இந்த இதழில் அட்டையில் வளர்தொழில் இதழை நடத்தி வருகிற க.ஜெயகிருஷ்ணன் அவர்களை மாமணி வெளியிட்டுள்ளார்கள். இயங்குகிற மக்களை கண்டறிந்து - அவர்களது செயற்பாடுகளை இதழில் அறிமுகப்படுத்துவது வாழ்த்துதற்குரியது. நன்னன் குடியும், ஏகம் பதிப்பகமும் பற்றிய செய்தி நன்னன் அவர்களது உயர்தன்மையைக் காட்டுகிறது. வருகிற மடல்களை முகத்தில் முகம் பார்க்கலாம் என்று வெளியிடுகிறது. திரும்பிப்பார்க்கிறேன் என்ற தொடரில் (எண் 16) வி.ஜி.பி.க்குச் சொந்தமான தீவை அரசுக்கு வேண்டும் என்ற பொழுது எத்தனை எதிர்ப்புகளையும் மீறி - அரசு கையகப்படுத்தி - மாற்று இடத்தை வழங்கியது என்பது நெஞ்சு நிமிர வைக்கிறது - கச்சத்தீவு இழந்ததை - இப்படித் துணிச்சலாக இது எங்கள் தீவு என்று கையகப்படுதத தமிழகத்தில் யாரும் எழவில்லை - என்பது வேதனையாக இருக்கிறது,
இதழ் வெளியீட்டு எண் - 304, இந்த இதழில் சு.சிறிகாந்தராசா அவர்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. (முகப்போவியம் 270) ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் வானமுதம் வானொலியில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை நான்கு மணி நேரம் - இன்பத் தமிழ் - நேரம். அந்த நிகழ்ச்சியில் சங்க இலக்கியங்கள் முதல் நிகழ்கால இலக்கியங்கள் வரை ஆழமான ஆய்வு நோக்கில் - உரை நிகழ்த்தப் படுகிறது. தமிழகத்தில் தமிழின் நிலைபற்றி, ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றி அலசப் படுகின்றன. அந்தக் குரலுக்கு உரியவர் - சு. சிறீகாந்தராசா. தன்மானத் தமிழனாக உயர, தமிழ்நாட்டில் இருக்கும் வளங்களை எடுத்து முறையாகப் பயன்படுத்த, தமிழ்நாட்டின் வளங்களை தமிழர்களுக்குப் பயனாகும் வகையில் திட்டங்கள் அமைக்க, தமிழ்நாட்டில் அறிவுச் செறிவடைந்து அயலநாடு சென்று பணத்தடிமைகளாய் வாழுவதைத் தவிர்க்க, தமிழனின் நுட்பமும் அறிவும் தமிழர்களை வளர்த்துவதற்குத் துணைநிற்க, திரைப்படம், புகை, போதை, இனக்கவர்ச்சி - என அடிமைப்படுத்துகிற அனைததுக் கருவிகளையும் கண்டறிந்து விலக்கும் ஆற்றல் பெற ... தமிழனாகத் தலைநிமிர ... கருதது விதைப்பவை தான் சிற்றிதழ்கள்.
மாமணி ஆசிரியராகவும், வெளியிடுபவராகவும் இருந்து இதுவரை 300 இதழ்களை வெளியிட்டுள்ளார். அக்கரைச் செய்தி என்று இந்த இதழில் - வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தமிழ்ப் பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்கலாமே என்று - குறிப்பிட்டிருந்த ஒரு துணுக்குச் செய்தி - நான் ஒன்று முதல் பத்தாம் வகுப்பிற்கான அளவுகோலை வடிவமைக்கத் தூண்டுகோலாய் இருந்தது. தமிழகப் பாடத்திட்டத்தினால் தமிழகத்திலுள்ள மாணவச் செல்வங்களே கருத்துச் செறிவின்றி, முனை மழுங்கி, அடிமைகளாய் இருக்கும் பொழுது இதனை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களையும் கெடுக்க வேண்டுமா என்ற எண்ணமே என்னை ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கான மொழி கற்றலுக்கான அளவுகோலை வடிவமைக்க முடிந்தது. அடுத்த வலையேற்றத்தில் இந்த அளவுகோலை விளக்கத்துடன் வலையேற்றுகிறேன், இந்த இதழில் முகம் கொண்டாடிய வெள்ளி விழா நிகழ்வுகள் பற்றிய குறிப்பினைக் கொண்டுள்ளது. இதழின் அட்டையில் இருப்பவர் பாவேந்தரின் மகள். வெள்ளிவிழா இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளில் சில இந்த இதழில் வெளியாகியுள்ளன.
