திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரிலிருந்து கவியோவியத் தமிழன் இந்த இதழை வடிவமைத்து அனுப்பியுள்ளார். இது முதல் இதழ். இதழின் உள்ளடக்கத்தைவிட இதழில் அவர் தலையங்கமாக எழுதியிருப்பதை நாம் பார்ப்போம்.
முன்பு மலம் என்ற பெயரில் கைகளாலேயே எழுதி ஒளியச்சு இதழாகக் கொண்டு வந்தது நிறைய்ய அனுபவங்களைத் தந்தது. 7 இதழ்கள் எழுதப்பட்டவையாகவும் 2 இதழ்கள் அச்சிலும் வந்திருக்கிறது. மொத்தம் 9 இதழ்கள்....பின்பு நீண்ட தொரு இடைவெளி... கிட்டத்தட்ட 4 வருடங்கள். இதழ் தயார் செய்வதற்கான சூழல் ஏனோ வாய்க்கவில்லை....
இதழ்களை வடிவமைப்பதிலும்., ஓவியங்கள் வரைவதிலும் அளவிலா ஆர்வம் அடியேனுக்கு உண்டு. ஏதோவொரு பத்திரிகையில் வடிவமைப்பாளராகவும் ஓவியராகவும் பணிபுரிய வேண்டும் என்ற என்னுடைய ஆசையெல்லாம் என்றோ காலத்தோடு மாண்டு போனது. என் இருப்பை அடையாளப்படுத்த வேண்டும். கதை கதையோடு மட்டுமல்லாது இதழிலும்...
கணினி இல்லை. அச்சு இயந்திரம் இல்லை. முறையான கல்வி இல்லை. வசதி இல்லை. மனசு மட்டும் உண்டு. இல்லாமைகள் தந்த வலியே முள்ளாய் நெஞ்சுக்குள் உறுத்துகிறது. வாழ்வுப் பாதையில் கவனித்து பயணிப்பதற்கு முட்களின் இருப்பு இன்றியமையாததுதானே - கவியோவியத் தமிழன் - இதைப் படித்ததும் நெஞ்சு கனக்கிறது. ஆற்றல் உள்ளவர்கள் அந்தத் துறையில் நுட்பம் காணவேண்டும். மூழ்கி எழவேண்டும்.நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கட்டாயம் ஒருநாள் இந்த உலகம் வாழ்த்தும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து இயங்க வேண்டும். வெற்றி உறுதி.
இனி இதழில் உள்ள ஒரு உரைவீச்சினைப் பார்ப்போம்.. திருவை குமரனின் உரைவீச்சு இது. தீட்டு என்ற தலைப்பில் எழுதப்பட்டது. திடமா, திரவமா, கருப்பா, சிவப்பா, என்ற நிறம், எப்படி இருக்கும், என்னிடம் மட்டும், இருப்பதாக..., சொல்லும் நீ, பார்த்ததெப்படி?, சொல், நானே, பார்க்க முடியாத, அந்தத் தீட்டு.., எங்கேயிருக்கிறது?
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|