மதுரை 1, காகாதோப்புத் தெருவிலிருந்து இந்த இதழ் தொடர்ந்து திங்களிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இது ஆறாம் ஆண்டின் 8 ஆவது இதழ். தமிழ் உணர்வோடு, கல்விக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் நடைபெறுகிற சிக்கல்களை விமர்சிப்பதோடு, அதற்கான தீர்வுகளையும் முறைப்படுத்துகிற இதழிது. இந்த இதழில் ஒளிக்கப்படும் உண்மைகள் என ஊடகங்களால் மறைக்கப்பட்டு, உளவியல் அடிப்படையில் உள்நுழைக்கிற சீர்கேடுகள் பற்றி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. ஹோமியோபதியின் தனிச்சிறப்புகள் பற்றியும், இலக்குத் தெரியாத கல்வி என இன்றைய கல்விநிலை பற்றியும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. ஒரு பக்க அளவில் படைப்பாக்கங்கள் இருந்தாலும் இலக்கை மிகத் துல்லியமாகக் காட்டுவது இந்த இதழின் சிறப்பு. இதழின் கோட்டோவியப் படங்கள் நடைமுறையைச் சுட்டுபவை.



மதுரையிலிருந்து வெளிவருகிற சிற்றிதழ். திங்கள் ஒருமுறை வருவது. இந்த இதழின் ஆசிரியர் உரையில் வெண்மனி நிகழ்வு பற்றிய நினைவூட்டலை எழுதியுள்ளது. திரைப்படப்பக்கத்தில் நாடக நடிகர் மனோகர் அவர்களுக்கு அஞ்சலி செய்துள்ளது. ராஜகுரு பதில்கள் என வினா விடைப் பகுதியும் உள்ளது. அமெரிக்க வல்லாதிக்கத்தை சுட்டுகிற கட்டுரைகளும், ஒடுக்கப்படுகிற மக்களுக்கான விழிப்புணர்வுச் செய்தியும், கல்வி பற்றிய புரிதலுடன் கூடிய கட்டுரைகளும் இந்த இதழ் முதன்மைப் படுத்தி வெளியிட்டு வருகிறது.

சல்லிக் கட்டு பற்றி இந்த இதழில் வெளிவந்துள்ள கவிதை

சகமனிதனை
தீண்டத்தகாத
இழிபிறவியாக நினைக்கும்
உன் சாதித்திமில் அடக்கி
கீழே சாய்க்க வேண்டும்.

மக்கள் ஒற்றுமையை
குத்திக் கிழித்து
மனித உயிர் சுவைக்கும்
உன் மதவெறிக் கொம்புகளை
முறித்து வீழ்த்த வேண்டும்.

நிலத்தடி நீர் சுரண்டி
நீர்நிலைகளை ஆக்கிரமித்து
விளைநிலங்களைப் பாழாக்கும்
உன் திமிர்வாலை முறுக்கி
அடக்கி ஒடுக்கவேண்டும்.

என்றெல்லாம்
நான் எண்ணும்போது
எவரையும் துன்புறுத்தாத
எனது திமிலைப் பிடித்து
கொம்புகளை மடக்கி
வாலை முறுக்கி
உன்னை நீயே வீரனென்று
மார் தட்டி மகிழ்கிறாயே !

மனிதா !
உன்னை விட
எனக்கு மேன்மை அதிகம்
புரிந்து கொள்.





ஆறாவது ஆண்டின் மூன்றாவது இதழ். மாற்றுக் கல்வி வேண்டும் என்று தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்த இதழ் மாநிலக் கல்விப் பேரவையின் கலந்துரையாடல் பற்றிய குறிப்பினை வெளியிட்டுள்ளது. கல்வி குறித்து ஒவ்வொரு இதழிலும் நுட்பமாக அலசும் இந்த இதழ், டிசம்பர் இதழில் அறிவு பரவிய கதை என உளவியல் நோக்கில் கருத்தளித்துள்ளது. 4 டி கோட்பாடு எனக் காட்டுவது அருமையானதே. பெண்கள் விழிப்புணர்வு பற்றி பா.ரஞ்சனி குறிப்பிட்டுள்ளார். அன்புள்ள அப்பாவிற்கு என்று மடல்வழிக் காட்டுவது சரியானதே.



புதிய ஆசிரியன்: மக்கள் நலம்நாடித் தவறுகளை இடித்துரைக்கும் திங்களிதழ். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்கிற சொல்லாடல்களின் பின் ஒளிந்துகிடக்கிற உண்மைகளைச் சரியாக எடுத்துக்காட்டுகிற இதழ். தொடர்புக்கு: க.ராசு, 6 கா கா தோப்புத் தெரு, மதுரை 1



மதுரையிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் இதழ்.



கல்விச் செய்திகளை முதன்மைப் படுத்தி, நாட்டு நடப்புகளை உள்வாங்கி எழுதி விழிப்புணர்வூட்டுகிற இதழ்.



மதுரையிலிருந்து வெளிவருகிற புதிய ஆசிரியன். க. ராசு ஆசிரியராக இருக்கிறார். திரைப்படங்கள், வகுப்பறை, சமுதாயப்போக்கு, முதலாளித்துவம், பன்னாட்டு வணிகம், வளர்ந்த நாடுகளின் ஆக்கிரமிப்பு போன்ற கருத்துருக்களை நுட்பமாக அலசி ஆராய்ந்து வெளியிடுகிற இதழ் இது. சுயநிதிக் கல்லூரிகள் என்ற பெயரில் சுரண்டும் கல்வி நிறுவனங்களை இந்த இதழில் சுட்டிக் காட்டியுள்ளார். ராஜகுரு பதில்கள், புத்தக விமர்சனம், எதிர்வினை எனப் பதிவு செய்வது அனைத்துமே நுட்பமானதாக இருக்கிறது. வகுப்பறைப் போராளியார் எனக் காட்டுவதும், சத்திரமுகி படம் பற்றி விமர்சிப்பதும் அருமை.



ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இதழ் ஒவ்வொரு திங்களும் விழிப்புணர்வுக் கருத்துகளையும், கல்வி பற்றிய பல்துறை அலசல்களையும் செய்து வருகிறது. நாட்டு நடப்பைச் சுட்டிக்காட்டி, ஒடுக்குமுறையையும், முதலாளிய அழுத்தத்தையும் நுணுக்கமாக வெளியிட்டு வருகிறது. திரைப்படச் சீரழிவை, எடுத்துக்காட்டுகளுடன் காட்டி அத்திரைப்படத்தை விமர்சனம் செய்கிறது. டியர் பிரைம்மினிஸ்டர், என சாமானியர்களை, புறக்கணிக்கப்பட்டவர்களை, அடித்தள மக்களையும் கொஞ்சம் நினையுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,