இது முகத்தின் 299 ஆவது இதழ். இந்த இதழில் கயல் தினகரன் அவர்களது படமும் குறிப்பும் உள்ளது. மாமணி எழுதுகிற தொடரான திரும்பிப் பார்க்கிறேன் 10 இல் தீபம் நா.பார்த்தசாரதி பற்றி எழுதியுள்ளார். முகத்தின் வெள்ளிவிழா தொடர்பாக பல்வேறு இலக்கியப் பரிசுப் போட்டிகளை இந்த இதழில் அறிவித்துள்ளது.
இது 291 ஆவது இதழ். இதழின் அட்டையில் தமிழ்மண் பதிப்பக கோ.இளவழகனார் அவர்களது படமும், இதழின் உள்ளே அவர் பற்றிய குறிப்பும் இதழில் உளளது.
பிப்ரவரி 2007 இல் வெளியாகியுள்ள முகம் 287ஆவது இதழின் முகப்பு அட்டை இது. இந்த இதழின் அட்டையில் சாப்ட்வியூ ஆண்டோ பீட்டர் அவர்களது புகைப்படமும் உள்ளே கட்டுரையும் உள்ளது. இதழின் தலையங்கம் அமெரிக்காவின் தலையீட்டால் அணுசக்தித்துறையின் வளர்ச்சி எவ்வாறு முடக்கப்படும் என கோடிட்டுக் காட்டியுள்ளது. புதுவையில் ஒரு குட்டிச் சூரியன் என கு.அ.தமிழ்மொழி பற்றிய குறிப்பும் உரைவீச்சும் இதழில் உள்ளது. பல்லடம் நூல்கள் காப்பகம் பற்றிய குறிப்பும் உள்ளது.
முகம் இதழின் 284 ஆவது இதழ் இது. இதழின் அட்டையில் சொல்லாய்வறிஞர் பேராசிரியர். இரா.மதிவாணன் அவர்கள் இடம் பெற்றுள்ளார். இவர் சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என நிலைநாட்டிவருவதோடு, சொல்லாய்வுப் பணியையும் சிறப்பாகச் செய்துவருகிறார். தமிழர் நலம் பேணும் மக்கள் தொலைக்காட்சி பற்றிய குறிப்பு இதழில் உள்ளது. இந்த இதழ் முகம் மாமணியின் 75 ஆவது பிறந்தநாள் விழா, மற்றும் 75 சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா பற்றிய நிகழ்வுக் குறிப்புகளை உள்ளடக்கிய சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தனியொரு மனிதராக நின்று தொண்டாற்றி வரும் மாமணியின் செயற்பாடுகள் வணங்குதற்குரியவை. தமிழகமெங்கும் பரவிக்கிடக்கிற தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து அவர்தம் புகைப்படங்களை இதழின் அட்டையில் வெளியிட்டு அவர் பற்றிய குறிப்பை இதழில் வெளியிட்டு - தமிழ் அறிஞர்களது ஆவணப்பாதுகாப்பு இதழாகத் தொடர்ந்து வருவது நெஞ்சு நிறைப்பதே.
இத்திங்களில் முகம் மாமணிக்குப் பவழவிழாவும், 75 சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. அவ்விழாவிற்கான மலரும் இந்த இதழுடன் இணைப்பிதழாக வந்துள்ளது. எளிமையான தோற்றத்துடன் பழகுதற்கு இனியவராக, எடுத்துக் கொண்ட செயலில் உறுதியோடு தொடர்ந்து இயங்குகிற, எழுத்தாற்றல் திறன் மிக்க ஒரு மாமனிதர் மாமணிதான். அவரது செயல் வெற்றிபெற தமிழம் வலை வாழ்த்துகிறது. இந்த இதழின் அட்டையை நிறைவு செய்பவர் திருமிகு துரை.விசுவநாதன் அவர்கள். அண்ணா பல்கலைக் கழகத்தின துணைவேந்தராகப் பொறுப்பேற்று திறம்பட நடத்திவருபவர்.
முகம் இதழின் 281 ஆவது இதழ் இது. 2006 செப்டம்பர் 24 ஆம் நாள் முகம் வாசகர்கள் கலந்துகொள்ளும் விழா நடைபெறவுள்ளது. இந்த இதழின் அட்டையில் இருப்பவர் திருமிகு அருளி அய்யா அவர்கள். தெளிதமிழ்ச் சொற்களுக்காகத் தன் முழுஈடுபாட்டையும் செலுத்தி இயங்கி வருபவர்.
முகம் இதழின் 280 ஆவது இதழ். இந்த இதழின் அட்டையை நிறைவு செய்பவர் திரு நல்லி குப்புசாமி அவர்கள். இளங்குமரனார் பக்கம், முகத்தில் முகம் பார்க்கலாம், செய்தியும் சிந்தனையும், குறுங்கதை, கிந்தனார் பதில்கள் என கருத்துகளை விதைப்பது தொடர்ந்து வருகிறது. செப்டம்பர் திங்கள் இறுதியில் முகம் வாசகர்கள் கலந்து கொள்ளும் விழா நடைபெறவுள்ளது. நூல் வெளியீடு, பாராட்டு, நிதியளிப்பு, மாமணியாரின் பவழவிழா எனத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா சிறப்புற கருத்துரைக்குமாறு வாசகர்களை முகம் இதழ் அன்போடு வேண்டுகிறது.
இது முகம் இதழின் 274 ஆவது இதழ். இந்த இதழில் திருமிகு. ம.இலெ.தங்கப்பா அவர்களது படத்தினை
வெளியிட்டுள்ளது. பரிசு, பட்டம், பாராட்டு என அலைகிற தமிழர்களுக்கிடையில் தரமாக நிமிர்ந்து நிற்கும்
படைப்பாளி. தான் புதுவை அரசிலிருந்து பெற்ற கலைமாமணி விருதினை மேள முழக்கத்தோடு சென்று அரசிடம்
திருப்பிக் கொடுத்த மாமனிதர். தமிழுக்குக் கண்துடைப்பு செய்ய விரும்புகிற, செய்கிற அரசுக்கு இது ஒரு பாடமாக
இருக்கும். இதே உணர்வோடு ஈழத்துப் படைப்பாளி திருமிகு. அ.யேசுராசா., அவர்களும் இந்த ஆண்டு பரிசு
தேவையில்லை என அறிவிப்புக் கொடுததுள்ளார். ( குறிப்பு - தென்செய்தி இதழின் சுவைத்த பக்கங்கள் பகுதியில்
வலையேற்றப்பட்டுள்ளது) இதழில் இளங்குமரனார் தவச்சாலை பற்றிய எண்ணதாசனின் குறிப்பு அருமையாக உள்ளது.
தமிழ் அறிஞர்களை ஒவ்வொரு இதழின் முகப்பிலும் வெளியிட்டு, அவர் பற்றிய குறிப்பை வெளியிட்டு, பின் அதனை நூலாக்கி - தமிழக வரலாற்றிற்கு
ஒரு பாலம் அமைக்கிறது.
இது 265 ஆவது இதழ். இந்த இதழின் அட்டைப்படத்தில் இருப்பவர் பதிப்பகத்துறையில் சாதனை நிகழ்த்துகிற காந்தளக உரிமையாளர் க.சச்சிதானந்தன் அவர்கள்
இது 263 ஆவது இதழ்.
