இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 4

19 அக்டோபர் 2003


அன்புடையீர். வணக்கம்,

இது நான்காவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இந்த இதழில், துபாயில் உள்ள நண்பர் திரு.இசாக் அவர்கள் மின்அஞ்சல் வழி அனுப்பி வைத்த அய்க்கூ பாக்கக்ள இடம்பெறுகின்றன.

உரிய படைப்புகள் வரும் வரை சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உள்ள படைப்புகள் வெளியிடப்படும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


குறும்பாக்கள்




துபாயிலுள்ள இசாக்கின் அய்க்கூ பாக்கள்

(வெளிவரவிருக்கும் மழை ஓய்ந்தநேரம் தொகுப்பிலிருந்து)


*
என்னென்னவோ புலம்புகிறேன்
அமைதியாக வாயாடி
புகைப்படத்தில்.

*
முதன் முதலாய் சந்திப்பு
எப்படி அறிமுகமாக
என் மகளிடம்.

*
இன்னும் கணவன் மனைவிதான்
சாட்சிகள்
மடல்கள்.

*
யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்

*
மேடுபள்ளமா
எல்லாம் சமம்தான்
வானூர்தியிலிருந்து பார்.

*
அம்மா அனுப்பிய நொறுக்குத்தீனி
அசைபோட்டேன்
பழைய நினைவுகள் !

*
கனவுகளோடு பறந்தோம்
கனவுகளும் பறந்தது.
துபாய் வாழ்வு.

*
மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை !



அறிவுமதி - அய்க்கூ பாக்கள்.


*
மரம் வெட்டிய கோடாரி
பார்த்துக்கொள்
கடைசி மழைத்துளி.
*

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்
*

மரவியாபாரி பார்க்கிறான்
வேர்முதல் கிளைவரை
குருவிக்கூடு நீங்கலாக.
*

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.
*

நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.
*

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு.
*

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.
*

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ....... நான்.
*

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டிச் சக்கரத்தில் நசுங்கியது
புல்லாங்குழல்.
*

ஒரே தலையணை
வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும்
மல்லிகை மணம்.
*

நன்றி : அறிவுமதியின் கடைசி மழைத்துளி

189. அபிபுல்லா சாலை, தி.நகர். சென்னை 17, ரூ 40

வெளியீடு: தமிழ்முழக்கம் விற்பனையகம், சென்னை 26.




பெருமை

இசைஞானி இளையராசா


நான் சமஸ்கிருதம்
கற்றுக் கொள்ள
ஆரம்பித்திருந்தேன்.
அதனால்
என் அறிவு
வளர்ந்த பாடில்லை.
மாறாக,
"எனக்கு சமஸ்கிருதமும்
தெரியும்"
என்ற ஆணவம்தான்
வளர ஆரம்பித்தது.
யாராவது ஒரு ஸ்லோகம்
சொன்னால்
அவர்களிடம்
உங்களுக்கு இந்த ஸ்லோகம்
தெரியுமோ ?
என்று கேட்டு
எனக்கு அது தெரியும்
என்று காட்டிக் கொள்ளவே
அது பயன்பட்டது தவிர
வேறு எதற்கும்
அது பயன்படவில்லை

வீ.செல்வராஜ் எழுதிய ஞானவித்து நூலில்.

46. Jalan SS4C/B, 47301 Petaling Jaya, Selangor Darul Ehsan, Malaysia.




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061