இது ஐந்தாமாண்டின் ஆறாவது இதழ். இந்த இதழ் இணையதளத்திலும் வெளிவருகிறது. ஒவ்வொரு இதழிலும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கான கருத்துத் தொகுப்பை கவிதை வரிகளில் எழுதி வருகிறது. இந்த இதழில் மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இடிக்கப்பட்ட சுவரைக் காட்டி கவிதை எழுதியுள்ளது. ஒற்றைக காலைத் தூக்கி நாய்கள் சுவர் மீது ஒண்ணுக்கு அடிக்கின்றன - சுவர் எனின் என்ன ஜாதி மயிர் தான் - என்று கவிதை வரிகளை நிறைவு செய்துள்ளது. இதழின் அட்டையில் மத்திய அரசின் நிதி மோசடியை எளிமையாக விளக்கும் வகையில் காசோலையை அச்சாக்கி அதன் மீது BOUNCED என்று அச்சடித்துக் காட்டுவது அருமையாக இருக்கிறது. 20,280 கோடி ஏமாற்றப்பட்டதை இது எளிமையாக விளக்குகிறது. மத்திய அரசின் நிதி மோசடி பற்றிய கட்டுரையும் இதழில் காணப்படுகிறது. இதழில் சிறுவர்களுக்கான பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. போராட்டத்திற்கான முதல் பக்கமும் முதன்மைப் பக்கமும் குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதுதான் என்பதை இப்பொழுதாவது உலகம் உணரட்டும். நம் குழந்தைகள் ஆதிக்க சக்திகளால் காயடிக்கப்படுகிறார்கள். 20-5-2008 இல் நடைபெறவுள்ள ஆதித் தமிழர் கலை விழா பற்றிய குறிப்பும் இதழில் உளளது.



அட்டையில் காணப்படுவது அம்பேத்கர் பயன்படுத்திய தட்டச்சுப் பொறி. வியர்வைதான் எனக்குச் சொந்தம் கண்ணீரல்ல என்ற இந்த இதழின் கட்டுரை சுவைத்த பக்கங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. முன் உள் அட்டையில் அம்பேத்கர் கருத்துகளையும், பின் உள் அட்டையில் பெரியாரின் கருத்துகளையும் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வருகிறது. இவர்களின்றி தலித் முரசு இல்லை என்று தொடர்பாளர்களைப் பட்டியலிட்டுள்ளது சிற்றிதழுக்கே உரிய உயரிய அணுகுமுறை. குற்றவாளி பாபாவுக்கு வெண்சாமரமா என்று கேட்கிற மீனா மயிலின் கட்டுரை உண்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது. அம்பேத்கரின் ஆசான் புத்தர் என்ற ஏபி.வள்ளிநாயகம் அவர்களது கட்டுரை ஒடுக்கப்பட்ட இனத்தவருக்காக எழுந்து இயங்கிய இருவரையும் காட்டுகிறது. பேரா.நெடுஞ்செழியன் அவர்களது பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது. சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு நான் சவால் விட்டுச் சொல்கிறேன் என்ற அம்பேத்கரின் வரிகளை இன்றைய சூழலில் காணும் பொழுது அவரது கருத்துகள் எப்படி காலம் கடந்தும் வாழ்ந்து காட்டுகிறது என்பது புலனாகிறது.



நான்காமாண்டின் மூன்றாவது இதழ் - சனவரி 2007 இதழ். சாந்தியைக் கொண்டாடுவோம் என்கிற கட்டுரை தலித் மக்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்தும் பார்க்கும் ஆதிக்க மனோநிலையைச் சுட்டிக் காட்டுகிறது. அருந்ததியர் விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் வேண்டும் என நடந்து முடிந்த துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள் மாநாட்டுவழி அறிவிக்கிறது. பேராசிரியர் நெடுஞ்செழியனின் நேர்காணல் சிறப்பாகவும், அவரது பெரியார் அம்பேத்கர் வழி இயங்குகிற தளத்தையும் காட்டுகிறது, நேர்காணல் அடுத்த இதழிலும் தொடரவுள்ளது. அம்பேத்கரின் ஆசான் புத்தர் என்ற வள்ளிநாயகத்தின் கட்டுரை அம்பேத்கரின் செயற்பாடுகளை நுட்பமாகச் சுட்டுகிறது. குளத்திலும் தீண்டாமை, அழகிய பெரியவனைத் தாக்கியது குறித்த செய்தி, இந்துக்களாக்கும் சதித்திட்டம் என இதழின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் செறிவாக உள்ளவையே. சென்னையில் நடைபெறவுள்ள பறை விழா பற்றிய நாள்குறிப்பும் இதழிலுள்ளது. பெரியார் அம்பேத்கர் இருவரையும் இரு கண்களாகக் கொண்டு இதழின் கருத்துகளை நுட்பமாக்கிக் காட்டுவது, தலித் மக்களுக்கு உணர்வேற்றுவது, ஒருங்கிணைப்பது போன்ற செயற்பாடுகளை இதழ் வழி செய்கிறது.



ஏன் வேண்டும் தலித் அரசியல் என்கிற தலையங்கத்தோடு இதழ் தொடங்கியுள்ளது. யாழன் ஆதியின் கவிதை அருமை. பறைச்சி சமைச்சா சாப்பிடக்கூடாது என்று இன்றும் சொல்லும் அதிகாரவர்க்கத்தைச் சுட்டும் கட்டுரை, தலித் சுப்பையாவின் கருத்துரை, டாக்டர் கே.பாலகோபால் அவர்களது நேர்காணல், அழகிய பெரியவன் எழுதியுள்ள தலித் வரலாறு - என இதழ் சிறப்பாக மலர்ந்துள்ளது. மீண்டும் எழுவோம், சப்பானிலும் சாதியம் என்கிற உண்மை நிலை காணும் பொழுது அடக்குதலின் நுட்பம் தெரிகிறது.



ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழாக பெரியார், அம்பேத்கர், பாவாணர் ஆகியோரது கருத்துகளை முதன்மைப் படுத்தித் தொடர்ந்து வெளிவருகிற இதழ். இந்த இதழ் 10 ஆம் ஆண்டின் சிறப்பிதழ். நடப்புச் செய்திகளையும், நடக்கிற நிகழ்வுகளையும் கட்டுரையாகவும், துணுக்குகளாகவும், நேர்காணலாகவும் வெளியிட்டுக் கருத்து விதைக்கும் இதழிது. இந்த இதழில் படைப்பாளியான சரண்குமார் லிம்பாலே அவர்களது நேர்காணலை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் கீற்று இணையதளம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் புதுவிசை, தலித் முரசு, புதிய காற்று, புரட்சிப் பெரியர் முழக்கம், கூட்டாஞ்சோறு, அநிச்ச ஆகிய இதழ்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.



தலித் முரசு : தலித் மக்களது பிரச்சனைகளை நுட்பமாக அலசி படைப்பாக்கங்களின்வழி பதிவுசெய்கிற இந்த இதழ் தனது 9 ஆம் ஆண்டின் சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்த இதழ் இணையத்தில் உள்ளது. இணைய முகவரி : www.dalitmurasu.com



தலித் முரசு : ஆசிரியர் புனிதபாண்டியன. தலித் பிரச்சனைகளை நுட்பமாக சான்றுகளுடன் சுட்டிக்காட்டுவதோடு அவர்களது தற்கால நிலைமை பற்றியும் ஒடுக்குகிற ஆதிக்க சக்திகளை அடையாளம் காட்டியும் பெரியார் அம்பேத்கர் கருத்துகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு விழிப்புணர்வூட்டியும் வருகிற மாத இதழ்.



தலித் முரசு :ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கிளர்ந்து எழுந்து கட்டுரைகள், கவிதைகள் வழியாக உணர்வூட்டுகிற இதழ். புனித பாண்டியன் ஆசிரியராகவும், இளங்கோவன், அழகிய பெரியவன், யாக்கன், காவ்யா, விழி.பா.இதயவேந்தன் ஆசிரியர் குழுவிலும் வெளிவருகிற இதழ். அம்பேத்கர், பெரியார் கருத்துகளை உள்வாங்கி கருத்து விதைக்கிற இதழ்.



மூன்றாவது ஆண்டினை நிறைவு செய்யவுள்ளது. வாக்குமூலம் என பேரிதழ்களில் வெளிவந்த அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் குறிப்பிட்டு அதன் விளக்கத்தைச் சுட்டி வருகிறது. இந்த இதழில் வெளிவந்துள்ள ஜி.அப்பாதுரையார் பற்றிய கட்டுரை உயர்தரத்தது. வரலாற்றுப் பதிவாக இருப்பது. லம்பாடி சமூகத்தின் சிக்கல்களை எடுத்துக் காட்டி விளக்குவது சிறப்பாக உள்ளது. தொலைக்கப்பட்ட சீக்கியர்கள், நேர்செய்யப் படவேண்டிய தலித் இயக்கங்கள், சக்கிலியர்கள் தமிழர்கள்தான் என்கிற கட்டுரைகள் உள்ளன. இதழ் முகவரி: 203 ஜெயம் பிரிவு, சித்ரா அடுக்ககம், 9.சூளைமேடு நெடுஞ்சாலை, சென்னை 94


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,