பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழ் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அவர்களின் வழிகாட்டலில் வெளிவருகிறது. இந்த இதழ் இணையத்திலும் உள்ளது. இணைய முகவரி : www.p-t.in - நமது மக்கள் புகைபிடித்தலையும், மது அருந்துதலையும் விட்டொழிக்க விழிப்புணர்வு ஊட்டுவது இந்த இதழின் அருமையான செயல். தமிழ் உணர்வோடு வரலாற்றுச் செய்திகளையும், தமிழர் மேம்பட கருத்துரைகளையும் இந்த இதழ் தொடர்ந்து தருகிறது.சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்காக இயக்கம் கண்டு, மக்களைத் திரட்டி, மரங்கள் நடுவதும், சூழலியல் தூய்மைக்காக இயங்குவதும் இந்த இதழின் சிறப்பான தன்மைகள். மதுக்கடைகளின்வழி அரசு மக்களைக் கெடுக்கிறது என்பதைத் துணிச்சலாக எடுத்துக் காட்டுவதுடன் - எழுச்சிக்கான அடித்தளத்தையும் அமைத்து வருகிறது.
பசுமைத் தாயகம். எழுதுவதோடு நிறுத்திவிடாது மக்களை இணைத்து இயங்கவைத்து - அதனை இதழில் பதிவு செய்கிற தன்மையை உடையதாக இந்த இதழ் உள்ளது. இந்த இதழின் பின் அட்டையில் புகையிலைப் பொருள்களை எதிர்த்து - விற்பனை அட்டையிலேயே விழிப்புணர்வுப் படங்களை வெளியிடக்கோரி நடத்தப்பட்ட மனிதச் சங்கிலி நிகழ்வு பற்றிய படக்காட்சியினை வெளியிட்டுள்ளது.சிமிட்டி ஆலைகள் கூட்டணி அமைத்து விலையை உயர்த்தியது வெட்ட வெளிச்சம், இயற்கைச் சாயத்துணிகளுக்கு மக்களிடம் வரவேற்பு, உலக அழிவைத் தடுக்க ஒரு கடைசி வாய்ப்பு, பாலி மாநாட்டின் முக்கியத்துவம், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள், மேற்கு நாடுகளின் ஆதிக்கச் செயல்திட்டங்களை அழித்திருக்கிறோம், தனியார் ஊர்திகளுக்கு ஒருநாள் தடை, மலேசியத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போருக்கு இந்தியா உதவுமா?. மானிடனின் மரபுவழித் தோற்றம், அனைருக்கும் கழிப்பறை வசதி, கைவிடப்பட்ட கடைநிலை விவசாயிகள் - என்கிற கட்டுரைகள் இந்த இதழில் காணப்படுகின்றன. உலக அழிவைத் தடுக்க ஒரு கடைசி வாய்ப்பு என்ற கட்டுரை பல்வேறு சான்றாதாரங்களுடன் விளக்குகிறது. இதற்கெல்லம் யார் காரணம்? எங்கிருந்து தொடங்குவது? எப்படி உணரவைப்பது? என்பதே நம்முன் எழுகிற வினா? களப்பணியே விடிவு கொடுக்கும்.
இந்த இதழின் முன் அட்டையிலும் உள் அட்டையிலும் உலகம் முழுவதிலும் புகையிலைப் பொருள்களுக்கு எப்படி எச்சரிக்கை விளம்பரங்கள் செய்துள்ளார்கள் என்பதைப் படத்துடன் வெளியிட்டுள்ளது. மிகப் பெரிய தொகுப்பு. இருந்தாலும் புகையிலை வணிகம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. மோசமானது, உடலுக்குத் தீங்கானது என்று சொன்னாலும் மக்கள் விழிப்படைய மாட்டார்கள் - தங்களது சுகத்திற்காகவே எதையும் செய்வார்கள் - என்றால் இவர்களை என்னவென்பது? ( எச்சரிக்கையை சிறியதாக வெளியிட்டு - மயக்குகிற போலி விளம்பரங்களை பெரியதாக வெளிப்படுத்தி விளம்பரம் செய்து வணிகம் செய்பவர் இருக்கும் வரை இது நடக்கத்தான் செய்யும் ) இந்த இரண்டு அட்டைகளையும் பெரிய அளவில் போட்டு முலை முடுக்கெல்லாம் தொங்கவிட வேண்டும். அனைத்துப் பத்திரிகைகளும் இதனை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் இவை மக்களிடம் சென்று சேரும். இந்த இதழில் நந்திகிராமம் பற்றியும். தமிழக அரசின் தொழில் கொள்கை 2007 பற்றியும், அரபு நாடுகளில் சுரண்டப்படும் தொழிலாளர்கள் பற்றியும் இதழில் குறிப்பிட்டுள்ளது, தோழர் தியாகு எழுதியுள்ள - கியூபாவில் அனைவருக்கும் கல்வி அனைத்தும் தாய்மொழியில் கட்டுரை அருமையாக உள்ளது. (இந்த வலையேற்றத்தின் சுவைத்த பக்கங்களில் காணலாம்)
