இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 20

30 சூன் 2004


அன்புடையீர். வணக்கம்,
படைப்பாளி திரு. நெப்போலியன் அவர்கள் " நானும் எனது கருப்புக் குதிரையும் என்ற நூலை அனுப்பியிருந்தார். அதிலிருந்த பல படைப்புகள் நுட்பமாகவும் தரமாகவும் இருந்தன. எனவே இந்த இதழ் முழுவதும் அவரது படைப்புகளே இடம் பெறுகின்றன. அவருக்கு எமது அன்பான வாழ்த்துகள். படைப்பாளிகள் தங்களது தரமான படைப்புகளைச் சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006




மூங்கிலிசை

விழிகள்
வரிசையாய்...
விரல்கள்
இமையாய்...
பொத்திப் பொத்திக்
கண்ணாமூச்சியாய்...
காதுகள்
விழிக்க...

மூங்கிலே,

பல்லாக்கு
பாடை
தூண்டில்
துரட்டி
இருக்கை
இன்னபிற
என்றாலும்...

புல்லாங்குழலிலேயே
நீ பிறந்த பயன்...

அவ்விசை
கேட்பதிலேயே
நான்
வாழ்ந்த பயன் !



காக்கை குருவி எங்கள்...

அலுவலகத்தில் வேலையில்...
தொலைபேசி அழைப்பு
சின்னவள் பேசினாள்...

"அப்பா நம்ம வீட்டுக்கு
புதுசா விருந்தாளி புடிச்சிருக்கேன்"
ஆச்சர்யத்தில் நான் !
வந்திருக்காங்களா...?
புடிச்சிருக்கியா...?
"வந்து அடைஞ்சாங்க
புடிச்சி வச்சுட்டேன்"
எந்த ஊர்லேந்து வந்திருக்காங்க ?
"சரியாத் தெரியல
அடுக்குமாடியேறி
கதவைத் தட்டாம நுழைஞ்சுட்டாங்க..."
குண்டப்பர் கதையில வர்ற மாதிரியா !
அம்மாவுக்குத் தெரியுமா ?
"அண்ணனுக்குத் தெரியும்"
சாப்பாடு தண்ணி கொடுத்தியா?
"அதுக்குத்தானே
உங்களுக்கு அடிச்சிருக்கேன்"

போன வருடம் கால் ஒடிந்தபடி
துணிக்கொடியில்
தொங்கிக் கொண்டிருந்த
தவுட்டுக் குருவி.

போன மாதம் பள்ளி முடிந்து
திரும்புகையில்
குப்பைத் தொட்டிப்
பூனைக்குட்டி.

போனவாரம்
லிப்டிற்குள் தவறி நுழைந்த
விலாசம் தொலைத்த நாய்க்குட்டி.

நேற்று
பள்ளித் தோழி நிராகதித்த
பிளாக் மாலிஷ் மீன்குட்டி.

இன்று
அந்துப் பூச்சி
மர நிறத்தில்
வண்ணத்துப்பூச்சி மாதிரி
ரெக்கை படபடக்க...

மார்பில் முகம் புதைத்து
என் கழுத்தை
இறுக்கி அணைத்தபடி
அவளுக்கான
எல்லாமும் நான் தான்
என்ற நம்பிக்கையில்
அயர்ந்து தூங்கும் மகள்.

நாளை
ஏதேனும்
புழுவோ... புறாவோ...
வந்தடையக்கூடும்
என் வீட்டில்...
அவளை நம்பியபடி !



பிழை (த்) தேன்

எனக்கான
எல்லா ஆயுதங்களையும்
இழந்துவிட்டு
நிராயுதபாணியாய்
உன் முன்
நான்.

குதிரைகளின்
கால் புழுதியால்
என்னைப்
புரட்டி மிதித்தபடி
நீ.

