சென்னையிலிருந்து அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பகுத்தறிவு - கருத்துகளை வெளியிடுவதற்காகத் தொடங்கப்பட்ட திங்களிதழ். பகுத்தறிவுக் கருத்துகளை விதைப்பதோடு, வரலாறு காட்டவும் செய்கிறது.

அ.மார்க்ஸ் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காந்தியடிகளும் என்ற தொடரையும், புலவர் எ.ந.செ தமிழியக்கம் என்ற தொடரையும், க.தமிழ்ச் செல்வன் பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்ற தொடரையும், பெரம்பூர் க.கந்தன் தி.மு.கழகம் என்ற தொடரையும் இதழில் எழுதுகின்றனர். நடக்கவிடலாமா? நரகாசுர வதத்தை என்ற கட்டுரையை அர.திருவிடம் எழுதியுள்ளார். ஆனால் சூரன் வதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பண்பலை ஒலிபரப்போடு, தொலைக்காட்சி நிகழ்வுப் பதிவோடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

மூளைச் சலவை செய்பவை, தொலைத் தொடர்புக் கருவிகளுக்குள் புகுந்து கருத்து விதைப்பை முனைப்போடு செய்யும் பொழுது - அச்சு ஊடகத்தில் - எழுதினால் படிப்பவர் யார்? செயல்படுத்துபவர் யார்? யாருக்காக இந்தக் கட்டுரை? மக்கள் தொலைக் காட்சி போல அல்லதை விடுத்து நல்லதைக் காட்டவேண்டும் என்று உள்ளெடுக்காமல் - வெளித்தள்ளுவதால் என்ன பயன்? எப்படியோ இக்கட்டுரை, நன்றாக இருக்கிறது. பெரியார் ஆணி வேரை அசைத்தார். அனைத்தும் ஆட்டம் கண்டது. இன்று வேருக்கு நீர் ஊற்றி "கிளை ஒடிக்கலாமா என்று திட்டமிடுவதைக்" காண்கிறோம். எப்படியோ.. முன்னெடுப்பவர்கள் முயலட்டும்.



பரிதி இளம் வழுதி சிறப்பாசிரியராகவும், பெரம்பூர் க.கந்தன் ஆசிரியராகவும் இருந்து சென்னையிலிருந்து வெளியிடுகிற திங்களிதழ். அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பகுத்தறிவுச் செய்திகளை வெளியிடுவது. முத்தமிழாக இயல், இசை, நாடகம் என மூன்றுக்கும் தளம் அமைத்துத் தருவது. வரலாற்றுச் செய்திகளைக் காட்டி, வரலாற்றில் தமிழர்கள் நிலையைக் குறிப்பிட்டு, தற்கால வாழ்முறைக்கு வழிகாட்ட அடித்தளம் அமைப்பது. உன்னை அணைக்க முடியாது நெருப்பே என்ற பல்லவனின் கவிதையும், தமிழகம் இட ஒதுக்கீட்டில் தாய்வீட என்கிற கட்டுரையும், வாலாசா வல்லவனின் பெர்ட்ரண்டு ரசல் பற்றிய விளக்கமும் மிகச் சிறப்பாக உளளன.



அம்பேத்கர் அடிச்சுவடு, பாவவேந்தர் சிந்தனை பற்றிய குறிப்பு, அரசியல் சட்ட அமைப்பு அவையில் அம்பேத்கர் பேச்சு அனைவரையும் ஈர்த்ததா?, திராவிடப் பெருந்தகை தியாகராயர் - என்று வழிகாட்டிகளின் வரலாற்றை காட்டுகிற தரமான கட்டுரைகளையும், புஷ்பராஜா அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள், கைக்கெட்டும் தொலைவில் காஷ்மீர் தீர்வு என்று நடப்பியல் தொடர்பான விளக்கக் கட்டுரையும் இதழில் இடம் பெற்றுள்ளன. மக்களது நிலையுணர்ந்து வாக்களிப்பதே மக்களாட்சி என்பதற்கான சான்றுகளுடன் விளக்கி நடக்கிற சட்டமன்றத் தேர்தல் பற்றிய குறிப்புகளையும் இணைத்துள்ளது.



சிறப்பாசிரியர்: பரிதி - இளம்வழுதி., ஆசிரியர் : பெரம்பூர். க.கந்தன். இது இரண்டாமாண்டின் முதல் இதழ். தமிழ் உணர்வுக் கருத்துகளை உள்ளடக்கிய திங்களிதழ். சென்னை 99 லிருந்து வெளிவருவது. மொழிப்போர் தியாகிகளுக்கு விர வணக்கம் என்கிற கட்டுரை தரமாக உள்ளது. கட்டுரை, கவிதைகள், கருத்துரை, குறிப்பு எனப் பல்சுவையோடு இதழ் தொடர்ந்து வருகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,