இலக்கிய இணைய இதழ்

செப்டம்பர் 2003


*********************************** அன்புடையீர்.

வணக்கம்,

சிற்றிதழ்ச்செய்தி இணைய இதழை வெளியிடுவதில். அதுவும் நேரடியாகத் தமிழில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்வு அடைகிறேன்.


இணையதளத்தைப் பார்ப்பதற்காகக் கணினி மையத்திற்குச் செல்லும்பொழுது தமிழிலுள்ள இணைய தளத்தை பார்க்க எழுத்தை இறக்கம் செய்து கொள்ளுங்கள் என்ற கட்டளை வந்தால் அந்த இணைய தளத்தைப் பார்க்காமலேயே அடுத்த இணைய தளத்திற்குத் தாவி விடுவதைப் பார்த்தேன், அந்தப் பார்வையாளருக்கும் உதவுகிற வகையில் இணைய தளத்தைப் பார்க்கும் பொழுதே கணினியில் தமிழில் தெரிந்தால் நன்றாக இருக்குமே என்று எணணினேன்,

இத்தகைய எழுத்தை சென்னையில் உளள நண்பர் திரு,விசுவநாதன் அழகி எழுத்து வடிவமைப்பாளர் ஆக்கியுள்ளதாக அறிந்தேன், சென்னைக்குச் சென்றேன்,

சென்னையில், தியாகராய நகரில், கோபாலகிருட்டினா சாலையில், எண் 28 சுபோதையா அடுக்ககத்தில் சாதனையாற்றும் துடிப்புடைய இளைஞரான

திரு,விசுவநாதன் அவர்களைச் சந்தித்தேன்,

அவர் ஆக்கியுள்ள புதிய அழகி எழுத்தின்

உதவியினால்தான் இன்று நான் உங்களோடு நேரடியாகத் தமிழில் தொடர்பு கொள்ள முடிகிறது, அனைத்து வாழ்த்துகளும் அவருக்கே சேரும்.

நமது பகுதியிலேயே இப்படிச் சாதனை ஆற்றவேண்டும் என்ற துடிப்புடன் இயங்குகிற இவரை நாம் வாழ்த்தி வளர்த்தெடுப்போமாக.

இதழாளர்களின் தொடர்பிற்காகவும், படைப்பாளிகளின் படைப்பாக்கத் தளத்திற்காகவும் இந்த சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழை வெளியிடுவதில் மகிழ்வு அடைகிறேன்,

இந்த இதழில் படைப்புகள் கவிதை, துணுக்குகள், சிறுகதை, கட்டுரை, என்கிற பன்முக வடிவில் அமையும். படைப்பாளிகள் த்ஙகளது தரமான, மக்கள் நலம் சார்ந்த, மக்களுக்கு உணர்வேற்றுகிற படைப்பாக்கங்களைப் படைத்து அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்,

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள். இந்தச் சாதனைகள் பற்றிய குறிப்புகளை இந்த இதழில் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன், சாதனையாளர்கள் தங்களது ஆக்கங்கள் பற்றிய குறிப்புகளை அனுப்பி உதவவும்,

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்நத போதிலும் அவர்களது ஆழ்மனதில் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. இவை பல்வேறு படைப்புகளாக அவர்களால் ஆக்கப்படுகின்றன. இப்படி ஆக்கப்படுகிற படைப்புகளும் இந்த இதழில் இடம் பெறும், படைப்பாளர்கள் எழுதி அனுப்பவும்.

தமிழகத்திலுள்ள இதழாளர்கள், படைப்பாளிகள் இந்த இதழைப் பயன்படுத்திக் கொளவார்களாக.

உரிய படைப்புகள் வரும் வரை இதழில் சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உளள படைப்புகள் வெளியிடப்படும்.

தற்பொழுது 15 நாள்களுக்கு ஒருமுறை இதழைப் புதுப்பிப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது,



என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், ***********************************


