கர்நாடகத்திலிருந்து வெளிவருகிற தமிழர் முழக்கம் இதழின் 75 ஆவது சிறப்பிதழ் இது. ஆசிரியர் வேதகுமார், இதழ் பொறுப்பாளர் பால. நல்லபெருமாள், எதுவரையில் தமிழ் மக்கள் ஏதிலியாய் இருப்பர், எதுவரையில் தமிழன்னை இழிநிலையில் தவிப்பள், எதுவரையில் இந்நாடு தமிழர்களை மிதிக்கும், அது ஒழியும்வரை தமிழர் முழக்கம் அஞ்சாது முழங்கும் - என்கிற முதன்மைப்பா - இதழின் கருத்தையும், செயற்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது. இநத மலர் அ4 அளவில் 48 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. வீரமுடன் எழுவோம், தமிழனுக்கோர் நாடின்றித் தமிழ் தழைக்குமா? தமிழ் தேசிய விடுதலைக்குக் களம் அமைப்போம், எத்தனை வருடங்கள் சென்றாலும் போரில் வெற்றி பெற இயலாது, தமிழால் முடியும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?, தமிழர்கள் சிந்தனைக்கு, குவளபுரத்தை ஆண்ட கங்க அரசர்கள், உலக வரைபடத்தில் ஒரு புதிய நாடு, அதிகரித்து வரும் புலால் உணவுப் பழக்கம், இனமும் மொழியும் இரு கண்கள், - என்கிற கட்டுரைகள் இந்த மலரில் காணப்படுகிற உயர்தரக் கட்டுரைகள். தமிழ் இல்லாத சூழலில்தான் தமிழின் உயர்வு தெரியும். இதை உலக நாடுகளில், தமிழகத்தின் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களிடம் காண முடிகிறது. தமிழகத் தமிழனோ, தமிழைப் புறம் தள்ளி, தமிங்கிலனாக, பெருமை பேசுகிறான், தமிழ்நாட்டில் தமிழன் அந்நியனாக மாறினால்தான் தமிழனுக்கு தமிழ் உணர்வு வரும் போலிருக்கிறது, அரசும் இதில் மெத்தனமாகவே இருக்கிறது.என்று விடியும் இந்த மோகம்?,,



பெங்களூரிலிருந்து கருநாடகத் தமிழர் இயக்கத் திங்களிதழாக 6 ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாவது ஆண்டின் முதல் இதழாக இந்த இதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிற்றிதழை அதுவும் வேறு மாநிலத்திலிருந்து, தொடர்ந்து தொய்வின்றி, தரமாக, தமிழர் நலம் பேசும் இதழாக, வணிக நோக்கமற்று, விளம்பரத்துள் வீழ்ந்துவிடாது - வெளியிடுவது என்பது வணங்குதற்குரிய செயலே. இந்தச் செயலைத் திரு வேதகுமார் அவர்கள் இதழ்வழி சிறப்பாகச் செய்து வருகிறார். எதுவரையில் தமிழ் மக்கள் ஏதிலியாய் இருப்பர், எதுவரையில் தமிழன்னை இழிநிலையில் தவிப்பள், எதுவரையில் இந்நாடு தமிழர்களை மிதிக்கும், அது ஒழியும் வரை தமிழர் முழக்கம், அஞ்சாது முழங்கும் என்று தலைப்பிலிட்டுத் தொடர்வது இதழின் இலக்கையும், தொலைநோக்கையும் காட்டுகிறது. தமிழிய இயங்குதலையும, மொழிக்கான வரலாற்றையும், இதழில் பதிவு செய்கிறது, உலகநாடுகளிலெல்லாம் தமிழர் நலம் கெடும் பொழுது அதனைச் சுட்டிக்காட்டி - எழ வழி அமைப்பது வாழ்த்துதற்குரியது. தரமான படைப்பாக்கங்களுக்குத் தளமாகவும் இதழ் இருந்து வருகிறது. இதழ் தொடர வாழ்த்துகள்.



