கைகாட்டி. 1971 இல் தமிழ்க்குடிமகன் ஆசிரியராக இருந்து மதுரை 2, அல்லி அச்சகத்திலிருந்து அச்சாக்கி வெளிவந்த தனித்தமிழ் திங்களிதழ். இதழில் ம.இ,லெ,தங்கப்பா, இறையன், மாகிபை பாவிசைக்கோ, பறம்பை அறிவன், முத்து அரங்கராசன், தி.நா.அறிவு ஒளி, தரங்கை பன்னீர் செல்வம், ஆ.சின்னச்சாமி ஆகியோர் படைப்பாக்கங்களைப் படைத்துள்ளனர். வந்து குவிந்த வாழ்த்துகள் என மூன்றாவது இதழிலேயே நிறைய மரபுவாழ்த்துப் பாக்களை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலியில் இயங்கிய தனித்தமிழ் இலக்கியக் கழகம் அறிவித்துள்ள கல்லூரிக் கட்டுரைப் போட்டி பற்றிய செய்தியினை வெளியிட்டு பா,வளன்அரசுக்கு அனுப்பவும் எனக் கேட்டுள்ளது. இதழின் ஒவ்வொரு படைப்புகளும் தனித்தமிழாக இருந்து தமிழுக்கு வளம் சேர்ப்பவைகள். இதழின் உ.த.க.வின் கொள்கை முரசாம் முதன்மொழி படியுங்கள் என அழகாபுரம் சேலத்திலிருந்து வெளிவந்த இதழ் பற்றி வெளியிட்டுள்ளது.

இதழின் தமிழ்க்குடிமகன் எழுதியுள்ள கவிதை இது,

( இந்த இதழிலுள்ள அட்டைப்படக் கவிதை )

எந்தத் திசையில்....

புதுநோக்குத் திரைப்படங்கள் தோல்வி யேற்க
புலனுணர்ச்சிக் கதைகளெலாம் காசு சேர்க்கும்
எதுநோக்கம் என்றறியா ஏடு விற்கும்
இலக்கத்தில் தூய்தமிழ்க்காய் எழுந்து நிற்கும்
பொதுநோக்குத் தாளிகைகள் படுத்துப் போகும்
போலிகளோ புகழ்சேர்க்கும் பொருளும் சேர்க்கும்
இதுநோக்கும் நெஞ்சங்கள் எரிந்து சாகும்
எதுதான்நம் திசையென்றே திகைத்து நிற்கும்

- தமிழ்க் குடிமகன் -


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,