இதழில் வெளியிடுவதோடு நின்றுவிடாமல் மக்களை இணைத்து அமைப்புகளை ஏற்படுத்தி - அதன் வழி மரக்கன்றுகளை நட்டும், சுற்றுச் சூழல் அவலங்களுக்கான பரப்புரைகளைச் செய்தும் வருகிற தரமான இதழ் இது. சென்னையிலிருந்து திருமிகு செளமியா அன்புமணி அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிடுகிற இதழ். கழிவுகளைக் கொட்டும் இடமா இந்தியா - அமெரிக்காவுக்கு அன்புமணி இராமதாசு கண்டனம், விறகு அடுப்பும் உடல் உழைப்பும், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் அபாயங்கள் - என்ற கட்டுரைகளை இந்த இதழில் வெளியிட்டுள்ளது. முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுகிற தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி விளக்கமான ஒரு கட்டுரை எழுதியுள்ளது. உலக நாடுகளிலெல்லாம் நம் தமிழர் பரவியுள்ளனர். ஆனால் தமிழை மறந்து கிடக்கின்றனர். அவர்கள் எளிமையாகக் கற்க தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இதழின் அட்டைப் படத்தில் நோபல் பரிசு பெற்ற இராஜேந்திர குமார் பச்செளரி படத்தை வெளியிட்டதுடன் உள்ளே விளக்கமான ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளது.
இது நான்காவது ஆண்டின் எட்டாவது இதழ். சென்னையிலிருந்து சுற்றுச் சூழல் விழிப்புணர்விற்காக இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழில் வெளிவந்துள்ள தியோடர் பாஸ்கரன் அவர்களது பல்லி செய்த பாவம் கட்டுரை இந்த வலையேற்றத்தில் சிற்றிதழ்ச் செய்தி இதழில் மறுபிரசுரம் ஆகியுள்ளது. சில்லறை வணிகத்தைச் சீரழிக்க வரும் ரிலையன்ஸ் வால்மார்ட் பற்றிய விரிவான விளக்கமான கட்டுரை சிந்திக்க வைப்பதே. விழுப்புரம் மாவட்ட ஏரிகளைக் காப்போம் என்ற கட்டுரை வாய்ச் சொல்லில் வீரராக இருந்து விடாமல் செயல்படும் திட்டத்தை நுட்பமாகக் காட்டுகிறது. அழிக்கப்படும் காடுகளும் கேள்விக் குறியாகும் இந்தியாவின் எதிர்காலம் என்ற கட்டுரை சுற்றுச் சூழலின் முதன்மையைக் காட்டுகிற கட்டுரையே. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் சரியான பார்வையை, இலக்கை இதழின் கட்டுரைத் தொடர் கோடிட்டுக் காட்டுகிறது. பள்ளிக் குழந்தைகளை ஊக்குவித்து மரம் நடுவதும், மரம் நடுவதை அமைப்பு வழிச் செயற்படுத்துவதும் - சரியான வழிகாட்டுதலுக்கு அடித்தளம் அமைப்பதாகும்.
பசுமைத் தாயகம் : சுற்றுச் சூழல் விழிப்புணர்வை இயக்கமாக எடுத்து வழிநடத்துகிற திங்களிதழ். அக்டோபர் இதழ் "தமிழுணர்வுச் சிறப்பிதழாக" மலர்ந்துள்ளது. சுற்றுச் சூழல் காக்க தமிழ் காப்போம், தாய்மொழி வழிக்கல்வி ஓர் உடனடித்தேவை, தாய்மொழிவழிக் கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை, தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் தமிழ் வழிக்கல்வி, தமிழ் ஆட்சி தொடரும் கனவு என்கிற தரமான உயர் கருத்துக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. பாதுகாக்கப்படவேண்டிய இதழ் இது.
உலக வர்த்தக அமைப்பைப் பற்றி விரிவாக எழுதியுள்ளது இந்த மாதம் வெளிவந்துள்ள பசுமைத்தாயகம் இதழ்
சுற்றுச் சூழல் விழிப்புணர்வையும், பன்னாட்டு வணிகக் குழுமங்களின் உண்மைகளையும் காட்டுகிற இதழ். மக்களைத் திரட்டி இயங்கவைக்கத் திட்டமிட்டுத் தொடருகிற தொடர்பிதழ்.
இந்த இதழில் சுரண்டப்படும் தாமிரபரணி ஆறு பற்றியும், தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், வன்முறையைத் திணிக்கிற ஆங்கிலவழிக் கல்வி பற்றியும், இயற்கையை அழித்துச் சுரண்டும் பன்னாட்டுக் கும்பல் பற்றியும் மிகச் சிறப்பான கட்டுரைகளின் வழி சுட்டிக்காட்டுகிறது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |