சூளேசுவரன்பட்டி தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இளம் படைப்பாளிகளுக்கான பன்முகப்
படைப்பரங்கமானது தொடங்கப்பட்டுள்ளது. இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து, படைப்புகளை ஆக்கச்செய்து,
படிக்கவைத்து, அதனைப் பொழில் இதழில் வெளியிடுவது எனத் திட்டமிட்டு - இன்று பொழிலின் 3 ஆவது இதழை
வெளியிட்டுள்ளோம். படைப்பாளிகள் தரமாகச் சிந்திப்பதும் எழுதுவதும் நிறைவாக உள்ளது. பொழில் இதழில்
வெளியிட்டுள்ள சில கவிதைகளும் இந்த இணைய இதழில் வைக்கப்பட்டுள்ளது. தமிழம் இணையத்தின்
பார்வையாளர்கள்கூட பொழில் படைப்பரங்கத்திற்கு படைப்புகள் அனுப்பலாம்.
அச்சு இதழாகத் தங்கள் இதழை வெளியிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இதழாளர்களுக்கும் ஓர் இனிய செய்தி.
இனி நீங்கள் இணையத்திலும் உங்கள் இதழை வெளியிடலாம். திங்கள் இதழாகவோ, இருவார இதழாகவோ
தாங்கள் விரும்புகிற வகையில் வெளியிடலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? உங்கள் இதழின் பெயரை,
முகவரியை, உங்கள் புகைப்படத்தை அனுப்பி உங்கள் பெயரைப் பதிவுசெய்து கொள்ளவும்.(பெயரைப் பதிவு செய்ய
ரூ60 அனுப்பவும்) இப்பொழுது உங்களுக்கான அ4 அளவிலான இணையப்பக்கமானது - உங்களுக்காக - ஒதுக்கப்படும்.
பிறகு இதழில் நீங்கள் வெளியிட விரும்புகிற செய்திகளை, படைப்புகளை, பாடல்களை தட்டச்சு செய்து அல்லது
எழுதி எங்களுக்கு அனுப்பிவிடவும் ( விளம்பரங்கள், பிறரை நேரடியாகத் தாக்குகிற செய்திகள் போன்றவற்றை
தவிர்க்கவும்) அ4 அளவிலான பக்கமானது இணையத்திற்காகத் தட்டச்சு செய்யப்பட்டு - இணையத்தில்
வைக்கப்படும். தாங்கள் விரும்புகிற கால இடைவெளியில் அடுத்த இதழை வலையேற்றம் செய்யலாம் (ஒவ்வொரு
முறை வலையேற்றம் செய்யும் பொழுதும் தட்டச்சு மற்றும் வலையேற்றத்திற்காக ரூ40 அனுப்பவேண்டும்) அ4
அளவுக்கு அதிகமாக பெறப்படும் செய்திகள் இணையத்தில் வைக்கப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு எழுதவும்.
தரமாக இயங்கிக் கொண்டிருக்கிற அனைத்துச் சிற்றிதழாளர்களும் குறைந்த செலவில்
இணையத்திலும் இயங்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது. வேறு வணிக
நோக்கத்திற்காக இது அறிமுகப்படுத்தப்படவில்லை. இதழாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 642 006
பயணம்
ஓடும் பேருந்தில்
வியர்வை கசகசப்பில்
அலுவலகம் செல்லப்
பிடிக்காமல் போனது.
சொந்தமாய் ஊர்தி வாங்கி
பயணம் செய்ய
அடுத்தவரைப் பார்க்கக்
கர்வம் தலை தூக்கி நின்றது.
எரிபொருள் விலையேறி
பணப்பற்றாக்குறை வந்தபோது
ஊர்திப் பயணம் கசந்தது.
மீண்டும் பேருந்து நாடுகையில்
என்னைப் பார்த்து
யாரோ நகைப்பது போல
இருந்தது,,,,
அது என் மனசாட்சி.
- ம. கிருஷ்ணவேனி.
