கிராம ஊழியன். 1944 ஆகஸ்டில் வெளிவந்த இதழிது. இது எட்டாமாண்டு இதழ். இதழ் எண் 23. மாதம் இருமுறை இதழாக மலர்ந்துள்ளது. "எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்ற கவிதை வரிகளைத் தலைப்பிலிட்டு இதழ் தொடாந்துள்ளது. திருச்சி துறையூரிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. திரிலோக சீத்தாராம் இதழ் ஆசிரியராக இருந்துள்ளார். பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. தனியிதழ் விலை 4 அணா. ந.பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், அ.வெ.ர.கி., கலைவாணன், தி.ஜானகிராமன், எம்.டி.வாசுதேவன் - எனப் பிற்காலத்தில் இலக்கிய வித்தகர்கள் எனச் சிறப்பாகப் பேசப்பட்ட அனைவரும் இந்த இதழில் எழுதியுள்ளனர். இதழின் உள்ளடக்கம் பொழுதுபோக்காக இல்லாமல் நுட்பமான மூளைச் செறிவேற்றுகிற இதழாக உள்ளது. கருத்தினை பன்முக ஆற்றலோடு காணுகிற தன்மையும், அதன் உள்ளார்ந்த நுட்பத்தை வெளிப்படுத்துகிற தன்மையும் ஒவ்வொரு படைப்புகளிலும் மேலோங்கியுள்ளது. இந்த இதழில் வெளியாகியுள்ள சிறுவர்களுக்கு என எழுதப்பட்ட "வேட்டை" சிறுகதை கூட, இறுதியில் ஒரு மின்னல் வீச்சைக் கொண்டு முடிந்துள்ளது. இதழின் பக்கங்கள் நேர்த்தியாக அச்சாக்கப்பட்டுள்ளன. சாதாரண அச்சு இயந்திரத்தை வைத்து தற்கால ஒளியச்சு முறையையும் விஞ்சும் அளவிற்கு அச்சாக்கியுள்ளது, இதழின் மீது பொறுப்பாளர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,