பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழான யாதும் ஊரே தொடர்ந்து இலக்கியத் தரமாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இதழையும் ஒரு சிறப்பு மலராக வெளியிட்டு வருகிறது. இந்த இதழ் கப்பலோட்டிய தமிழரின் சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. நாட்டுக்காக, பொருளை இழந்து கப்பல் போக்குவரத்தினை ஆங்கிலேயனுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று எண்ணி - இயங்கி - அதன் விளைவாக - கோவைச் சிறையில் செக்கிழுத்து துன்புற்ற வ.உ.சி அவர்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் பொழுது நெஞ்சு தடுமாறுகிறது. இப்படியெல்லாம் பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் இன்று மக்களுக்கான வழிநடத்துதல்களாக இல்லாமல் - தனிமனிதரின் சொந்த - இலாபத்திற்காக - ஏலமிடப் படுவதைக் கண்டால் நெஞ்சு துடிக்கிறது. ஏன் இந்த அவல நிலை? நம் தமிழ் மக்களுக்கு இயங்கியவர்களை முறையாக அறிமுகம் செய்ய வேண்டியது நமது கடன் அல்லவா? இந்தச் செய்திகள் எல்லாம் நம் மக்களுக்குச் செல்ல வேண்டும் அல்லவா? திரட்டித் தருகிற இதழாளர் வணங்குதற்குரியவரே.

வ.உ.சி - என்பவர் செக்கிழுத்த செம்மல் என்பதோடு நின்றுவிடுகிறதே. அவர் எழுதிய நூல்கள் அவரை தமிழ்ச் சான்றோராகக் காட்டுகிறதே.! ஏன் இவர்கள் இப்படி அறிமுகப்படுத்த வில்லை.? இவரது நூல்கள் பற்றிய குறிப்பை படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது. வரலாற்றைத் தொலைத்தவன் தமிழன் என்று - என் நண்பர் அடிக்கடி கூறுவது சரியென்று உணர்கிறேன். இதழாசிரியருக்கு என் அன்பு வாழ்த்துகள்.



இதழ் எண் - 120, விலை ரூ 10, எண் 6. ஆனநதன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75 லிருந்து இதழ் வெளிவருகிறது. இதழின் ஆசிரியரும் வெளியிடுபவரும் நா.வை. சொக்கலிங்கம் - அலை பேசி 94446 52988

ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழாக மலர்ந்து வருகிறது. இந்த இதழ் இராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்களது சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. அநீதியற்ற உரிமையுலகை, மூடநம்பிக்கையற்ற உரிமையுலகை, உரிமை பெற்ற முழு உலகைக், காண விரும்புகிறேன் - என்று எடுத்துரைததவர் இங்கர்சால். ஏன் ? எதற்கு ? எப்படி ? எதற்காக ? - என்ற வினாக் குறிகளை நிறுததிச் சரியான விடை, பகுத்தறிவிற்கு ஏற்ற பதில் கிடைத்த பிறகே எதையும் நம்பு, செய் - என்று மதவெறி மிகுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டவர் இந்தப் பகுத்தறிவாளர்.

கல்வி - இந்த உலகில் கல்வி ஒன்றுதான் அடிமையை ஒழிக்கும் ஆற்றல் உடையது. கல்வி பயில்வதைவிட அடிமைத்தனத்தை ஒழிக்க வேறு வழி கிடையாது. கலவி வாசனை அற்றவர்களுக்கு எழுத்துகளைக் கற்றுக் கொடுப்பது புரட்சிக்கு கால்கோளிடுவதாகும். ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டுவது ஒரு கோட்டையை எழுப்புவதற்குச் சமமாகும். ஒவ்வொரு வகையான விடுதலையும் ஒவ்வொரு பாசறையாகும். ஒவ்வொரு உண்மையும் ஓர் இரும்புக் கவசம் அணிந்த போர் வீரனாகும்