பொழில் 3 - படைப்பரங்க இதழ்
என் கடவுள் என்னைப் பார்க்க
வருவதாகச் சொல்லி இருந்தார்கள்
முட்புதரும் எருக்கங் செடிகளுமாய்
மண்டிக் கிடந்த மனவெளியை
வெட்டிச் சீராக்கி
சில ரோஜாச் செடிகளை நட்டு வைத்தேன்
இடிபாடுகளுடன் கூடிய
என் அறையை பிரியங்களால்
இட்டு நிரப்பிச் சரியாக்கினேன்.
கோலங்கள்,
பூத்தோரணங்கள்,
கெட்டிமேளங்களென்று
வரவேற்றுக் காத்திருந்தேன் வாசலில்...
என் கடவுளும் வந்தார்.
துணைக்கு ஒரு சைத்தானையும்
அழைத்துக் கொண்டு.
நாட்குறிப்பேட்டிலிருந்து 6-4-04
பொழில் 3 - படைப்பரங்க இதழ்
கடன் பெற்ற களிப்புடன்
பணம் எண்ணி முடிப்பதற்குள்
கடன் கொடுத்தவரெல்லாம்
கை நீட்டி நிற்க..
கைமாறியது பணம்.
வங்கியின் கடன்
வாங்கிய கடனுக்குச்
சரியாய்ப் போச்சு....
வழியில் வங்கி அறிவிப்பு
" வங்கிக் கடன் பெற்றிடுவீர்
வாழ்ந்திடுவீர் வளமுடனே ! "
புவனேஸ்வரி - பெதப்பம்பட்டி
பொழில் 3 - படைப்பரங்க இதழ்
வீர மகன்
பாம்பை அடித்து விரட்ட
கம்பைக் கையில் எடுத்தார் பெரியவர்
பெரியவரிடம்
பாம்புக்குப் பயம்
பாம்பாட்டிக்கும் அச்சம்.
அவர் இருக்கும்வரை
அதிக நடமாட்டமில்லை.
உயிர் வாழ்ந்தால் போதுமென்று
ஒளிந்து கொண்டிருந்தது.
பெரியவரும் தடியை
கீழே விடவில்லை.
பாம்புக்கு எதிராக
பிள்ளைகள் சிலரையும் வளர்த்தார்.
இன்று
பாம்பாட்டியிடம் கம்பைக் கொடுத்துவிட்டு
பாம்பையே வணங்கி நிற்கிறார்
பெரியவர் வளர்த்த ஒரு மகன்.
- பொன். குமார் - சேலம்
பாத்திரம் துலக்கிப் படிக்க வைத்தார்
என் அம்மா.
கொடுக்கும்போதெல்லாம்
அம்மா எனக்கு தெய்வம்தான்.
எனக்குப் பிடிக்கும் என்று
மீன் வாங்கி
சுவையாக வறுத்துவைத்துக்
காத்திருப்பார்.
அருமை தெரியாது
உள்ளே வந்து கடிப்பேன்.
ஆசையாக வாங்கி வைத்திருந்த
மோதிரமும்
தங்கச் சங்கிலியும்கூட
அணிந்து கொள்ளாமல் இருந்தேன்.
ஆசை ஆசையாய் அனைவரிடமும்
என்னைப் பற்றிச்
சொல்லிச் சொல்லி மகிழ்வார்.
உள்ளே நுழைந்ததும்
என்ன அரட்டையோ என்று
வெறுப்பேத்துவேன்.
இன்று எனக்கு
முழுமையாகப் புரிந்தது....
என் பையனிடம் நான்
வாங்கிக் கட்டிக் கொண்டு
சுருண்டு படுக்கும்போது.
தமிழ்க்கனல்
ஏதோ ஒரு பள்ளத்தில் உருளுவது போல
ஓர் நினைவு அப்பொழுதெல்லாம்.
கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பார்.
நான் சாப்பிடும்போது கொடு என்பார்.
கொடுக்காமல் விழுங்கி விடுவேன்.
விளையாட்டாக.
இப்பொழுதுதான் புரிகிறது
நான் விளையாடியது
என் அப்பாவின்
வயிற்றுப் பள்ளத்தாக்கிலென்று...
- த. பாரதி ரோசன் -
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061