பெங்களூரிலிருந்து கருநாடகத் தமிழர் இயக்கத் திங்களிதழ் என்று அறிவித்துக் கொண்டு, தமிழர் முழக்கம் திங்களிதழ் கடந்த ஆறு ஆண்டுககாகத் தொடர்ந்து தொய்வின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது 69 ஆவது இதழ். இதழின் அட்டையில் தமிழீழ அரசியல் பிரிவுத் தலைவர் தளபதி சுப.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளது. பின் அட்டையில் காசி ஆனந்தன் அவர்களது உரைவீச்சும் இடம்பெற்றுள்ளது. இதழின் தலையங்கத்தில் தமிழ் ஈழ மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளது. பொறிஞர் அகன் சென்ற இதழிலும் இந்த இதழிலும் மேலை நாகரிகம் எனப் பொய்யுரை கூறிக் கீழிறங்குவதை நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார். அறிவு ஒளியின் வித்து ஊன்றியவர்கள் தொடர், தமிழ் மொழிக்காக இயங்கியவர்களது வரலாற்றுத் தொடராகும். இதழைப் பற்றி என்ற பகுதியில் வந்த மடல்களை வரிசைப் படுத்தியுள்ளனர். வெண்பாப் போட்டியும் இதழில் காணப்படுகிறது. தமிழ்த் தேசம் மற்றும் கன்னட தேசத் தமிழர்கள் நல்லுறவு பற்றி பறம்பை அறிவன் கருத்துரைத்துள்ளார்.



தமிழர் முழக்கம் இதழ் பெங்களூரிலிருந்து தொடர்ந்து இனஉணர்வோடு வெளிவந்து கொண்டிருக்கும் திங்களிதழ். எது வரையில் தமிழ் மக்கள் ஏதிலியாய் இருப்பர், எது வரையில் தமிழன்னை இழிநிலையில் தவிப்பள், எதுவரையில் இந்நாடு தமிழர்களை மிதிக்கும், அது ஒழியும்வரை தமிழர் முழக்கம் அஞ்சாது முழங்கும் என்ற முழக்கத்தைத் தலைப்பிலிட்டு சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கோலார் தங்கச் சுரங்கம் பற்றிய குறிப்பினை இந்த இதழில் விளக்குகிறது. சாதி மதங்களின் வழி கீழிரங்கும் தமிழனைச் சுட்டிக்காட்டி உணர்வேற்றுகிறது. அய்யப்பனின் பிரச்சனையை இந்த இதழில் விவரித்துள்ளது. தமிழ் கற்பித்தல் பற்றிய செய்தியை முனைவர் தமிழப்பனும், நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் பற்றிய நிலையையும் விவரிக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஆண்டு கையொப்பம் அளித்துப் படிக்க வேண்டிய தரமான இதழ். ஆண்டுக் கட்டணம் ரூ 100. முகவரி : Vedha Kumar. Editor. Thamizhar Muzhakkam., No.487, 15 th cross, II nd stage, Indira Nagar, Bangalore- 38.



பெங்களூரிலிருந்து கர்நாடகத் தமிழரின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து வெளிவருகிற திங்களிதழ். இது ஐந்தாவது ஆண்டின் இரண்டாவது இதழ். இந்த இதழ் 50 ஆவது இதழ். எனவே சிறப்பிதழாக அ4 அளவுடையதாக தரமான தாளில், அச்சு நேர்த்தியுடன் மிகச் சிறப்பாக ஆக்கியுள்ளது. இதழின் ஒவ்வொரு பக்கமும் மொழிப் பாதுகாப்பிற்கான கருத்துகளைக் கொண்டுள்ளது. முனைவர் தமிழப்பனின் பல்வேறு படைப்புகளையும், குணா அவர்களது வாழ்வுரிமை என்கிற கட்டுரையையும், இதழ் வெளியீட்டு விழாக் குறிப்புகளும் இதழுக்குச் சிறப்பூட்டுகின்றன. நாம் பிழைக்க வந்தவர்களல்ல, என்கிற தலையங்கக் கட்டுரை தமிழர்களது நிலைப்பாட்டினை மிகச்சரியாகக் காட்டுகிறது. ஒவ்வொரு நிலையிலும் கீழிறக்கப் பட்டாலும் மேலெழுந்து துடிப்போடு இயங்குகிற ஒருசிலரால் தமிழ் மேலெழுகிறது. பொறிஞர் அகனின் மெய்ப் பொருள் காண்பதறிவு என்கிற கட்டுரை தமிழில் நுட்பம் காட்டுவது. பொறிஞர் அகனின் பாப்புக்குடி, முருகு சுப்பிரமணியத்தின் நட்புக்கு இலக்கணம் - சிறுகதைகள் சிறப்பானவை. மறைமுதல்வனின் கேள்விக்குறியாக நிற்கும் கருநாடகத் தமிழரின் வாழ்வுரிமை கட்டுரை, தமிழரின் வரலாற்றை நுட்பமாகக் காட்டுவதே. முத்து செல்வனின் சங்கப்பரிவாரங்களும் தீண்டாமையும் தலித் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனைக் காட்டுகிறது. இதழில் வெளியாகியுள்ள மரபுப் பாக்கள் தமிழிய நோக்கில் எழுதப்பட்டுள்ள தரமான, உணர்வூட்டுகிற பாக்களே. தமிழர் முழக்கம் திங்களிதழின் 50 ஆவது இதழ் சிறப்பிதழாக மலர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்துள்ளது. தமிழர் முழக்கம் இதழ் பாதுகாக்கப்படவேண்டிய இதழே. இதழ் தொடர வாழ்த்துகள்.