முன்பொருநாள்
நிறைந்த பெளர்ணமியில்
இதே குதிரையில்
இருவரும்
படித்தபடியே
ஒரே நிலவானோம்.

ஆழம் தெரியாமல்
காதலை விட்டது
என் தப்புதான்.

மூழ்கி
மூச்சடக்கி
கடைசி மண்
எடுத்து வரும்
தைரியம்
இப்போது
எனக்கில்லை...
என் மூச்சே
உனக்குள்
மூழ்கி விட்டபடியால்.

நீ
படம்
விரித்தபோதெல்லாம்
பாசாங்கு என்றுதான்
பயப்படாமல்
இருந்தேன்...

பச்சை விஷம்
துப்பிய பிறகுதான்
நஞ்சுக்குள்
இவ்வளவு நாள்
நீந்தியதை உணர்ந்தேன்.

நீ
அதிசயம் என்றுதான்
ஆலாபனை செய்தேன்
உனக்குள்
இவ்வளவு பெரிய
ஆதிசேசனா ?

உன்னுள்
நீ ஒளித்து
வைத்திருக்கும்
கெட்ட வாசமும்
இனித்த நஞ்சும்
தெரியாமல்...

உன் தேனடையை
நக்கிப் பார்க்க
இன்னும்
சில பேர் வரலாம்
அழிந்து மடிய...

அதிர்ஷ்ட வசமாய்
ஒரு தடவை
கல்லெறிந்ததால்
உன் வேஷம்
வெளிப்பட
தப்பித்தேன்...
நான் !



நாங்கள்

அடுக்கு மாடிகளில்
நாங்கள்
கூடுகள் வாங்கினோம்...

கூண்டுக்குள்
போர்த்தியே
குருவிகள்
வளர்த்தோம்...

கடன் அட்டை
கெளரவங்களும்
தவணைமுறை
கொள்முதல்களும்
எங்களை அலங்கரிக்க...

வரவுகளின்
மரியாதையை
சுரண்டிப் பார்த்தபடியே
எப்பொழுதும்
எங்கள் செலவுகள்...

வயதான பெற்றோரின்
பேணிக் காப்பைவிட
எங்கள்
பென்ஸ் கார் கனவே
கட்டாயம் !

அலுவலகம்
செல்லும் போதோ
வேலை முடிந்து
திரும்பும் போதோ
மின் தூக்கிகளில்
முகம் தூக்கிச்
சிரித்துக் கொள்வோம்...
மற்றபடி
அவர்கள்
எதிர்வீடோ
பக்கத்து வீடோ
மின்தூக்கிக்கே வெளிச்சம் !

ஒன்று
உள்ளே
அல்லது
வெளியே
என
எப்பொழுதும்
பூட்டியபடியே
எங்கள்
கதவுகள்...

சனிக்கிழமை
இரவுகளில்
நுரைகளும்
உடல் உரசி ஆட்டங்களுமாய்
நள்ளிரவையும் தாண்டி
எங்கள்
வாலிபம் கரைய...

விடியற்காலையில்
வீடு நுழைந்து
படுக்கும்
எங்களின்
ஞாயிறுகள்
எப்பொழுதும்
மயான அமைதியாய்...

இவனுக்கும்
இவளைப் பற்றித் தெரியும்
இவளுக்கும்
இவனைப் பற்றித் தெரியும்
அவளிடமிருந்து
உடைந்தவுடன்
இவளிடம் இவன் !
அவனிடமிருந்து
பிரிந்தவுடன்
இவனிடம் இவள் !
இவர்களிருவரும்
நல்ல காதலர்கள்...
யாரோ
எவரோ
ஆகும் வரை !

உள்ளாடை
கழற்றுவது போல்
உறவுகள் உதறப்பட்டு
காதல் இங்கே
கருவாடுகளாய்...

இன்றைக்கும்
பதிவுத் திருமணம்...
நேற்று
வாங்கிய
இரண்டாவது விவாகரத்துடன் !

அப்பாவிற்கு
ஆயிரத்தெட்டு வேலை.
அரைநொடி கூட
அமைதியாய் இல்லை...
தொலைபேசி
இரத்தமும் - சதையுமானதோ ?
அம்மாவின் முகமோ
அன்றாடம்
அழகு நிலையத்தில்...
அலங்கார நிமிடங்கள்
ஆயுசும் நீளுமோ ?
அண்ணனும் அக்காவும்
அவரவர் வேலையில்...
தெரிந்த விஷயமென்பதால்
தேடல் இல்லையோ !
பிலிப்பினோ
பணிப்பெண் கையில்
மரக்கட்டை
பொம்மையாய் நான் !
என
உயிர் கசியும்
எங்கள்
மழலை...

வாரத்தில்
ஐந்து நாள்
அதிர்ஷ்ட எண் விளையாட்டு
மீதிகளில்
குதிரைகள்...
குறைந்தபட்சம்
ஒரு வெள்ளிக்காவது
பெரியதில்
கட்டவில்லையென்றால்
விக்கிரமாதித்தன்
வேதாளக் கதையாய்
சுக்கு நூறாகிச் சிதறும்
எங்கள் மண்டை !

எங்கள்
மொழிக்கென
அத்தனை அமைப்புகள்
அவ்வளவு சங்கங்கள்
மாதந்தோறும்
கவிமாலைகள்
கவிச்சோலைகள்
பட்டிமன்றங்கள்
வாரந்தோறும்
கருத்தரங்கங்கள்
கலந்துரையாடல்கள்
வருபவர்களெல்லாம்
வயது முதிர்ந்தவர்கள்...
வந்தவர்களே
மறுபடியும்...
மறுபடியும்...

எங்கே சென்றார்கள்
எம் தமிழ் இளைஞர் ?

நூலகங்களில்
திருக்குறளும்
புதுத்தமிழும்
குவிந்து கிடக்க...
அகதாகிறிஸ்டியையும்
ஷிட்னி ஷெல்டனையும்
தேடியபடியே...

எங்கே சென்றார்கள்
எம் தமிழ் இளைஞர் ?

தமிழ் தினசரிகளை
கைகளில் வைத்திருப்பது
கம்பளிப்பூச்சி
அருவருப்பென
யார் அவர்களுக்குக்
கற்றுக் கொடுத்தது ?

வீடுகளுக்குள் நாம்
தமிழ் பேச...
வெளியே அது வளரும்...
உள்ளுக்குள் ஊதிவிட
வேர்கொண்டது
நன்றாய் ஜொலிக்கும்...
பிற மொழிக் கல்வி
வாழ்க்கையின் வசதிக்கு...
நம்மொழி அறிவு
வாழ்ந்ததின் சாட்சிக்கு...
புரிய வைப்போம்
நம் புத்திரர்களுக்கு...

பூகோளத்தில்
ஒரு புள்ளியாய்...
இந்த மண் !
பொருளாதாரத்தில்
பெரும் புள்ளியாய்...
இந்த மண் !
வாழ்வும்
வாழ்க்கையும்
வசதியாய்
வாழ
வசந்தகால ஏதேன்
நம் சிங்கப்பூர்.

இனியாவது...
நம் சுவடுகளை
இங்கே
திருத்தமாய்ப் பதிப்போம்.
வருங்காலப்
பயணங்களின்
பாதைகள்...
திருப்தியாய் அமைய !