குறும்பாக்கள்


இடையனை வாங்கச் செலவு செய்யும்

விசித்திர செம்மறி ஆடுகள்

பெண்கள்


இந்தக் கோர்ட்டில்

கைதி தீர்ப்பு வழங்குகிறான்

கிளி ஜோசியம்


குப்பைத் தொட்டியைச் சுற்றி

பிச்சைக்காரர்கள்

மிச்சம் வைக்கவேண்டும் உணவை


மாடு சம்பாதித்துக் கொடுத்த காசில்

மாடு ஓட்டி வாங்கினான்

சாட்டை


இரதமாய் நினைத்து இழுத்தார்கள்

பிண ஊர்தியை

சிகிரெட்


அதிகமாய் அழுதது

ரப்பர் மரம்

முதலாளிக்குச் சிரிப்பு


பயணியாக ஏறினேன்

நோயாளியாக இறங்கினேன்

பேருந்துக்குள் அவள்

அ. சையது அலி - பெருந்துறை ***********************************


பரிதி ஆத்திச்சூடி

அன்புப் பயிர் செய்

ஆற்று வளம் பெருக்கு

இனவெறி எதிர்

உழைப்பே செல்வம்

ஊக்கமே உயிர்

எளிமையே வலிமை

ஏழ்மையை ஒழி

ஐயம் தெளி

ஒருமுகம் பெறு

ஓராயிரம் கண் கொள்

ஒளவையைப் போற்று

கடவுளை நம்பாதே

கானுயிர் கண்கள்

கிளர்ந்து கீழ்மை யொழி

கீரை உண்

குறுதிக் கொடை நன்று

கூண்டுப் பறவை ஆகாதே

கெட்டியாகப் பற்று

கேண்மை பலங்கொள்

கைகளே வாள்

கொள்ளி வை பேய்களுக்கு

கோளறிவு கொள்

ஞலவலாகாதே

ஞாலம் உன் இல்லம்

ஞெகிழியாய்ச் சிந்தி

ஞேய உள்ளங்கொள்

சமநிலை ஆய்வுகொள்

சாதிகளைச் சாகடி

சிறந்தன விரும்பு

சீர்திருத்தம் செய்

சுருங்கி வாழாதே

சூழலைப் பேணு

செரித்த பின் உண்

சேமிக்கும் கலையறி

சொர்க்கம் நரகம் பொய்

சோர்வற்று உழை

மா. தமிழ்ப் பரிதி - சின்ன சேலம் ***********************************


நாணம்

நீ

தலைகவிழ்ந்து நின்றால்

நான் நம்பி விடுவேனா ?

நாளை

பாடுபட்டவன் பசித்திருக்க

பணக்காரன் பந்தாயத்தில்

படுத்திருக்கப் போகும்

நெல்லின் கதிரே

இன்று

உனக்கேன் நாணம் ?

இரும்பொறை - புதுக்கோட்டை ***********************************


கட்டை வேகுமா ?

- தமிழ்க்கனல் -


உலகில் குழந்தையாகப் பிறந்தவரெல்லாம் ஓர்நாள் மரக்கட்டையாக வீழ்ந்துதான் ஆகவேண்டும்

இது விதிக்கப்பட்ட முடிவு...,

பிறந்த நாள் முதலிலிருந்து இறக்கும் நாள் வரையுள்ள ஒவ்வொரு நாள்களிலும் நாம் என்ன செய்கிறோம். இந்தச் செயற்பாடுகள்தான் நம்முடைய கட்டை வேகுமா ? வேகாதா என்பதை முடிவு செய்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு உத்தமபாளையம் தேனீக்கு அருகிலுள்ள தேக்கடிக்குச் சென்று இருந்தேன். அருமையான இடம். மலை மீது ஏற ஏற குளிர் காற்று மெதுவாக வந்து வருடியது. தேக்கடியை நெருங்க நெருங்கச் சூழல் மாறிக் கொண்டே வந்தது,

மிக உயர்ந்த மரங்கள்., மிகப் பெரிய மரங்கள்., கிளைகளைப் பரப்பி, பரந்து, விரிந்து பாதையில் நிழலைப் பரப்பிக்கொண்டிருந்தன,

அனைத்து மரங்களின் வேர் முடிச்சுகளும் பெரியதாக இருந்தன. மண்ணுக்கு மேல் திட்டுத் திட்டாக இருந்து மிரட்டின. மேலே பார்த்தால் தலை சுற்றியது. பல ஆண்டுகளாக வெட்டப் படாத பெரிய பெரிய மரங்கள்.

இலைகள் ஒவ்வொன்றும் மிகப் பெரியதாக இருந்தன. காய்நத சறுகினாலும், புற்களாலும் மூடப்பட்ட மண் மேடுகள் பார்க்கப் பார்க்க மகிழ்வூட்டின. மரத்திற்கு மரம் குரங்குகள் கும்பல் கும்பல்களாகத் தாவிக் குதித்தன. பல வகையான பறவைகளின் மென்மையான ஒலி நுட்பமாகக் கேட்டன. இயற்கையாக... பசுமையாக... குளிர்ச்சியாக... லேசான தூறல்...

துளித்துளியாய் நீர்த் துளிகள் உடலைத் தொட்டன. உடல் சிலிர்த்தது.

புதிய உலகில் நுழைந்ததைப் போன்று உணர்ந்தேன்.

எத்தனையோ மனிதர்கள் வருகிறார்கள். போகிறார்கள்.

இருந்தாலும் தாள், குப்பை, ஞெகிழிப் பொருள்கள் எதுவுமே காணப்படவில்லை. சுத்தமாக, இயற்கையாக இருந்தது. முறைபடுத்தப்பட்ட இடம்.

பொறுப்பாளர்களை வாழ்த்த வேண்டும்,

சட்ட திட்டங்கள், கண்டிப்புகள் - நம்மை - நம் சூழலை முறைபடுத்தும் என்றால் அது வாழ்த்துதற்குரியதே, வணங்குதற்குரியதே.

நீரின் மீது மிதந்த படகுப் பயணத்தில், உயர்ந்த மலைகள், மரங்கள் மூடிய மலைகள், விலங்குகள், பறவைகள், படகில் இருந்த நாங்கள் - எனப் புதிய ஒரு உலகம்தான் எங்கள் முன் இருந்தது, பயணம் முடிந்து பேருந்தில் கீழே இறங்கினோம். பத்தே நிமிடத்தில் கீழே வந்துவிட்டோம்.

கீழே...

மரங்கள் இல்லை,

புழுதிக் காற்று....

செம்மண் மேடுகள்....

ஒட்டிய வயிறுடன் மக்கள்,

தமிழக எல்லைக்குள் வந்து விட்டதைப் பயணம் உணர்த்தியது.

மரம் நடுவதற்கு விருப்பமில்லாத இந்த மனிதக் கூட்டம்...

மரக் கட்டைகள்...

இந்தக் கட்டைகள் வேக இங்கு மரம் கிடைக்கமா ?

இந்தக் கட்டைகள் வேகுமா ? வேகாதா ?

***********************************

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,