இந்த இதழில் நினைவலைகள் என இயங்கியவர்களின் நிகழ்வுகளைச் சுவையாக வெளிப்படுத்தியுள்ளது.
முகம்: மாமணி அவர்களால் தொடர்ந்து தொய்வின்றி கருத்துச் செறிவோடு ஒவ்வொரு திங்களும் வெளிவருகிற இதழ். மாமணியின் கிந்தனார் பதில்கள், தலையங்கம், முகத்தில் அறிமுகமாகும் தமிழ்ச்சான்றோர் எனத் தரமாக வெளியிடுகிற இதழ். இது 261 ஆவது இதழ்
முகம் 258 ஆவது இதழ் இது. தமிழர் நலம் கருதியும், பிற்போக்குச் சிந்தனைகளைச் சுட்டிக்காட்டியும், திங்கள்தோறும் தவறாது வெளிவந்து கொண்டிருக்கக்கூடிய இதழ் இது. இந்த இதழ் அட்டைப்படத்தில் உள்ளவர் திரு.பொன்னவைக்கோ. கணினித் துறையிலும், இணைய தளத்திலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிற தெளிதமிழ்ச் சிந்தனையாளர்.
268 ஆவது முகம் இதழ் இது. தமிழுணர்வோடு குறிப்புகளையும், நிகழ்வுகளையும் வெளியிடுவது. கிந்தனார்
பதில்கள் உயர்தரத்தது. இதழின் அட்டையில் தமிழுணர்வு மிக்கோரை வெளியிட்டுச் சிறப்புச் செய்வது இது. இந்த
இதழின் ஆசிரியர் உரை - வள்ளுவர் சிலையை விழுங்கவரும் சமணக் கோவில் அதுவும் கிருட்டிணகிரிக்கு
அருகிலுள்ள கந்தம்பட்டி கிராமத்தில் என்று குறிப்பிடுவது - சிந்திக்கத் தூண்டுவதே.
சூன் 2005 இல் தனது 267 ஆவது இதழை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வருகிற திங்களிதழ். ஒவ்வொரு
இதழிலும் இயங்குகிற ஒருவரது புகைப்படத்தை அட்டையிலிட்டு அவரைப் பற்றிய குறிப்பினை இதழில் வெளியிட்டுத்
தொடருகிற இதழ். இந்த இதழில் யாதும் ஊரே இதழைத் தமிழ் உணர்வோடு நடத்திக் கொண்டிருக்கும் நாவை.
சொக்கலிங்கம் அவர்களது படத்தினை வெளியிட்டுள்ளது.
இதழ் எண் : 266 , இந்த இதழில் மணிக்கொடி இதழில் புதுமைப்பித்தன் எழுதிய புதிய நந்தன்
கதை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. எண்ணதாசன் எழுதி வருகிற வரலாற்றில் பெரியார் என்ற தொடர் உரைவீச்சில்
காணப்படுகிறது. இதழில் அட்டையில் ஓவியர் கு.புகழேந்தியின் படமும் உள்ளே அவர் பற்றிய குறிப்பையும்
வெளியிட்டுள்ளது. இதழில் உள்ள கிந்தனார் பதில்கள் சுவை கூட்டுபவை. தமிழ் உணர்வூட்டுகிற துணுக்குகளும்,
உரைவீச்சுகளும் இதழில் இடம்பெற்றுள்ளன.
முகம் : மாமணி அவர்கள் சென்னையிலிருந்து தொடர்ந்து, தொய்வின்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிற
திங்களிதழ். இது 255 ஆவது இதழ். ஒவ்வொரு இதழின் அட்டையிலும் மொழி, இன, நாட்டிற்காகப்
பாடுபட்டவர்களது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளே குறிப்பும் எழுதிவருகிறது. இதழிலுள்ள
கிந்தனார் பதில்கள் நாட்டு நடப்பைக் காட்டுகிற காலக்கண்ணாடியாக இருப்பவைகள். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |