இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 5

02 நவம்பர் 2003


அன்புடையீர். வணக்கம்,

இது ஐந்தாவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இணைய தளத்திற்கும், இணைய இதழுக்கும் நண்பர்கள் காட்டிவருகிற ஆதரவும், தொடர்பும் மகிழ்வூட்டுகிறது. ஒருகாலத்தில் கனவாக இருந்தது, இன்று நனவாகி, நினைத்ததை நொடிப்பொழுதில் அச்சாக்கி இணையத்தில் வைத்து, பார்த்து மகிழுகிற, பிறரும் படித்து மகிழ உதவுகிற இந்தச் செயலுக்கு வேராக நின்று உதவி புரிகிற அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சுநிறைந்த நன்றிகள். நீங்கள் படித்துச் சுவைத்ததைப் படியெடுத்துக் கூட அனுப்பலாம். செறிவான படைப்புகள் வலையேற்றம் பெறும்.

உரிய படைப்புகள் வரும் வரை சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உள்ள படைப்புகள் வெளியிடப்படும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


குறும்பாக்கள்




ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை
- தேவதேவன்-

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.
பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாதது.

எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எபபோதும் தன் தம்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்தது.

அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்கவியலாத படபடப்புமேயாம்.

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.

நல்லடக்கம் செய்யும் சுற்றமோ,
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ,
சமூகமோ, தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது.

நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம் ?

இன்று அது நிறைவேறியதையோ,
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ,
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ,
ஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றியும் கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
செத்துக்கிடந்தது அது.

நன்றி : கனவு காலாண்டிதழ் (எண் 39/40) திருப்பூர்.



கருவமரத்துப் பிசினில்
சிக்கியிருந்த
வண்ணத்துப்பூச்சியை
எடுத்துப்
பறக்கவிட்டபோது
ஓடிவந்து
ஒட்டிக் கொண்டது
காதல்

காதலாகி - நூலில் - இ. இசாக்

நன்றி : சாரல், 189. அபிபுல்லா சாலை, சென்னை 17.




*
மழை பெய்கிறது
நினைவில் ஈரமாய்
ஒரே குடையில் நாம்.

*
நமக்குள் பந்தயம்
தோற்றுப் போகவே ஆசை
தோல்வி தாளாத நீ.

*
அமைதியானவள்
முரண்பட்டுப் போகிறாள்
என்னிடம் அவள்.

*
எனக்குப் பயன்படாதது
என்னிடம் இருக்கிறது
உன் ஒட்டுப் பொட்டு.

*
தொடாமல் பேசிக் கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்தது தூசி
காற்றுக்கு நன்றி !

*
காத்திருப்பில் எழுதாத கவிதை - நூலில் - ஆர்.எஸ்.நாதன்

நன்றி : ரோஜா பதிப்பகம், கும்பகோணம். 612 001.



புலன்களுக்கு அப்பால்

- காளி - தாஸ் -


நான் ஏதோ மலையில்
கல்லுடைப்பதாக யெண்ணி
அனைவரும் அலட்சியமாகப்
பார்த்தனர்
அவர்களுக்குத் தெரியவில்லை
நான்
மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்

நன்றி : ழ - இதழ்



அய்க்கூ - பாஞ்சோ -

தமிழில் சித்தார்த்தா


என்ன தைரியம்
இந்தச் சுள்ளிக் கிளைகளுக்கு
வெட்டிக் கட்டிப் போட்டிருந்தாலும்
மறுபடியும் துளிர்ப்பதற்கு,

நன்றி : உயிர்மெய் - 7 செப் 1984



கண்மூடல்

- துரை. சீனிச்சாமி -


அந்தப் பேருந்து நிறுத்தத்தில்
மேற்கும் கிழக்கும்
பலமுறை நடந்து விட்டேன்.
அவர்கள் பேச்சு
இன்னும் ஓயவில்லை
இமைகள் பிரியவில்லை
இதழ்களில்
எச்சில் மணக்கும்
வார்த்தைத் துணுக்குகள்
இன்னும் உதிரவில்லை
தொடர்ச்சிக்காக
அவளில் அவனில்
ஒத்திகை
நான்
நாடகங்களின்
முடிவுகளை எண்ணி
அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி
அமர்ந்து கொண்டு
கண்களை மூடிக்கொண்டேன்

நன்றி : சுவடு 3 - சூலை 1978



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061