திருமிகு லலிதா ஆசிரியராக இருந்து சென்னையிலிருந்து வெளியிடுகிற பெண்ணியம் தொடர்பான இதழ். இது இரண்டாவது ஆண்டின் 9 ஆவது இதழ். பெண் படைப்பாளர்களை ஊக்குவித்து எழுத வைத்து இதழில் வெளியிட்டு வருகிறது. இதழின் இணைப்பாளர்கள் செறிவான கருத்துச் செறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை இதழின் படைப்புகள் தேர்விலிருந்து அறிய முடிகிறது. ஒடுக்கப்படுகிற பெண்கள், சாதனை புரிகிற பெண்கள், பெண்களுக்கான குறிப்புகள் என பெண்ணியத்தை கருத்துச் செறிவால் வளர்த்தெடுக்கிற செயல்களை இந்த இதழ் சிறப்பாகவே செய்கிறது. பெரியார் பெண்ணியத்தை, பெண்களுக்கான பிரச்சனைகளை, மிகச் சரியாகப் புரிந்து - எளிமையாகத் தீர்வு சொன்னவர். நடைமுறையோடு பொருத்தி வாழ்ந்து காட்டியவர். அவரது கருத்துகளை இதழாளர் உள்வாங்கி இதழ் தொடர்வதைக் காணும் பொழுது நெஞ்சு நிமிர்கிறது.
சென்னையிலிருந்து ஜூலை 2007 இல் வெளிவந்த எட்டாவது இதழ் இது. பெண்ணியம் தொடர்பான உயர் கருத்துகளை உள்ளடக்கியதாக இந்த இதழ் வெளிவந்துள்ளது. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, திரைக் கண்ணோட்டம், கேள்வி பதில் என்கிற தலைப்புகளில் படைப்பாக்கங்களை வெளியிட்டுள்ளது. சி.வினாயகமூர்த்தி உள்அட்டைக் கவிதையினை எழுதி வருகிறார். இந்த இதழில் மறைந்த எழுத்தாளர் வள்ளிநாயகம் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளது. ஊடகங்களில் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய செய்திகள் இதழில் உள்ளன. பெரியார் திரைப்படம் பற்றிய கருத்துரையும் இடம் பெற்றுள்ளது. உலகமயச் சுரண்டல் ஓர் ஒப்பீடு என்ற ஏழுமலையின் கட்டுரை சிறப்பாக உள்ளது.
நவம்பர் 2006 - சென்னை சைதாப்பேட்டை காவிரி நகரிலிருந்து இந்த இதழ் தொடங்கியுள்ளது. இது முதல் இதழ். ஆசிரியர் லலிதா. பொறுப்பாசிரியர் இளையராசா, இணையாசிரியர் நிர்மலா. பெண்களது உரிமைக் குரலாக புதிய பெண்ணியம் என்ற இந்த இதழ் வெளிவருகிறது. கோவை ஞானி, நா. நளினிதேவி, புதிய மாதவி, இனியன், வே.கமலாலயன் போன்றவர்களது கட்டுரைகள் இதழில் இடம் பெற்றுள்ளன. இதழுக்கு வருகிற மாற்று இதழ்களும், நூல்களும் விமர்சனம் செய்யப்பட்டு இதழில் வெளியிடப்படுகிறது. கலையரசியின் தீர்மானம் சிறுகதையும் இதழில் உள்ளது. இதழில் வெளியிடப்பட்டுள்ள கவிதைகள் உணர்வூட்டுபவைகளாக உள்ளன.
இது இரண்டாவது இதழ். 4.பாரதி தெரு, காவேரிநகர், சைதாப்பேட்டை, சென்னையிலிருந்து வெளிவருவது. ஆசிரியர் லலிதா. இந்த இதழில் இழுவையாய் இடர்படும் மகளிர் இடஒதுக்கீடு, தோள் சீலைக் கலகம் பற்றிய கட்டுரைகள் உள்ளன. அமைப்பின் வதை சிறுகதை உண்மை காட்டுவதே. உயிர் திரைவிமர்சனம் உள்ளது. உரைவீச்சுகளும் இதழில் உள்ளன. எதிர் வினையும் பதில் வினையும் என்றும், களஅதிர்வுகள் என்றும் இதழ் பற்றிய பார்வைகளைக் காணமுடிகிறது. வீட்டுக் கதவின் படியைத் தாண்டி வருவதே கேடு - என்ற விதி உடைத்துப் படைக்க வேணும் புதியதோர் நாடு என்ற குறிப்பைத் தலைப்பிலிட்டுள்ளது. இதழுக்கான தளம் விரிவடைவடைது கண்டு நாமும் மகிழ்கிறோம்.
பெண்ணியம் தொடர்பாக இத்திங்களில் தொடங்கப்பட்ட முதல் இதழ் இது. ஆசிரியர் லலிதா. இணையாசிரியர் நிர்மலா. சென்னை சைதாப்பேட்டையிலிருந்து வெளிவருவது. கட்டுரை, சிறுகதை, கவிதை, நூல் திறனாய்வு என இணைத்துள்ளது. மதுரையிலிருந்து பெண் விழிப்புணர்வை முதன்மைப்படுத்தித் தரமாக இதழை நடத்திய ஓவியாவின் கட்டுரை பெண்ணியம் குறித்த வரலாறு காட்டுவதே. கவிதையும் கட்டுரையும் பெண்கள் மீது திணிக்கப்படுகிற ஒடுக்குமுறையையும் அதற்கான விழிப்புணர்வையும் முதன்மைப் படுத்தியே வெளிவந்துள்ளது. தரமான தொடக்கம். இதழ் தொடர்ந்து வெளிவந்து இணைக்க வாழ்த்துகள். அலைபேசி :98404 92427 தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |