புதுச்சேரியிலிருந்து திருவாட்டி அரியநாயகி இறைவிழியனாரால் இந்த இதழ் தொடர்ந்து மிகத் தரமாகத் தொடரப்படுகிறது. நிறுவனர் மு.இறைவிழியனாரின் மறைவுக்குப் பிறகு இதழ் நின்று விடுமோ என்று அச்சப்பட்ட தமிழ் உணர்வாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் - இந்த இதழ் மேலும் செறிவுடன் தொடர்ந்து வெளிவருகிறது. அருளி அய்யா, ம.இல.தங்கப்பா, சீனு.அரிமாப்பாண்டியன் போன்றவர்களின் கட்டுரை தொடர்ந்து வெளிவருகிறது. புதுவையில் இயங்குகிற நல்ல தமிழ் அறிஞர்களை இதழோடு இணைத்துக் கொண்டு இதழ் தொடர்ந்து வருவது வாழ்த்துதற்குரியதே. மாணவர் பக்கம், கொடுத்தபடி தொடுத்த பாடல்கள் என மக்களை எழுதவைப்பது, பரிசளிப்பது என ஊக்குவிப்பும் செய்து வருகிறது. இதழ் தொடர வாழ்த்துகள்



புதுச்சேரியிலிருந்து இறைவிழியனார் தொடங்கித் தொடர்ந்த இதழ் இது. ஆறாவது ஆண்டின் எட்டாவது இதழ் இது. பதிவு பெற்ற இதழ். இறைவிழியனாரின் மறைவிற்குப்பிறகு இதழ் என்னவாகுமோ என்று இருந்த பொழுது, இதழை மிகச் சிறப்பாக இலக்குநோக்கி, வீறுடன் அன்னாரது துணைவியார் திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார் தொடர்ந்து வருவது பாராட்டத்தக்கது. தெளிதமிழ் உணர்வோடு, தமிழியச் சிந்தனைகளை விதைத்து மக்களை வழிநடத்த ஒரு இதழ் தொடருவதென்பது இன்றைய சூழலில் கிடைத்தற்கரியதாகவே உள்ளது. தொடருகிற நற்றமிழை வாழ்த்துவோம். இந்த இதழில் ப.அருளி அய்யா மிகச் செறிவாக தாய் என்ற சொல்வழி உலக மொழிகளை யெல்லாம் ஆய்வு செய்து திரட்டி கட்டுரையாக்கித் தந்திருப்பது நுட்பமாக உள்ளது. இது போன்ற கட்டுரைகள் தமிழின் பெருமை உணர்த்தும், தமிழனை உயர்த்தும், வேலூர் தமிழியக்கச் செய்தியும், நூல் அறிமுகமும் சிறப்பாகவே உள்ளன. குறித்தபடி படைத்த பாடல்கள் நன்றாகவே உள்ளன. இன்றைய தேவை நம் தமிழ் மழலையர்களுக்கு இசையுடன் பாட இசைப்பாடல்கள், தெளிதமிழில், எளிமையான சொற்களில், அவர்களுக்கு ஈடுபாடு உள்ள பொருள்களில், அறிவையும், மானத்தையும், தமிழ்ப் பெருமையையும் விதைக்கிற 4, 6, 8 வரிகளில் 3 அல்லது 4 சீர்களை உடையதாக உள்ள இசைப்பாடல்கள் வேண்டும். அவை நம் தமிழ் மழலையர்களைச் சென்றடைய வேண்டும். அவர்கள் இதனைப் பாடவேண்டும். இனிவரும் அந்த இளம் தலைமுறையினராவது தமிழ் உணர்வோடு மேலெழ வேண்டும். இதற்குப் பாவலர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும், எழுத வேண்டும். அதைவிடுத்து ஏதோ ஒன்று எழுதி தான் மட்டும் பார்த்து மகிழுவது, நூலாக்கி அடுக்குவது என்பது தமிழிய வளர்ச்சிக்கு வழிவகுக்காது. பாவலர்கள் சிந்திக்கவும்.



திருமிகு இறைவிழியனார் தெளிதமிழுக்காகத் தொடங்கி தொடர்ந்த திங்களிதழ் இது. அவரது மறைவிற்குப் பிறகு அவரது துணைவியாரது (அரியநாயகி இறைவிழியனார்) முயற்சியில் தொடர்ந்து வெளிவரத் திட்டமிடப் பட்டுள்ளது. விளம்பரங்கள் ஏதுமின்றி கொள்கைக்காக இதழ் நடத்துவது என்பது உயரியது. இந்த வரிசையில் புதுச்சேரியிலிருந்து வெளிவருகிற தெளிதமிழ் இதழைப்போல இந்த இதழும் தொடர்ந்து வரும் என்று நம்புகிறோம். பாவலர்களை எழுதவைத்துப் படைப்புகளை இதழில் வெளியிட்டும், தமிழுக்காக இயங்குபவர்களை இணைத்துக் கொண்டும் இதழ் தொடருவது மகிழ்வூட்டுவதே. திருவாட்டி அரியநாயகி அவர்களது தொடர்ச்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,