கலிலியோ சாகடிக்கப்பட்டார் - உலகிற்கு நன்மை செய்ய முயன்ற கலிலியோ ஆலயவாசிகளால் கைது செய்யப்பட்டான். கொடும் சிறையில் அடைக்கப்பட்டான். முழங்கால் மண்டியிட்டு பைபிளைக் கையிலேந்தித் தான் செய்த குற்றததிற்காக மன்னிப்புக் கேட்குமாறு பலவந்தப்படுத்தப் பட்டான். ஒருநாள், இருநாள்கள் அல்ல, பத்து ஆண்டுகள், சிறையிலேயே அடைபட்டுச் சித்தரவதையை அனுபவித்தான். இறந்தான். அவனுக்கு விடுதலை வாங்கித்தர மரணம்தான் மனமிரங்கியது. அவன் இறந்த பிறகும் ஆலய வேந்தர்கள், கலிலியோவின் உயிரற்ற உடம்பை அனைவரையும் புதைக்கும் மயானததில் புதைக்கக்கூட அனுமதிக்க வில்லை. மதத்தின் கொடுமை இத்தகையது. உலகம் உருண்டை என்று கலிலியோ சொன்னார் என்று இன்று பாடப்புத்தகத்தில் மனப்பாடம் செய்து கொண்டு இருக்கிறோம்.



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் 119 ஆவது இதழ் இது. இனநலப் போராளி இரட்டைமலை சீனிவாசன் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு மலர் (7-7-1859 - 18-09-1945) விலை ரூ 10. இதழின் ஆசிரியர் உரையில் தமிழக அரசு மூன்று ஒழிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 1) சாதி ஒழிப்பிற்குத் திட்டம் வகுத்துச் செயற்படுவது 2) ஆங்கில போதையை ஒழிப்பது 3) மது போதையை மக்களுக்கு அரசே ஊட்டுவதை நிறுத்த வேண்டும். இது உண்மையானது தான் - சரி எது எனத் தெரியாமலா இருக்கிறது? இந்த மூன்றும்தானே ஓட்டுவங்கியின் ஊற்றுக் கண்கள், வாக்குச் சீட்டிற்காகவே அரசியல் நடத்தும் நிலையல்லவா இன்று உள்ளது.இதழில் இரட்டை மலை சீனிவாசன் பற்றிய ஏராளமான செய்திகள் - பல்வேறு படைப்பாளிகளாலும், தொடர்பாளர்களாலும் எழுதப்பட்டுள்ளது. இவரகளது படைப்பாக்கங்கள் கிடைத்தற்கரியவை. பறையன் இதழ் பற்றிய குறிப்பும், பல்வேறு வரலாற்றுச் செய்திகளும் உயர்தரத்தவை. தமிழுலகமே இந்த இதழுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஒவ்வொரு திங்களும் ஒர் இயங்கிய தமிழாளரை பதிவு செய்து - தொகுத்து, அச்சாக்கி வெளியிடுவது வாழ்த்துதற்குரியது.



சென்னையிலிருந்து பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழாகத் தொடர்ந்து வருகிற தரமான இதழ். இந்த இதழ் எண் : 115. டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாச் சிறப்பு மலராக இந்த இதழ் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு வலையேற்றத்தின் பொழுதும் இந்த இதழைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் தமிழின், தமிழனின், தமிழ் மண்ணின் - வரலாற்றுப் பதிவை, இயங்குதலை, செல்ல வேண்டிய பாதையை மிகச் சரியாக - வெளியிடுகிற இதழாக இது இருக்கிறது. இந்த வரிசையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஒரு சில இதழ்களே இடம் பிடிக்கின்றன. இதழாளர்கள் இந்த நுட்பங்களை உணர்ந்து கொண்டு தங்கள் இதழைச் செழுமைப் படுத்தக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

இதழின் தலையங்கத்தில் தமிழீழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெற வேண்டாமா? என்ற வினாவோடு தொடங்கி ஈழத்தில் தமிழர்கள் படும் வேதனையை வெளிப்படுத்தி, தமிழர் விடுதலைக்காகக் குரல் கொடுக்கிறது. ஆங்கிலத்தை அழிக்கச் சென்றவர்கள் மீது தடியடி எனச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளது. தமிழர்களின் இன்றைய நிலை பற்றிய பழ.நெடுமாறன் அவர்களது கட்டுரை அருமை. இதழில் உள்ள கோட்டோவியங்கள் நடப்பு காட்டுபவை. மதியால் வித்தகர், மனத்தால் உத்தமர் என்ற தலைப்போடு இராசமாணிக்கனார் பற்றிய செய்திகளை இதழ் முழுவதும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இராம் மோகன் அவர்களது முயற்சியால் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் ஒன்றிணைந்த ஆண்டு விழா நிகழ்வு பற்றிய செய்தியைப் படத்துடன் வெளியிட்டுள்ளது.



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு இதழாகத் தொடர்ந்து வெளிவருகிற தரமான இதழ். இது 114 ஆவது இதழ். விளம்பர நோக்கமின்றி, பொருளாதார இழப்புகளுக்கு இடையில், மிகத் தரமாக மொழி, இனம், மக்கள் என்கிற கருத்தினை உள்ளடக்கி, வரலாறு காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிற திங்களிதழ். இந்த இதழில் சமூகப் புரட்சியாளர் தந்தை சிவராஜ் பற்றிய செய்திகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கொள்ளையோ கொள்ளை மதுவுக்கு அரசு, கல்விக்குத் தனியார் என்ற கட்டுரை உணர்வூட்டுவதே. இந்த இதழ் 12 ஆம் ஆண்டின் தொய்வின்றித் தொடர்ந்து வெளிவருகிறது. பார்வையாளர்கள் ஆண்டுக் கட்டணம் செலுத்தி வளர்க்க வேண்டுகிறேன். (ஆண்டுக் கட்டணம் ரூ100 - 6. ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர். பம்மல் , சென்னை 75 - கைபேசி 9444014181) வெந்தபின் கடலைத் திருப்பினாலும் வீடு திரும்பாது, வடமொழி ஆட்சியைத் தடுத்த பாம்பன் அடிகளார், கோயில் பார்ப்பனர்களின் குற்றங்களம் தண்டனைகளும், தமிழ் நாட்டில் தமிழ் ?!, மதமா? மக்களா?, பெரியாரும் அண்ணாவும் பிரியாது இருந்திருந்தால் தொடர், என்ற கட்டுரைகள் உயர்தரத்ததாக உள்ளன. மேலும் குறிப்புரைகளும், உரைவீச்சுகளும், மக்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.



சென்னையிலிருந்து நா.வை.சொக்கலிங்கம் அவர்கள் தொடர்ந்து, மிகச் சிறப்பாக நடத்தி வருகிற இதழ் இது. பார்வையாளர்கள் பத்தாண்டுக்கான புரவலர் கட்டணம் ரூ1000 செலுத்தினால் மிகவும் நல்லது. தமிழன் வளர, தமிழ் மேலெழ திட்டமிட்டு தரமான கட்டுரைகளையும், படைப்பாக்கங்களையும் தொடர்ந்து தருகிற இதழ் இது. புரவலர் கட்டணம் ரூ 3000 - பொருளாதார வசதி படைத்தவர்கள் அருள்கூர்ந்து இந்த இதழில் புரவலர் ஆகுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். இது 111 ஆவது இதழ். இந்த இதழில் கவிஞர் புதுவை சிவம் நூற்றாண்டு மற்றும் பிறந்தநாள் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. இவர் திராவிட இயக்கங்களின் புதுவைத் தந்தை ஆவார். இன உணர்வோடு தொடர்ந்து இதழ் வெளிவந்து கொண்டிருப்பது வணங்குதற்குரியதே.



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பிதழ். தமிழிய உணர்வோடு, வணிக நோக்கமற்று சிறப்பாக வெளியிடுகிற இதழ் இது. இந்த இதழில் தமிழன் இதழை நடத்திய திருமிகு அயோத்திதாச பண்டிதர் அவர்களின் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. ஒரு பைசாத் தமிழன் நூற்றாண்டு விழா மலராக இதழ் மலர்ந்துள்ளது. மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அயோத்திதாசர் பற்றிய குறிப்புகள் உயர்தரத்ததாக உள்ளன. தமிழன் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய தரமான இதழ் யாதும் ஊரே இதழாகும். இதழ் தொடர வாழ்த்துகள். ஆண்டு நன்கொடை ரூ100. 6.ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை - 600 075



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் 105 ஆவது இதழ் இது. ஒவ்வொரு இதழையும் சிறப்பிதழாகக் கொண்டுவரும் யாதும் ஊரே சிற்றிதழ் இந்த இதழை மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் சிறப்பிதழாக உருவாக்கியுள்ளது. 1883 ஆம் ஆண்டு திருவாரூரில் கிருட்டிணசாமிக்கும் சின்னம்மாளுக்கும் பிறந்தவர் இராமாமிர்தம். ஐந்து வயதில் ரூபாய் பத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் குழந்தை இராமாமிர்தத்தை விற்றுவிட்டார் இவரது தாய். வறுமையின் கோரப்பிடி இப்படி ஆக்கியது. அக்காலத்தில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையை முற்றாக ஒழிக்கக் குரல் கொடுத்த இராமாமிர்தம் அம்மையாரின் இளமைக்கால நிகழ்வுகள் இவை. இதழில் அம்மையாரது வீரம் மிக்க நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மேலும் காந்த மருத்துவம் பற்றியும், தமிழ் உணர்வுச் செயற்பாடுகள் பற்றியும் இதழ் குறிப்பிட்டுள்ளது. இதழில் உள்ள கோட்டோவியங்கள் சமகால நிகழ்வுகளை எள்ளல் வகையில் சுட்டிக்காட்டுகிறது. இதழ் ஒவ்வொரு தமிழர்களது வீட்டிலும் இருக்கவேண்டிய, ஒவ்வொரு தமிழர்களும் முதன்மையாகப் படிக்க வேண்டிய இதழாக உள்ளது.



இந்த இதழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார் அவர்களது சிறப்பு மலர். பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் இதழாகத் தொடர்ந்து வணிக நோக்கமின்றி செறிவுடன் வெளிவருகிற இதழ். ஒவ்வொரு திங்களும் ஒரு சிறப்பிதழாக மலர்ந்து வருகிறது. இதழாசிரியர் நா.வை.சொக்கலிங்கம். கர்நாடக மாநிலம் தங்கவயலில் ஊர்காம் என்ற தொடர்வண்டிப் பாதை பெயர்ப்பலகையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளதை படத்துடன் பின் அட்டையில் இதழ் சுட்டிக் காட்டுகிறது. யாதும் ஊரே இதழில் வெளிவந்த கோட்டோவியங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது மகிழ்வான செய்தி. நூலின் விலை ரூ 65. நா.வை.சொக்கலிங்கம், 6 ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75 அ.கு.எண்: 600 075 என்ற முகவரிக்குப் பணவிடை செய்து பெறவும்.

தமிழ் மன்றங்களைத் தொடங்குக என்று மருத்துவர் இராமதாசு நிகழ்வில் கூறியதை இதழில் வெளியிட்டுள்ளது. மணவை முஸ்தபாவின் இதற்காகவா இன்னுயிர் தந்தார்கள் என்ற தொடர் கட்டுரை - இந்திப் போராட்டத்தைச் சுட்டிக் காட்டி, அது திசைமாறி ஆங்கில வணிகர்கள் மழலையர் வகுப்புகளிலிருந்தே உள்நுழைந்து பெருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலநிலையை மிக அருமையாகச் சுட்டிக் காட்டுகிறார். நாளை விடியும் இதழாளர் அரசெழிலன் அவர்களது தமிழ்ச் சுடர் இல்லத் திறப்பு விழா பற்றிய குறிப்பும் இதழில் உள்ளது. மீதமுள்ள அனைத்துப் பக்கங்களும் நாடகத் தந்தையின் பன்முகத்தை அவரது திறனை காட்டுகிற வகையில் சிறப்பாக அமைந்த கட்டுரைகளைக் கொண்டுள்ளது.



