2007 சனவரி இதழ். இதழின் ஆசிரியர் உரையில் பாலசிங்கம் அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. சதாம் படுகொலை உலக சமூகங்களுக்கு ஓர் எச்சரிக்கை என்ற குறிப்பினை உள்அட்டையிலும் முன் அட்டையில் சதாம் படங்களையும் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 10 மனித உரிமை நாளில் முனைவர் வசந்திதேவி, ஆர்.கீதா உரையாற்றியதன் உரைச்சுருக்கத்தை இதழில் வெளியிட்டுள்ளது. விகிதாச்சார ஒதுக்கீடு பற்றிய விளக்கத்தினை சிந்தனையாளன் இதழாசிரியர் வே.ஆனைமுத்து அவர்களது நேர்காணல்வழி பதிவு செய்துள்ளது. மனித உரிமைகளும் வறுமையும் என்ற கட்டுரை நாம் எப்படி வறுமைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதை விரித்துக் காட்டுகிறது. தமிழக அரசின் முன் மாதிரி பொதுப்பள்ளி முறை பற்றிய விளக்கத்தினை இதழில் குறிப்பிட்டுள்ளது. இதனைச் சுவைத்த பக்கங்கள் பகுதியில் வலையேற்றியுள்ளேன். இதழில் நூல் விமர்சனம், நடந்த நிகழ்வுகள், துணுக்குச் செய்திகள் என கருத்துச் செறிவுடைய இதழாக இதழ் வெளிவந்துள்ளது.



மதுரை மக்கள் கண்காணிப்பகத்திலிருந்து வெளிவருகிற இதழ் இது. தனிச்சுற்று இதழ்.விலை ரூ10. என்று தணியும் இந்தச் சோகம் என, இலங்கையிலிருந்து வருகிற அகதிகளுக்காகத் தலையங்கம் எழுதியுள்ளது. இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் செறிவுடையவை. இந்திய ஊடகத்தில் சாதியம், காவிரிப் பாசன மக்களின் வாழ்வுரிமை, இவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களா?, பயம் போக்கும் கரங்கள், ஊழலும் மனித உரிமை மீறலே, தாதாக்கள் இத்தனை வகையினரா?, அரவாணிகள் மாறிய பாலினம், இருபெண்களும் இரு கோயில்களும் என நட்பியலை கட்டுரைகளாக்கி கருத்துத் தெளிவேற்படுத்துவது சிறப்பானதே.



மதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகம் வெளியிடுகிற திங்களிதழ். வணிக நோக்கின்றித் தொடர்ந்து வெளியிடுகிறது. இதற்கான இணையதள முகவரியும் உள்ளது ( ) சனநாயகத்தின் வெற்றி என நேபாளத்தின் நிகழ்வுக் குறிப்பினைத் தலையங்கமாக வெளியிட்டுள்ளது. வகுப்பு வாதத் தீயும் அணையும், இந்தியக் கல்விக்கு ஆபத்து, மாவோக்கள் - மக்கள் அரசு, புதிய சவால்களும் தொழிற்சங்க இயக்கமும், சாதியக் குற்றங்கள், மேலவளவுப் படுகொலை, நர்மதா அணைத் திட்டம் என விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இதழின் பின் அட்டையில் ஜூன் 26 சித்தரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம் என்பதனை வெளியிட்டு, 2006 க்கான கலைப்பயணமாக 10 மண்டலங்களில் 13 கலைக்குழுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 நாள்கள், 5 நிகழ்வுகளை சூன் 2 முதல் 22 வரை பயணம் செய்யப் போவது பற்றிய குறிப்பு உள்ளது. சூன் 24 கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் மாலை 6 முதல் விடிய விடிய கலை இரவு நடத்துவது பற்றிய குறிப்பும் இதழில் உளளது.



மதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகத்தின் தொடர்பு இதழாக திங்களொருமுறை வெளிவருகிற இதழ் இது. ஒவ்வொரு இதழும் மக்களுக்கான பிரச்சனைகளை மிகச் சிறப்பான கட்டுரைகளின் வழி வெளிப்படுத்துகிற இதழ். இந்த இதழில் சில்லரை வர்த்தகத்திலும் அன்னிய முதலீடு, தேவையா இந்த மோதல் போக்கு, கிளாடிஸ் மரின் மிலி மனித உரிமைப் போராளி நினைவாக என்கிற கருத்து விதைப்புக் கட்டுரைகள் உள்ளன. இதழில் வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மக்கள் அறிக்கை மிக மிக நுட்பமானது - 12 ஆம் வகுப்பு வரை தரமான, கட்டாயமான, இலவசமான கல்வி வேண்டும் - அதுவும் பாகுபாடற்ற பொதுப்பள்ளிக் கல்வி அமைப்பு மூலம் திறமையாக அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மெட்ரிகுலேசன், சென்ட்ரல் போர்டு, ஸ்டேட் போர்டு, நவோதயா - எனப் பல்வேறு கூறுகளாகக் கல்வியைப் பிரித்து - கொள்ளையடிக்கும் கல்வி வணிகர்களுக்கு உணர்த்துகிற வகையில் வெளியிட்டுள்ள மக்கள் கூட்டமைப்பின் அறிவிப்பு தேவையானதே.



மதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகம் வெளியிடுகிற இதழ். மனிதம் நெருக்கப்படுகிற பொழுது, மக்கள் அதிகாரத்தால் அடக்குமுறைக்குள்ளாகும் பொழுது எழவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அடுத்த இதழிலிருந்து மாதஇதழாக வெளிவருகிறது. இடஒதுக்கீடும் நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றிய கட்டுரை நுட்பமாக உள்ளது. பெண்களுக்கான சட்ட வரையரை பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இப்படியும் ஒரு கலை இரவு என்று சித்தரவதைக்கான எதிர்ப் பரவல் செய்துள்ளது. வீரப்பன் வீழ்த்தப்பட்டதால் காட்டுவளம் கொள்ளையடிக்கப் படுவதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றுகிறது. முகவரி : 6. வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை 2



மனித உரிமைக் கங்காணி : மக்கள் கண்காணிப்பகம் சார்பாக மதுரையிலிருந்து வெளிவருகிற இருதிங்களிதழ். ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்காக வெளிவருகிற இருதிங்களிதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,