இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 11

15 பிப்ரவரி 2004


அன்புடையீர். வணக்கம்,

இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கவும், வளர்த்தெடுக்கவும், பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டி, தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் "பொழில் படைப்பரங்கம்" தொடங்கப்பட்டுள்ளது. இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வளர்தெடுத்து இதழ்வடிவில் அச்சாக்கி வெளியிடுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொழில் படைப்பரங்கத்திற்கு இணையதள பார்வையாளர்களும் கவிதைகள் அனுப்பலாம். உங்கள் பெயரில் படைப்பரங்கில் படிக்கப்பட்டு அச்சாக்குவதோடு, தரமான படைப்புகள் இணையத்திலும் வைக்கப்படும். படைப்பரங்கில் சிறுகதை படித்தல், நாடக அறிமுகம், நூல்கள் அறிமுகம், மரபுப்பாக்கள் அறிமுகம் என்பதோடு, படைப்பரங்க இறுதியில் ஒரு குறும்படம் காட்டுவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. படைப்பரங்கத்திற்காக மின்அஞ்சல் வழிக் கவிதைகளும் அனுப்பலாம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


உரைவீச்சுகள்

இணையத்தில்,

மரத்தடி குழுமத்தில் கண்ட பாக்கள்


அது

பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.

நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.

பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.
நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியது


உலகம் சிரித்தது.
கூடவே நானும்...

உலகம் அழுதது.
கூடவே நானும்...

உலகத்தின் சினம்
என்னுள்ளும் பரவியது.

உலகின் பகைவனோடு,
எனக்கும் பகை.

இப்படியாக கரைந்தது எனது சுயம்.

- சித்தார்த்.


கவிதை
நெஞ்சில எரியும் தீயும்
மசியும் அழுக்கும்
கேட்கா அழுகைகளும்
வசியும் இடம்தான்
கவிதை



மனிதம்
மனிதர்கள்
அலைபோகும் இடமெல்லாம்
அடிபட்டு இழுபட்டு
கழியோடி, மதியோடி
பொதிதேடி இறுதியாய்
கிடைத்ததோ, இல்லாமலோ
காலனின் பதிவில் இடம்தேடி

காலத்தால் மறந்து
பூமிக்கு விருந்தாகி
குறுகி அணுவாகி
பிரபஞ்சத்தில்
கலந்தாகி விடுவீரோ.....

அதற்குள் ஏன் இந்த ஆட்டம் ?
கேட்பார்கள், கோழைகள்
மனிதம் இழந்த பூச்சாரிகள்

வாழ்வு ஒருகணமாயினும்
அதன் அர்த்தம் குறைவாயினும்
மனிதமாய்
கனவாய், உண்மையாய்
சினமாய், சிரிப்பாய்
இரத்தமாய், தசையாய்
வாழ்வதே
மனிதம்




இரயில் பயணங்களில்

"வழி" யனுப்ப வந்தவள் கொஞ்சம்
"வலி"யையும் சேர்த்து அனுப்புகிறாள்.

இருசோடிக் கண்கள்
நேர்கோட்டுப் பாதையில்
சந்திக்கும் பொழுது
போகத்தான் வேண்டுமா ?
எனும் கேள்வியைப்
பறிமாற்றிக் கொள்கின்றன.

கைகளிலும், தோள்களிலும் பைகளைச்
சுமந்து வருவதைப் பார்த்துக்
கேட்கிறாள்......
சுமையாக இருக்கிறதா ?
சிறிது சிந்தனைக்குப் பிறகு
பதில் வருகிறது...
ஆம்.
சுமை கைகளில் இல்லை, இதயத்தில்.

மூளை போகாமல் இருப்பதற்குப்
பொருத்தமான காரணங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறது.

இரயில் புறப்பட,
நொடிகள் குறையக் குறைய
இதயத்துடிப்புகள் அதிகரிக்கின்றன.

கடைசியாய்க் கையசைத்து
வழியனுப்பும் பொழுது
அசைகின்ற கையில் தெரிவது
'போகாதே' என்பதற்குப்
புது'சைகை' யோ !

செந்தில - சிந்தனைச் சிற்பிகள்



என் இளைப்பாறலுக் கென்று
ஓர் இடம்.
நிழல் தரும் மரமில்லை.
பக்கத்து மரம் நிழலைச்
சற்றே விஸ்தரிக்கும் சிலசமயம்.
எப்போதோ கடும் வெயிலுக்குப் பயந்து வந்து
இளைப்பாறின இடம்.

இப்போது கூட அவ்வழியே நடக்கிறபோது
கைநீட்டி அழைக்கும்
புன்னகைத்தபடி சென்று
ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்.
ஒரு நிமிடம் நின்று போகத் தோன்றினால்
அந்த இடமே இலக்காகும்.
மழையின் போது குடைபிடித்து
அங்கே நின்றிருக்கிறேன்.
என்னை ஆசிர்வதிக்கும் யாராவது சமாதியாய்
அங்கே இருக்கிறார்களா எனத் தேடியதுண்டு.

உட்கார்ந்து போக
பிய்த்தெடுக்கப்பட்ட பாறை தவிர
வேறென்ன அங்கு ?
அதன் சொரசொரப்பும், ஒழுங்கற்றதும்
சுகம்.

தூரத்துச் சோளத்தட்டுகளின் அடர்த்தியில்
அடைபட்டது போலிருக்கும்.
பெரிய கட்டணம் கொடுத்து
நுழையும் பூங்காக்களின் குளிர்மை

எனக்காகப் பூங்காவை
மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளக் கூடாதென்று
அது நிழலாய்
ஓட்டிக் கொண்டுவிட்டது


சுப்ரபாரதிமணியன் - 'கனவு', பாண்டியன்நகர், திருப்பூர்.


அன்பான எச்சரிக்கை

சாதி இரண்டொழிய வேறில்லை - இது
சாதிச் சங்கங்களுக்கு ஏன் தெரியவில்லை ?

எத்தனை உசிலம்பட்டிகளில் இன்னும்
எருக்கம் பாலூட்டுகிறீர்கள்.....
பெண்களுக்கு ஏன்
தமிழ்ப் பாலூட்டத் தவறுகிறீர்கள் ?

ஈன்ற பொழுதினிலும்
இருபதாண்டு வளர்ப்பினிலும்
எவ்வளவு ஏசுகிறீர்கள் ?
பெண்மையின் மகத்துவம் தெரியாத
பித்தர்களா நீங்கள் ?

சாதகம் பார்க்கிறீர்கள்
சாதியைப் பார்க்கிறீர்கள்
சகலப் பொருத்தம்
பார்க்கிறீர்களா ?

வசதி பார்த்து வாழ்வு முடித்தீர்
வாழும் வீட்டிலோ வரதட்சணைக் கொடுமை.
தற்கொலைகளைத் தவிர்க்க முடியவில்லை.

உங்களுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை
கணவன் சமைக்கையிலே
காஸ்சிலிண்டர் வெடித்தது என்பது - இனி
எதிர்காலச் செய்தியாகலாம்.

கி.சுதாரஞ்சனி, கெட்டிமல்லன்புதூர், பொள்ளாச்சி 4
(பொழில் படைப்பரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதை)



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061