பம்மல நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் திங்களிதழ். பம்மல் ந.வை.சொக்கலிங்கம் தொடர்ந்து தொய்வின்றித் தரமாக இதழை நடத்தி வருவது வணங்குதற்குரியது. இதழுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ 100.

இந்த இதழ் உடையார் பாளையத்தில் பகுத்தறிவுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காகவும் பாடுபட்ட ஆசிரியர் வேலாயுதம் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. (01-07-1910 --- 13-11-1947) சுதந்திரம் அடைந்த மூன்றே மாதத்தில் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டு, பலா மரத்தில் நிர்வாணமாகத் தொங்கவிட்ட கொடுமையை சாதி வெறியர்கள் இந்தப் புரட்சி வீரருக்குச் செய்துள்ளார்கள்.

அறிவுக் கண்ணைத் திறந்து, பகுத்தறிவு விதையை விதைத்து, சாதி இழுக்கைக் களைவதற்காகப் பாடுபட்டு இயங்கி வந்த உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதத்தைப் பற்றிய செய்திகளை மிகத் தரமாகத் தொகுத்துள்ளார் இதழாசிரியர். இறந்தவருக்காகப் பலரும் வருந்தியிருக்கிறார்கள். ஆனால் கொலை செய்தவர்கள் மிகச் சாதாரணமாக வெளிவந்து விட்டார்கள். பேச்சாற்றலும் செயல் திறனும் உடைய இவர் தன் வீட்டில் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க என எழுதியதோடு மட்டுமல்லாமல் தன் பள்ளிக்குத் தமிழ்த் தகைமைகளை அழைத்துப் பேசவும் வைத்துள்ளார். தெளிதமிழ்ப் பற்றோடும் இயங்கியுள்ளார்.

யாதும் ஊரே இதழ் இது போல இயங்கியவரின் வரலாறு காட்டுவது, அவரது சிறப்பிதழாக இதழை வெளியிடுவது என்கிற தொண்டை நுட்பமாகச் செய்து வருகிறது. தலை வணங்கவேண்டிய செயலிது. இதழ் தொடர்புக்கு : 6. ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75 - தொலைபேசி : 044 - 2248 5166



இது இதழின் 98 ஆவது இதழ். 6.ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75 லிருந்து வெளிவருவது. பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பிதழ். ஆசிரியர் நா.வை.சொக்கலிங்கம். இந்த இதழ் நாரண துரைக்கண்ணனாரின் நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தடைகளை உடைத்து சேலத்தில் நான்காவது ஆண்டு மாநாடு கண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகளும் குறிப்புகளும் இதழில் உள்ளன. 96 பக்கங்களில் எந்த வணிக விளம்பரங்களும் இல்லாமல் சிறப்பாக இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது வணங்குதற்குரியது. (பொருள் உடைய தமிழர்கள் இந்த இதழுக்கு உதவ வேண்டும் பத்தாண்டு நன்கொடை ரூ1000, புரவலர் கட்டணம் ரூ3000) இதழில் உள்ள கோட்டோவியங்கள் உயர் தரத்தவை. நடப்பியலை மிக நுட்பமாகக் காட்டுபவை. தமிழ் மொழிப்போர் மறவர் கையில் ஒரு ஐஸ் குச்சியைக் கொடுத்துவிட்டு, விளம்பரங்களில் இந்தியும் இருக்கட்டும் என்று சட்டப்பேரவையில் சொல்வதை இந்தீய முதல்வர் என கோட்டோவியம் வரைந்து காட்டியுள்ளது அருமை. இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் என்ன கிடைக்கும் ?..?...?



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பிதழாக திங்கள்தோறும் வெளிவருகிற இதழ். திருமிகு. நா.வை. சொக்கலிங்கம் அவர்களது இடைவிடா முயற்சியின் பலனாகச் சிறப்பிதழாக ஒவ்வொரு இதழும் பாதுகாக்கப்பட வேண்டிய இதழாக மலர்ந்து வருகிறது. இந்த இதழ் கலைவாணர் நினைவுச் சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. கொடை வள்ளலாக பகுத்தறிவுக் கருத்துகளை விதைக்கிற ஊற்றுக் கண்ணாக, நகைச்சுவையோடு மக்கள் மனதில் ஆழமாகப் பதிகிற வகையில் கருத்து விதைப்பவராக, கருத்துவழி நடப்பவராக வாழ்ந்து காட்டியவராக, கலைவாணரின் வாழ்முறையைக் இதழ்வழிக் காணும் பொழுது நெஞ்சு நிமிர்கிறது. 100 பக்கங்களில் சிறப்பிதழ் மலர்ந்துள்ளது. எப்படி இயலுகிறது இந்த ஆசிரியரால் என்ற வியப்பே ஒவ்வொரு இதழையும் காணும் பொழுது ஏற்படுகிறது. தமிழர்கள் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய இதழ் இது. முகவரி : 6.ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்பல், சென்னை75 - தொலைபேசி : (044) 2248 5166



இந்த இதழ் மக்கள் கலைஞர் பட்டுக்கோட்டையார் பற்றிய சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. பாட்டின் வழி மக்கள் மனதில் உயர்கருத்துகளை விதைத்த பாவலர் பற்றிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. ப.ஜீவானந்தன், மலர்மகன், செயபாலன், செந்தில்நாதன், வெற்றியழகன், இளமாறன் என இயங்கிக்கொண்டிருக்கிற படைப்பாளிகளின் நேர்த்தியான கட்டுரைகள் கவிஞரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

அட காடு வெளெஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

என்ற பாடல் வரிகள் மக்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததன் விளைவுதான் திரைத்துறையினர் அரசியல் துறைக்கு வந்து ஆள அடித்தளம் அமைத்தது. என்பதைக் காணமுடிகிறது. இதழில் சினிமாப் பாடல்களின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு அதனை நடப்பியலோடு பொருத்திச் சுட்டிக் காட்டுவது சிறப்பாக இருக்கிறது. வழமைபோல் இதழிலுள்ள கோட்டோவியங்கள் இன்றைய நடப்பியலை மிகச் சிறப்பாகச் சுட்டிக் காட்டுகின்றன.



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பிதழாக நா.வை.சொக்கலிங்கம் அவர்களது தொடர் முயற்சியில் வெளிவருகிற இதழ். இது இதழ் எண் 87. இந்த இதழ் புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. புதுமைப் பித்தன் அவர்களது அனைத்துப் படைப்புகளின் ஒரு மேலோட்டமான பார்வையானது இதழில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வழி, புதிய நந்தன் சிறுகதைகளை முழுமையாக வெளியிட்டு கருத்துரையும் எழுதியுள்ளது. பகுத்தறிவுச் சிந்தனையும், தமிழ் உணர்வும் உடைய இந்த இதழ் பாதுகாக்கப்பட வேண்டிய இதழ் ஆகும். இதழில் குறிப்பிட்டுள்ள - காசநோய்க்கு இரையாகி மரணப் படுக்கையில் கிடந்த புதுமைப்பித்தன் திருவனந்தபுரம் க.சிதம்பரம் அவர்களிடம் தன் இறுதிநாளில் கூறிய கருத்துகள் நெஞ்சில் இரத்தம் கசிய வைப்பதாகும். எழும் போது வருகிறவனெல்லாம் விழும்போது வருவதில்லை - என்ற காசி ஆனந்தன் அவர்களது வரிகள் தான் அதைப் படிக்கும் போது நெஞ்சில் நிழலாடுகிறது.



யாதும் ஊரே : அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி (20.3.1900 - 28.3.49) அவர்களது சிறப்பு மலராக வெளியாகியுள்ளது. தமிழுக்குத் தொண்டாற்றிய ஒவ்வொருவரது படத்துடன் குறிப்புகளை இப்படித் தருவது இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டுவதாக அமையும். தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய தரமான இதழ். விலை ரூ6, தொடர்பு முகவரி : 6.ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75, தொலைபேசி: 044- 2248 5166.



