இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 6 16 நவம்பர் 2003 அன்புடையீர். வணக்கம், இது ஆறாவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இணைய தளத்திற்கும், இணைய இதழுக்கும் நண்பர்கள் காட்டிவருகிற ஆதரவும், தொடர்பும் மகிழ்வூட்டுகிறது. ஒருகாலத்தில் கனவாக இருந்தது, இன்று நனவாகி, நினைத்ததை நொடிப்பொழுதில் அச்சாக்கி இணையத்தில் வைத்து, பார்த்து மகிழுகிற, பிறரும் படித்து மகிழ உதவுகிற இந்தச் செயலுக்கு வேராக நின்று உதவி புரிகிற அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சுநிறைந்த நன்றிகள். நீங்கள் படித்துச் சுவைத்ததைப் படியெடுத்துக் கூட அனுப்பலாம். செறிவான படைப்புகள் வலையேற்றம் பெறும். உரிய படைப்புகள் வரும் வரை சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உள்ள படைப்புகள் வெளியிடப்படும். என்றும் அன்புடன், பொள்ளாச்சி நசன், 642 006
உரைவீச்சுகள் கற்சிலைகள் தீபத்தின் வெளிச்ச இருட்டில் தன்னைத் தான்கூடப் பார்க்க முடியாத தெய்வங்கள் வழிபட்டுச் செல்லுகின்ற மனித முகங்களில் தம் முகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன. செந்தில்குமார் - உடுமலைப்பேட்டை. குறும்பாக்கள் விவாகரத்து நடக்கும் என்று அறிந்தும் திருமணம், அரசியல் கூட்டணி தொடங்கிவிட்டது வரன் தேடும் படலம் உயர்ந்து விட்டது, ச'வரன்' விலை. இறைவன் படையலில் காணவில்லை வடை, அறு'வடை' இல்லாததால் அ. மாணிக்கவள்ளி - உத்திரமேரூர் நிலையாமை மகுடம் தாங்கிடும் மல்லுடல் மன்னரும் மாங்கனி தேன்கனி ஏந்திடும் பெண்டிரும் திகழும் செழுங்கவி முழங்கிடும் புலவரும் தேக்கினில் மாளிகை ஆக்கிடும் சிற்பியும் புகழும் பெருமையும் ஈட்டிடும் அறிஞரும் புத்தியி லாதொரு நித்திய மடையரும் சகலமும் தமக்கென பதுக்கிடும் மனிதரும் சம்போ சிவமெனச் சாற்றிடும் முனிவரும் அகிலமும் தனதென ஆண்டிடும் தலைவரும் அவரையே நம்பிடும் முட்டாள் தொண்டரும் சுடலையில் சமமாய் உறங்கிட நேர்ந்திடும் நிலையது உணர்ந்தால் மகிழ்வது கூடுமே. பொள்ளாச்சி மின்மயானத்தில் அமர்ந்திருந்தபொழுது வெல்டிங் வேலையர் திரு.மா.சிவானந்தம் அவர்களது நெஞ்சில் தோன்றிய நினைவலைகள். கருங்காலிகள் - சி. எஸ். வாசன். - அந்த மாடு பால் கொடுத்தது அதனால் அதற்கு கல் இடுக்கில் படுக்க இடம். அந்த நாயோ வாலை ஆட்டியது அதனால் அதற்கு இடம் மாளிகையின் உள்ளே. நன்றி : புதிய வானம் இதழ் 17 அக் 1980 விமோசனம் - எஸ். கே. எஸ் - இரவெல்லாம் பொறிக்குள் தவியாய்த் தவித்து காலைநேரம் மைதானத்தில் திறந்து விட்டதும் ஓடும் எலி பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள். நன்றி : கஙய இதழ்- ஆகஸ்ட் 78 நாடு - மதுவந்தி - கறுத்துக் கிடக்குது வானம் நீண்டு கிடக்குது பாதை வண்டியோட்டியோ ஆழ்ந்த உறக்கத்தில் பாதையின் பழக்கத்தில் போகுது மாடு ரெண்டும். நன்றி : பூபாளம் இதழ், ஏப்-86 தேடல் - யோகி ஈஸ்வரன் - காட்டில் வெளிச்சம் தேடி நடக்கும் காலில் யதார்த்தமாய் ஒரு முகம் தட்டும் காலில் தட்டியதைக் கையில் தூக்கிப் பின் போன ஒரு முகத்ததைத் திரும்பிப் பார்க்கையில் இருந்த முகம் இல்லாமல் போய் புதியதாய் முளைத்த முகம் ஒன்று தெரிய.... அதுவும் மறைந்து மீண்டும் முண்டம் முகம் தேடிச் செல்லும். நன்றி : பிருந்தாவனம் இதழ் இதழ் எண் 7, 1984 தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061 |