இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 15

15 ஏப்ரல் 2004


அன்புடையீர். வணக்கம்,

தெளிதமிழ்ப் பெயர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைக்கப்போவதாக நண்பர்கள் பலரும் எழுதியுள்ளனர். அனைவருக்கும் எமது அன்பான வாழ்த்துகள். தெளிதமிழ்ப் பெயர்களை விருப்பமுள்ள நண்பர்கள் அச்சாக்கி விழா நிகழ்வுகளிலும், திருமணநிகழ்வுகளிலும் நிகழ்வினை வாழ்த்துகிற சிறு நூலாக அச்சாக்கி நண்பர்களுக்குத் தரலாம்.

இந்தத் திங்களிலிருந்து குறுந்தகடு விற்பனை தொடங்குகிறது. முதலாவதாக வானப்பாடியின் அனைத்துப் பக்கங்களையும் (620 பக்கங்கள்) குறுந்தகடாக்கி படிக்க, அச்சசெடுக்க உதவுகிற வகையில் வடிவமைத்துள்ளோம். விரும்புகிறவர்கள் மின்அஞ்சலிலோ, அஞ்சலிலோ தொடர்புகொண்டு உரியதொகை அனுப்பி, எங்களிடமுள்ள அனைத்து இதழ்களையும் குறுந்தகடாக்கி வெளியிட ஊக்குவிக்குமாறும், உதவுமாறும் அன்போடு வேண்டுகிறோம்.

படைப்பாளிகள் தங்களது தரமான ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பிவைக்கவும். வாய்ப்புக்கிடைக்கும்போது அதனை வெளியிடுவோம். எனவே தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


தொடக்கப்பள்ளி
மாணவர்களுக்கான
பயிற்சிப் பாடல்

சுற்றித் திரியும் ஓணானைச்
சுட்டிப் பையன் கண்டானே
வெற்றிக் களிப்பில் மிதந்தானே
வேலிக் கருகில் சென்றானே.

கல்லைக் கையில் எடுத்தானே
கணக்காய்ப் பார்த்தே எறிந்தானே
துள்ளி விழுந்த ஓணானைத்
தூக்க விரைந்து சென்றானே.

கல்லும் தடுக்கி விழுந்தானே
காயம் பட்டு அழுதானே
துள்ளி விழுந்த ஓணான்போல்
துன்பம் அவனும் பெற்றானே.

மனமும் திருந்தி எழுந்தானே
மாற்றம் ஒன்று கண்டானே
குணத்தால் நிமிர்ந்து நின்றானே
குன்றாப் புகழைக் கொண்டானே.

- க. சண்முக சிதம்பரம்,
விளையும் பயிர் நூலில்



வெட்டப்படுகிற பொழுதிலெல்லாம்
உடனே கிளர்ந்து எழுந்தது.
வெட்டிக் கொண்டே இருந்தார்கள்...
எழுந்து கொண்டே இருந்தது.
வெட்டுபவனுக்கு வேரின்
ஆழம் தெரியவில்லை.
வேரை வெட்டினாலும்
விழுதுகள் முளைத்து எழுந்தன.
தாங்கி நின்றன

மெல்லத் தமிழினிச் சாகும்
என்கிறார்கள்
வேரோடும் விழுதுகளோடும்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
மின்தமிழில் முதல்
வரிசையில் நிற்கும்
எம்தமிழ் மக்கள்.

- தமிழ்க்கனல்
தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி



எனக்குக் கவிதை ஒன்றுமே தெரியாது
காலையில் எழுந்ததும் உழைப்பு
மாலைவரை
முழுவதும் உழைப்பு
சரியான நேரத்திற்கு
நண்பர்களைச் சந்தித்து
பேசுதல், மகிழுதல்
கவிதை எதற்கு வேண்டும் ?
நானே ஒரு கவிதை

- ப. சுப்பிரமணி



கல்

அனாதையாகக் கிடந்த
கல்லை எடுத்துப் பார்த்தேன்
திருப்பி திருப்பி
பக்கவாக்கில்
நெடுவாக்கில்
குறுக்குவாக்கில்

எப்படிப் பார்த்தும்
கண்டுபிடிக்க முடியவில்லை
கல்லில்
முன்புறத்தையும்
பின்புறத்தையும்.

- பொன். குமார்.



வெற்றிகரமாய்
மழை நீர் சேகரிப்பு
மழை.

அரிசி இல்லை
ஆணுறை உண்டு
நியாயவிலைக்கடை.

கவனம்
விபத்துப் பகுதி
பெண்கள் கல்லூரி.

- இரா. இரவி.



பாரதி இன்று இருந்திருந்தால்...

குடும்ப அட்டையில் எச் முத்திரை
குத்தியிருக்க மாட்டான்.... ஏன் தெரியுமா ?
இன்றும் அவனது வருமானம்
அய்யாயிரத்திற்கும் கீழ்தான் இருந்திருக்கும்.
வயிற்றைவிட இதயத்தை பெரிதாய் நினைத்தவன்
காவேரி நீரை தரமறுக்கும் கயவர்களின்
கன்னத்தில் அறைந்து இருப்பான்.
கேரள அணை நீரை உயர்த்த மறுக்கும்
கேரளத்தவருக்கும் சூடு கொடுத்து இருப்பான்.
அரிதாரம் பூசும் நடிகனை அவதார புருசனாக்கும்
அடிமுட்டாள் ரசிகனை காரி உமிழ்ந்திருப்பான்.
பிறந்த மண்பற்றோடு கர்னாடகம் சென்று விட்டவனுக்கு
தமிழ் மண்ணில் விழா எதற்கு என மிதித்து இருப்பான்.
ராமருக்குக் கோயில் என்ற பெயரில்
ரத்த ஆறு ஓட்ட நினைக்கும் ஓநாய்களை உதைத்து இருப்பான்
உலகமயம் என்ற பெயரில் நாட்டைச் சுரண்டிடும்
ஊழல் அரசியல் வாதிகளுக்கு கசையடி தந்து இருப்பான்
சாதியின் பெயரால் வயிறு வளர்க்கும்
சுயநலக்கூட்டத்திற்குத் தலையில் கொட்டு வைத்து இருப்பான்
கருவறையிலேயே கல்லறை கட்டிடும்
கயமைத்தனத்திற்கு முடிவு கட்டியிருப்பான்.
வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் நடக்கும்
வடிகட்டிய முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பான்.
வரதட்சணை என்ற பெயரில் மாந்தரைக் கொளுத்தும்
வீணர்களை வெட்டி வீழ்த்தியிருப்பான்.
முட்டாள் தனத்தின் உச்சகட்டமாக ஒளிபரப்பும்
மர்மத்தொடர் தயாரிப்பாளர்களின் தலையை வாங்கி இருப்பான்.
பகுத்தறிவு பயன்படுத்தாமல் மூடநம்பிக்கையில்
மூழ்கிக் கிடக்கும் தமிழரை சிந்திக்க வைத்து இருப்பான்.

- இரா. இரவி.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061