யாதும் ஊரே : சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் (18-2-1860 ... 11-2-1946) அவர்களது சிறப்பு மலராக வெளியாகியுள்ளது. சிங்காரவேலர் பற்றிய பதிவுகளை மிகச் சிறப்பாக இதழ் செய்துள்ளது. தமிழுக்குத் தொண்டாற்றிய ஒவ்வொருவரது படத்துடன் குறிப்புகளை இப்படித் தருவது இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டுவதாக அமையும். தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய தரமான இதழ். விலை ரூ6, தொடர்பு முகவரி : 6.ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75, தொலைபேசி: 044- 2248 5166



யாதும் ஊரே : மொழிப்போர் ஈகிகளின் நினைவு மலராக வெளிவந்துள்ளது. முதலாம் மொழிப் போராட்டம் என 1937 - 40 இல் நிகழ்ந்த தாளமுத்து - நடராசன் உயிர்க் கொடையிலிருந்து தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் கண்டு இயங்கி வருகிற இன்று வரை நிகழ்ந்து வருகிற மொழிப் போராட்டம் பற்றிய ஆவணத்தொகுப்பாக இதழ் மலர்ந்துள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய தரமான இதழ். விலை ரூ10, தொடர்பு முகவரி : 6.ஆனந்தன் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை 75, தொலைபேசி: 044- 2248 5166.



யாதும் ஊரே: 73 ஆவது இதழ் இது. பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்க இதழாக வெளியிடப்படுவது. இதழிலுள்ள கேலிச் சித்திரங்கள் உயர்தரத்தவை. மொழி வளர்ச்சிக்காகவும், தமிழர்கள் முன்னேற்றம் கருதியும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிற இதழ். ஆண்டு நன்கொடை ரூ60, புரவலர் ரூ3000. தொடர்புக்கு: நா.வை.சொக்கலிங்கம், 6.ஆனந்தன் தெரு. திருவள்ளுவர்நகர், பம்மல், சென்னை 75, தொலைபேசி: (044) 2248 5166



பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்க இதழாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் தமிழர் நலம்காக்கும் இதழ். சனவரி இதழ் (இதழ் எண் 66) 148 பக்கங்களில் தரமான கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.



யாதும் ஊரே : பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்க மாத இதழ். நா.வை.சொக்கலிங்கம் அவர்களது உழைப்பில் உருவாகுகிற தரமான இதழ். தமிழ், தமிழர் உணர்வுகளை மிகத் சரியாகத் தருகிற இதழ் இது. கேலிச் சித்திரங்களின் வழி இந்த இதழ் காட்டுகிற செய்தி உயரியதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். இந்த இதழில் வெளியாகியுள்ள தமிழகக் கல்வித் திட்டம் பற்றிய கேலிச் சித்திரம் சிந்தித்துச் செயல்படுத்துதற்குரியது.



யாதும் ஊரே

பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்க மாதஇதழ். இதழ் எண் : 82. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்த - நாம் தமிழர் - ஆதித்தனார் நூற்றாண்டு பிறந்த நாள் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தமிழ்ப்பேரரசு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட குறிப்புகளும், ஆதித்தனாரைப்பற்றி அவரது நாம் தமிழர் இயக்கம் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளும் இந்த இதழில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வுக் கோட்டோவியங்களையும், தமிழ் உணர்வுக் குறிப்புகளையும், செய்திகளையும் நுட்பமாகத் தருகிற இதழ் இது. பாதுகாக்கவேண்டிய இதழ்.<



ஆசிரியர். நா.வை. சொக்கலிங்கம் அவர்களது உழைப்பில் வெளிவருகிற இதழ். ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழாக, தமிழுக்காக, தமிழுருக்காக உழைத்த மக்கள் பற்றிய விளக்கமான தொகுப்பிதழாக வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் பற்றி எழுதியுள்ளது. நமது 40 வருடப் பிரச்சாரம் அத்தனையும் ஒரே நாடகத்தில் ராதா செய்துவிடுகிறார்- என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார். கோட்டோவியத்தில் நடப்பியலைச் சிறப்பாகக் காட்டுவது இந்த இதழின் சிறப்பு. தரமான நூல்களை அறிமுகம் செய்து வருகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,