அம்ருதாவின் இந்த இதழ் இரண்டாம் ஆண்டின் 11 ஆவது இதழாக வெளிவந்துள்ளது. இது நவீன கலை இலக்கிய சமூக மாத இதழ் எனத் தன்னை அறிவித்துக் கொண்டு வெளிவருகிறது. கெளரவ ஆசிரியர் திலகவதி, ஆசிரியர் பிரபுதிலக், சென்னையிலிருந்து வெளிவருகிறது. வலைதள முகவரி www.amruthamagazine.com மின் அஞ்சல் amruthamagazine@yahoo.com - இந்த இதழின் ஒவ்வொரு தலையங்கக் கட்டுரையும், உயர்தரத்ததாக, மக்கள் நலம் நோக்கியதாக உள்ளது. இந்த இதழில் தாகத்தைத் தீராத தண்ணீர் என்ற கட்டுரையை நடப்பியலோடு பொருத்தி எழுதியுள்ளது. பாவண்ணனின் பொங்கல் சிறுகதையும், தோப்பில் முகமது மீரானின் கட்டுரையும் உள்ளது. இந்த இதழில் தொடங்கியுள்ள அரசியலின் கதை என்ற கட்டுரை (மருதன் எழுதியது) மிகச் சிறப்பாக உள்ளது. அரசியல் சாக்கடை தான் என்று ஒதுக்கியது ஒரு காலம். ஆனால் இன்றைய சூழலில் உலக அளவில் அரசியல் காயை நகர்த்தி - பொருண்மிய மேம்பாட்டிற்காக - உயிர்களைப் பலி கொடுத்து - ஆடுகிற ஆட்டம் நேர்மையற்றதாக - அதன் அடிப்படை அரசியலாக இருப்பதை - மிகத் துல்லியமாக - சரியாக - துலாக்கோலாய் - அலசிப் பார்த்துப் பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை. தொடருகிற இந்தக் கட்டுரை நெருக்குதலில்லாத தொடர்ந்து - பதிவாகி தொகுக்கப் படுமானால் மிகப் பெரிய வழிகாட்டியாக இருக்கும் - வாழ்த்துகள் - படைப்பாளிக்கும் - இதழாளருக்கும்.



அம்ருதா நவீன கலை இலக்கிய சமூக மாத இதழாக மலர்ந்து வருகிறது. இதுவரை 9 இதழ்களை வெளியிட்டுள்ளது. சென்னயைிலிருந்து வெளிவரும் இந்த இதழின் ஆசிரியர் பிரபுதிலக். சிறப்பாசிரியர் திலகவதி. இதழின் விலை ரூ15. இதழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, நூல் விமர்சனம் ஆகியவை உள்ளன. இதழில் நேர்காணல் நேர்த்தியாகச் செய்யப்படுகிறது. மொழிபெயர்ப்பும் இதழில் காணப்படுகிறது. படைப்பாளி பொன்னீலன் தொடர்ச்சியாக கல்வி குறித்து எழுதுகிறார். டில்லிக்குப் போ என்று விளையாட்டுமுறையில் பாடத்தைக் காட்டி மாணவர்களை ஊக்கப்படுத்துகிற ஆசிரியர்களால்தான் தொடக்கக் கல்வி மேலெழுகிறது என்ற குறிப்பை நுட்பமாகக் குறிப்பிடுகிறார் பொன்னீலன். கவிஞர் புவியரசின் கவிதை அருமையானது தான். இதழை அழகிய வடிவில் அமைத்து வெளியிட்டுள்ளது வாழ்த்துதற்குரியதே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,