இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 12

1 மார்ச்சு 2004


அன்புடையீர். வணக்கம்,

இது எங்களது 12 ஆவது இணையஇதழ். அனைத்து இதழ்களும் இந்த இணைப்பிலேயே உள்ளன. தரமான பாக்களைத் தேடிப்பிடித்து இந்தப் பகுதியில் வெளியிடுகிறோம், எழுதுகிற எழுத்துகள் சுயநலநோக்கில் அடிவருடுபவைகளாக இருக்கவேண்டாம். நடக்கிற நிகழ்வுகளை உற்றுநோக்கி இலக்கியச் சுவையோடு படைப்புகளாக்கவும். இவைதான் காலம் கடந்து நின்று பேசும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


உரைவீச்சுகள்

இணையத்தில்,

dokavithai குழுமத்தில் கண்ட பாக்கள்



போகிற இடத்தில்
என்னை விட
அழகாய்,
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை

அறிவுமதி,

தமிழோசை பதிப்பக வெளியீடான
அறிவுமதி கவிதைகள் தொகுப்பிலிருந்து (விலை 100)



படித்தால் வராது, பார்த்தால் வராது
கடிக்க மென்மை, வெண்மை தடிப்பும்
பட்டறிவால் மட்டும் செய்யும் பண்டம்
இட்டிலிக்கும் உண்டே இணை.

சட்னி சாம்பாரில் மிதக்க விட்டு
பிட்டுத் தின்ன தட்டில் வட்டமாய்
பட்டாய் பஞ்சாய் ஆவி பறக்கும்
இட்டிலிக்கும் உண்டே இணை.

கெட்டிச் சட்னி தொட்டுத் தடவி
சொட்டு நல்ல எண்ணை கொட்டி
வெட்டி விழுங்க வசதியாய் இங்கு
இட்டிலிக்கும் உண்டே இணை.

வாயில் பல்லிலாத வயதான கிழத்துக்கும்
பாயில் தவழும் பச்சைக் குழந்தைக்கும்
கட்டிலில் நோயில் கிடப்பார்க்கும் கொடுக்க
இட்டிலிக்கும் உண்டே இணை.

பட்டினி வயத்தோடு பயணம் போகையில்
திட்டமாய் மிளகாய்ப் பொடியும் இட்டு
கட்டிக் கையில் எடுத்துப் போய்த்தின்ன
இட்டிலிக்கும் உண்டே இணை.

- சுவாமிநாதன் -

nswaminathan@socal.it.com
நன்றி http://www.yahoogroups.com/group/dokavithai



இது சரியில்லை
அது சரியில்லை
எதுவுமே சரியில்லை
ஒவ்வொரு நிமிடமும்
சொல்லிக்கொண்டே
இருந்தான்.

எது சரி
அதையாவது சொல்....
என்றேன்

அன்றிலிருந்து
என்னிடம் சொல்வதை
நிறுத்திக் கொண்டான்.
சுதந்திர இந்தியாவில்
பிறந்து வளர்ந்த அவன்

தமிழ்கனல்



உள்ளுவது

கூந்தலால் நிராகரிக்கப்பட்ட
எனக்குக் கடவுளருகே
பதவி உயர்வு
அர்ச்சனை வடிவில்.
அரளிப்பூ நான்.

இளசை அருணா - ஓட்டப்பிடாரம்
நன்றி: கந்தகப்பூக்கள் - சிவகாசி



கொத்திச் சீராக்கி
ஊன்றிய விதை
முளைக்காமல்
ஏமாற்றுகிறது

உச்சிச் சுவற்றில்
எச்சத்தில் முளைத்து,
சிரிக்கிறது
ஏதோ ஒரு செடி..

- அம்சப்ரியா -
(பொழில் படைப்பரங்கத்தில் படிக்கப்பட்டது)



மண்

என்னை
என் மண்ணில்
புதைத்தாய்
பகைவனே
என் மண்ணை
எங்கே
புதைப்பாய்

- காசி ஆனந்தன் -
(நறுக்குகள் நூலிலிருந்து)



புகைப்பதை விடு
புற்றுநோயைத் தடு

மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு.

தாயின் பால் குழந்தைக்கு ஊட்டம்
தாய்த் தமிழ்க் கல்வி அறிவுக்கு ஏற்றம்

நீரின் அருமை தாகத்தில்
கண்ணின் அருமை தானத்தில்

புகைப்பதில் பற்று வைத்தால்
நுரையீரலில் புற்று வைக்கும்

நன்றி:-
'ஒட்டிகள்' ஆக்கி, பரப்புரை செய்யும்
விழிக்கொடை விழிப்புணர்வு இயக்கம்
திருவரும்பூர். திருச்சி



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061