சென்னையிலிருந்து கல்விக்காகத் தொடங்கியுள்ள இதழ். கல்வி என்பது உயரியது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு புத்தகம். குழந்தைக்கான அணுகுமுறைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். கற்பிப்போர் சொல்லக் கேட்டு - கற்பவரின் கண்களில் வெளிச்சம் தோன்றினால் அதுவே - உண்மையான கற்பித்தல் நிகழ்வு. மனப்பாடமும், தன்வளர்ச்சியும், போட்டியும் - கல்வியில் கலந்து - வணிகமாகிப்போன நிலையில் இன்று கல்வி உள்ளது. இன்றைய கல்வியின் அடிப்படைக் கயிறு கல்வியாளர்களிடம் இல்லை. பொம்மைகள் மட்டுமே நம்மிடம் உள்ளன. அவை ஆடுவது யாராலோ !

இந்தநிலை மாறினால்தான் படிப்பவன் மேலெழுவான், சாதனை புரிவான், மனிதனாக இருப்பான், ஆய்ந்து கண்டு உலகுக்கு அளிப்பான் - இல்லையெனில் சுயநலக் கும்பல்களுக்கான ஏணிப்படிகளை அமைப்பதாகவே கல்வி அமையும். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழைத் தமிழாகவும் கற்றுத் தருகிற - இதழ்களில் பயன்படுத்துகிற தன்மையே உயர்நிலை. இதனை இதழாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். கல்வியைப் பற்றி பேசுகிற இந்த இதழுக்கான வேலை நிறைய உள்ளன. திட்டமிட்டுத் தரமாக, கருத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி, கல்வியை நோக்கிய அணுகுதல்களாகத் தொடர்ந்து வெளியிட்டால் - காலம் கடந்தும் பேசப்படும், இதழ் தொடர அன்பு வாழ்த்துகள்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,