பெங்களூரிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிற திங்களிதழ். கருநாடகத்தமிழரின் உரிமைக்குரலாக இதழ் வெளிவருகிறது. ஆண்டுக் கையொப்பம் ரூ80. இதழின் கட்டுரைகளும், மரபுப் பாக்களும் தமிழிய நோக்கில் தரமானவைகளாக உள்ளன. இதழின் கட்டுரைகள் நுட்பமானவைகளாக, கருத்து விதைப்புகளாக இருந்து வழி நடத்துகின்றன. வணிக விளம்பரங்களில்லாமல், கருத்துவிதைப்பில், தொடர்ந்து தொய்வின்றி இதழை நடத்துவது என்பது வணங்குதற்குரியது. ஐந்தாமாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இதழ் தொடர வாழ்த்துகிறோம்.



கருநாடகத் தமிழரின் உரிமைக் குரலாக பெங்களூரிலிருந்து வெளிவருகிற இதழ். இந்த இதழில் சாதியக் கட்டமைப்பு பற்றி எழுதியுள்ளது. அதன் தாக்கத்தை, கொடுமையைக் குறிப்பிடும் பொழுது இதிலிருந்து விடுபடும் நாள் எந்த நாள் என்றே எண்ணத்தோன்றுகிறது. பொறிஞர் அகன் அவர்களது மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கட்டுரைத் தொடர் இலக்கிய நயத்தோடு தமிழன் காட்டுவதே. நமக்கு வந்த இதழ்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதழில் வெளியாகியுள்ள மரபுப் பாக்கள் உயர்தரத்தவை.



ஆசிரியர் வேதகுமார் பெங்களூரிலிருந்து தொடர்ந்து வெளியிடுகிற திங்களிதழ். விளம்பரங்களில்லாது, கருத்தை முதன்மைப்படுத்தித் தொடருகிற இதழ். இடிப்பார் இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாது கெடும் என்கிற தன்மையதாய், இடித்துக் காட்டுகிற இதழ். மன்னன்தான் கேட்பதாக இல்லை. தமிழுணர்வுச் செய்திகளை முதன்மைப்படுத்தி, தமிழுணர்வாளர்களோடெல்லாம் தொடர்பு கொண்டு கருத்து விதைக்கிற இதழ். அனைத்துலகத் தமிழ்மாமன்ற இலக்கிய மாநாட்டில் இந்த இதழுக்குச் சிறந்த இதழுக்கான பரிசு அளிக்கப்பட்டது. 487. 15 th Cross, II nd stage. Anna Nagar, Bangalore - 560 038



தமிழர் முழக்கம் : பெங்களூரிலிருந்து கருநாடகத் தமிழரின் உரிமைக் குரலாக, தொடர்ந்து, சிறப்பாக, வேதகுமார் அவர்கள் வெளியிட்டு வருகிற தமிழ் உணர்வுத் திங்களிதழ் இது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இதில் உள்ள கட்டுரைகள் தரமுடையன. மரபுப் பாக்கள் உரமூட்டுபவை. ஆண்டு நன்கொடை ரூ 75


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,