செப் 2002 - சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய சிங்கப்பூர், மலேசியா தமிழ் இலக்கிய மாநாட்டில் படிக்கப்பட்டது



சிராங்கூன் சாலை

சிகப்பு விளக்கில்
சாலை கடந்து....
சிவப்பு விளக்கு
சந்தில் நுழைந்து...
அம்மணப்படம்
வாங்கிக் கொண்டு
அய்யா வை ராசா வை
விளையாடிவிட்டு...
உரிமம் பெறாத
தொலைபேசி அட்டைக்காரர்களிடம்
பேரம் பேசி...
உருண்டு போகும்
காலி பீர் பாட்டில்களில்
கால் தடுக்கி...
சுவரில் - சாலையில்
துப்பிப் படிந்த
பான்பராக் கறைகளை
ரசித்தபடி...
வாந்தியில்
புரண்டு பிதற்றும்
அந்த ஆள்
நம்மூர்ப் பக்கமா ?
என அருகாமையில்
பார்த்துவிட்டு...
சாலையை மறைத்த
பிளாட்பாரக் கடைகளைக்
கஷ்டப்பட்டுத் தாண்டி...
காதுத் தோடும்
சம்மர் கிராப்புடன்
" சிங்கப்பூரியன்லா "
எனப் பொய்யாய்ச்
சொல்லித் திரியும்
தென்னாட்டு வாச்சாப்புகள்
கேட்டபடி.....

ஐம்பது காசு குழம்பும்
ஐம்பது காசு சோறுமாய்
ஒரு வெள்ளியில்
ஒரு வேளை உணவுடன்
நாட்கள் கடத்தும்
ஒரு இலட்சத்து அறுபதாயிரம்
கட்டி வந்து
வேலை தொலைத்த
ஏமாளிப் பெர்மிட்டுகளும்........

உண்டியல் குருவிகள்
ஊசிபாசிக் குறவர்கள்
ஹோமியோபதி - அல்லோபதி
விசா மருத்துவர்கள்
கிளி ஜோசியம்
கைரேகை
ஊர்சி சிட்டுகள்
திடீர் இறக்குமதிகள்
ஞாயிறுகளில்
சீட்டு ஏலக் கூட்டங்கள்
சத்தமாய்க் கத்தியபடி
சத்தங்கள்.....
குப்பைத் தொட்டிகளை
நிராகரித்த
குப்பைகள்...
மீறல்கள்...

என
சிங்கையின்
திருஷ்டிப் பொட்டாய்
சிராங்கூன் சாலை.


நன்றி : திரு. நெப்போலியன், நானும் என் கருப்புக் குதிரையும் நூல். பிரித்திமா பதிப்பகம், 14/24 காமராசபுரம், 15 ஆவது தெரு, புதுக்கோட்டை, 622001. விலை : ரூ 70

kavingarnepolian@yahoo.com.sg
BLK 585 # 06 - 3043, ANGM.KI.AVE 3, SINGAPORE 560585

அறியாமை

சற்றே விடிந்த வேளை.

கூண்டுக்குள் அடைப்பட்டிருந்த
கோழிகள் இரண்டு
கொத்திக் கொண்டு சண்டையிட்டன.
ஒன்றோடு ஒன்று.

சண்டையின் காரணம்
கோழிகளே அறியும்.

அவ்வப்போது
ஓய்வெடுத்துக் கொண்டாலும்
முடிந்த பாடில்லை கொத்துதல்.

இவைகளைக் கவனியாமல்
வெட்ட கத்தியைத்
தீட்டிக் கொண்டிருக்கிறான்.
கசாப்புக் கடைக்காரன்.

சேலம் - பொன்.குமார்.


காத்திருப்பு


சந்தர்ப்பம் கிடைக்கிறபோது
பேசுவதாகச் சொல்லிச் சென்றாய்.

எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென்று
ஏனோ
கேட்கத் தோன்றவில்லை.

உனது தொலைபேசி அழைப்புக்கான
மணியோசை
இன்றேனும் கேட்கக்கூடும் என்ற
எதிர்பார்ப்பில்
ஆரம்பிக்கின்றது
எனது ஒவ்வொரு பகலின் தொடக்கம்.

அ, கார்த்திகேயன்
இன்று...இங்கே..இப்பொழுது நூலில்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061