|
இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 10
31 சனவரி 2004
அன்புடையீர். வணக்கம்,
இது பத்தாவது இதழ். ஒவ்வொரு திங்களும் இணையத்தைக் காணுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே
போகிறது. நட்பு இணைய தளங்கள் thamizham.net இணையதளத்தைப்பற்றிக் குறிப்பு எழுதுவது, பல்வேறு
பார்வையாளர்களையும் ஈர்த்துக் காணவைக்கிறது. இந்தத் திங்களில் 25 நாடுகளிலிருந்து இணையத்தைப்
பார்த்துள்ளார்கள். பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும்பொழுதே தரமாகவும், நம்மக்களுக்குப் பயனாகுகிற
வகையிலும், தரவேண்டுமே என்கிற உந்துதலும் மேலெழுகிறது. இணையதளத்தின் ஒவ்வொரு பகுதியையும்
நுனிப்புல் மேயாது, நுட்பமாகப் பாருங்கள். எம் தமிழ் மக்களுக்குப் பயனாகுகிற வகையில் சுட்டிக்காட்டுங்கள். தொடர்ந்து பயணிப்போம். பதிவு செய்வோம்.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 642 006
குறும்பாக்கள்
இரா. இரவி
(o) அம்மாவாசை நாளில்
நிலவு
எதிர்வீட்டு சன்னலில்
(o) உலக வங்கியில் கடன் இந்தியாவிற்கு
ஊரெங்கும் கடன் குடிமகனுக்கு
அரசு எவ்வழியோ, குடிமகனும் அவ்வழி.
(o) தூண்டில் மீனைப்
பெரிய மீன் தின்றது
பெரிய மீனை மனிதன் தின்றான்.
(o) தோல்விக்குத் துவளாதே
சிறகு வெட்ட வெட்ட
உயரமானது தென்னை.
(o) அப்பா மது போதையில்
அம்மா தொ(ல்)லைக்காட்சி போதையில்
குழந்தை கந்தகக் கிடங்கில்.
(o) மரத்தை வெட்டினார்
நுனிமரத்திலேறி
மதவெறிப் பேச்சு.
(o) கடைத் தேங்காய்
வழிப் பிள்ளையாருக்கு
தாராள மயமாக்கல்.
மழைக்கால இரவுகள்
உடலைச் சுற்றிய போர்வையாய்
குளிர் ஈரம் படர
உள்நுழைந்த ஈரம்
மாயக்கட்டுகளைக் கரைத்துவிட
முளை ஒன்று
வெளியோட்டை உள்ளிருந்து
செல்லமாய் முட்டுகின்ற...
குறுகுறுப்பை உணர்ந்திருக்கும்
ஈரமண்ணுள் புதைந்த விதையாய்
மழைக்கால இரவுகளில்
நான்.....
செந்தில் குமார் - உடுமலைப்பேட்டை.
மனிதன் - நாய் - மனிதன்
பொத்திப் பொத்தி வளர்த்தார்கள்
நெல், கோதுமை, கம்பு - போட்டு வளர்த்தார்கள்
கூடைபோட்டு மூடி வளர்த்தார்கள்
அந்த நாயின் வாயிடுக்கில்
வயிறு தெரிய, சிறகுகள் உதிர்ந்து,
தலை சாய்ந்து, தசைக் கொத்தாக
இரத்தம் உறைந்த பற்களுக்கிடையில்
இருந்தது அந்தக் கோழி.
கோழியைக் காணோம் என்று
அக்கம் பக்கத்து வீடுகளோடெல்லாம்
சண்டைபோட்டுக் கொண்டிருந்த
அவர்களுக்கு அருகிலேயே
அந்த நாய் அமைதியாக
வாலை ஆட்டிக்கொண்டிருந்தது.
தமிழ்க்கனல் - பொள்ளாச்சி
மறப்பேனா ?
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நில யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா ?
நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழந்து
சிதைந்து முடிந்தாலும் - என்றன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா ?
பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா ?
பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வதைத்தாலும் - என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?
- காசி ஆனந்தன் -
நன்றி : காசி ஆனந்தன் கவிதைகள்
வெளியீடு : நா. அருணாசலம், (மாணவர் புத்தகப்பண்னை)
26. ச.ப.சாலை, அடையாறு, சென்னை 20
ஏளனம்
விளையாடியது
வீட்டில் குழந்தை
கல்லை வைத்துச்
சாமி என்றது.
கையில் எடுத்த கயிற்றை
மாலை ஆக்கியது.
அக்கா கிழித்த தாளை
விரித்து இலையாகப் பாவித்தது.
உடைந்த பாட்டில் மூடி
ஆராத்தித் தட்டாம்.
மனதில் குழந்தையாகி
வெள்ளையாக உருண்டையாக இருந்ததை
ஆவலோடு கேட்டேன்.
"கற்பூரமா ?"
ஏளனமாகப் பார்த்துச் சொன்னது
'இதுகூடத் தெரியாதா !
சாக்பீஸ் '
பொன். குமார்,
நன்றி : இனிது கவிதைகள்
வெளியீடு : கனிமொழி
21/15 புது திருச்சிக் கிளை வடக்குத்தெரு,
லைன் மேடு, சேலம் 6
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|