போட்டியிடு...
போதை எனும் பாட்டிலுக்குள்
படுத்துறங்கி...
புகை எனும் பூகம்பத்தில்
புன்னகை கண்டு...
சினிமா எனும் மன்றத்தில்
சீர் கெட்டு...
ஈவ் டீசிங் எனும் ஈனச்செயலில்
இன்பம் கண்டு...
காதலுக்குள் காணாமல் போய்
ஓ... இளைஞனே
இப்படி அனைத்திலும்
புதைந்து போவதற்கா
பூமியில் பூத்தாய்....
நீ செய்யும் இந்தச் சீர்கேடு
உன் வீட்டடிற்கா
இந்த நாட்டிற்கா
சீர்கேடு வேண்டாம் இளைஞனே
சிந்தித்துப் பார்...
உன்னால்
ஓர் சங்கமம்
உருவாகட்டும்
இரா.க. நன்மதி - நா.புரசக்குடி
நன்றி: நந்தவனம் சூலை 2004
முகவரி இல்லாதவன்
முகவரி இல்லாதவன்
எந்த முகவரியிலும் வாழலாம்...
கதவு எண், தெருப் பெயர்,
அடையாள மரம், கோயில், குளம் எதையும்
சுமந்து கொண்டிருக்க வேண்டாம்
அச்சிட்ட அட்டைகள் தீரும் முன்
ஊர் மாறி, தெரு மாறி, வீட்டு எண் தொலைபேசி
எண்கள் மாறி
அவதிப்படவேண்டாம்
ஊர்களை உதறிவிடும் அவன்
உதறிவிடுவான் உலகத்தையும் அதே நேரத்தில்
காது குத்து, கல்யாண அழைப்புகள்
விபத்து, இரத்தம் சிந்தும் செய்திகள்
கடைசி மூச்சைக் கொண்டுவரும் மரணக்
காயிதங்கள், தந்திகள்
தொட்டுவிடும் தொல்லை இல்லை.
விழும் விலகும் எச் முத்திரைப்
பங்கீட்டு அட்டையும்
வீட்டுக்கு வரும் புழு, கற்களைப்
பொறுக்கும் வேலையும் இல்லை.
மதகுருமார்கள்
அச்சுறுத்தும் பாவமும் பரிகாரமும்
அவனது
இல்லாத முகவரிக்கு
இறை நம்பிக்கையை
எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கும் ?
வாக்குச் சீட்டுகளுக்கும்
பொறிவைக்கும் கட்சிகளுக்கும்
தேவையில்லை அவன் முகவரி
எப்படிப் பிறப்பது என்பது அவற்றுக்கு
அத்துபடி...
முகவரி இல்லாதவனை
முக்கியமாக வாழ்க்கை பந்தாடமுடியாது.
அவன் எந்த ஆடுகளத்திலும்,
எந்தக் கோட்டுக்குள்ளும் இல்லை.
வாழ்க்கை வீசும்
எந்த வலையிலும் அகப்படாமல்
நீந்தி அருவி நீரில் கரைந்து விட்டவன்
எந்தத் திவலையில் இருப்பான் ?
எந்தத் திவலையில் இல்லாமல் இருப்பான் ?
தமிழன்பன்
நன்றி : புதிய காற்று - சூலை 2004
வாஸ்து
மூலவரை
இடம் மாற்றினார்
வெளிநாட்டுக்கு
செல்வம்
செழித்தது
தர்மகர்த்தா வீட்டில்
பாவம்
விவரம் தெரியாதவர்கள்
மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
கதவையும்
சன்னலையும்.
பூரணச்சந்திரன்
கடவுளின் துரோகம்
சிறுநீர் கழிக்க
மறைவிடம் தேடும்
சிரமம்.
மனம் சோரும்
மாதவிலக்கு.
கர்ப்பம் தரித்தால்
காட்டிக் கொடுக்கும்
வயிறு.
கடவுளை நம்பும்
பெண்களுக்கு
சொல்லிப் புரிவதில்லை
பிர்மாவின் ஆணாதிக்கம்.
பூரணச்சந்திரன்
நன்றி : தமிழர் கண்ணோட்டம் - சூலை 2004
பீடி
கதிஜா பீவி
எனது அம்மாவைப் போல
பாசம் காட்டுவதில்
பள்ளி விட்டவுடன்
அவர்கள் வீடுதான்
எனக்கு விளையாட்டுத்திடல்.
தையல் வேலைகளை
நுணுக்கமாகச் செய்வதால்
கிட்டா முஸ்தபா தெரு வாசிகளின்
துணிகள் கதிஜா பீவியின்
கைகளில்
எந்நேரமும்.
கூடவே
உதட்டில் எப்போதும்
புகையும் பீடி...
ஈரப்பதத்துடன் கூடிய
நீளமான திவான் பீடிகள்
அவளுக்குப் பிடித்தமானவை.
யாருக்கும் தெரியாமல்
வாங்கிவர
என்னைத்தான் பணிப்பாள்.
பாலாஜிக்கு மட்டும்
தெரியும் போல...
மற்றவர்க்குத் தெரியாமல்
இப்பழக்கத்தை
மறைத்தே வந்தாள்.
காற்றில் பரவும் பீடியின்
நாற்றத்தால்
ஐயப்பட்டு என்னைச் சிலர்
மிரட்ட...
கதிஜா பீவிதான்
காப்பாற்றிச் செல்வாள்.
ஒருநாள் போல ஏற்பட்ட
கடுமையான இருமல்
காச நோயினை அவளுக்குக்
கொண்டு வந்து சேர்த்தது.
ஆயிற்று...
கதிஜா பீவி மவுத்தாகி ஒரு
வருடம்.
வருடகத்தம் பாத்தியா
ஓதுதலுக்காக...
ஆசைப்பட்டதையெல்லாம்
இலையில் வைத்தார்கள்.
நான் திவான் பீடிகளை வாங்கி
வந்து
இலையில் பரப்பினேன்.
பாலாஜி ஓடிவந்தென்னைக்
கட்டிக் கொண்டார் கதறியபடி...
பீடியின் மணம் அறையெங்கும்
பரவத் தொடங்கியது.
சூர்ய நிலா
நன்றி : செளந்தர சுகன் - எண் 206
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|