நாள் ஒரு நூல் -- தோன்றியது எப்படி ?

அன்புடையீர், வணக்கம்.

தமிழம் வலையின் இணைப்பாக - நாள் ஒரு நூல் - என்ற இந்தப் பகுதியானது 9-10-2008 இல் தொடங்கப்பட்டு தொடரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு இதழ் அல்லது நூலாவது வலையேற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை வலையேற்றி வருகிறேன்.

விடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழைத் தொடங்கி 85 களில் நடத்திய பொழுது எனக்கு மாற்று இதழாக வந்தவற்றைத், தொகுத்து அடுக்கிப் பார்த்தேன். பல நண்பர்களின் உயிர்த்துடிப்பு அதில் தெரிந்தது. திரட்டத் தொடங்கினேன். திரட்டியவற்றைச் சிற்றிதழ்க் கண்காட்சி என்ற பெயரில் பல ஊர்களிலும் காட்சியாக வைத்து அங்குள்ளவர்களிடம் உள்ள இதழ்களை யெல்லாம் திரட்டலானேன். முதல் சிற்றிதழ்க் கண்காட்சி தஞ்சையில் நடந்தது. இறுதிக் கண்காட்சி சென்னையில் நடந்தது.

இதழைச் சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு, அந்த இதழைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்று உணர்ந்ததும் - இதழை முழுமையாகத் திரட்டத் தொடங்கினேன்.

முதன் முதலாக கோவை யாழ் நூலக நண்பர் திரு துரைமடங்கன் 100 தரமான இதழ்களை அன்பாகக் கொடுத்து ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பே என்னைத் தொடர வைத்தது. பலரும் இதழ்களை அன்போடு கொடுத்தனர்.

திருமிகு வல்லிக்கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன், சரஸ்வதி விஜயபாஸ்கரன், சுட்டி சுந்தர், நிகழ் ஞானி, தஞ்சை சுகன், குழிவிளை விஜயகுமார், பெங்களூர் ஜகந்தாதன்... என நண்பர்கள் பலரும் இதழ்களைக் கொடுத்து உதவினர்.

அந்தனி ஜீவா, செ.கணேசலிங்கன், எஸ்.எல்.எம்.ஹனீபா போன்றவர்களும் இதழ்களை அளித்தனர். கனடா, பிரான்ஸ், சுவிஸ், மலேசியா, துபாய் என்று உலகநாடுகளில் வாழும் இதழாளர்களும் தங்களுடைய இதழ்களை அனுப்பி வைத்தனர்.

நான் நடத்திய சிற்றிதழ்ச் செய்தி (இதழ்1 டிசம்பர் 1991) என்ற இருமாத இதழுக்கு மாற்றிதழாக, அப்பொழுது வெளிவந்த அனைத்துச் சிற்றிதழ்களும் இலவயமாக வந்தன. 1999 இல் சிற்றிதழ்ச் செய்தியை நான் நிறுத்திய போதும் நண்பர்களின் சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிற்றிதழ்களைத் திரட்டுவதற்காகப் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்ற பொழுது, அவர் ஒரு சில இதழ்களை மட்டும் கொடுத்தார். அடுத்த முறை நான் அங்கு சென்ற பொழுது அவர் இல்லை. அவரது வீட்டில் இருந்த அனைத்துத் தாள்களும் பழைய புத்தகக் கடைக்கு போட்டு விட்டதாகச் சொன்னார்கள். இப்படித்தான் பல இலக்கியவாதிகளுடைய இலக்கியச் சொத்துகள் அவரது மறைவிற்குப் பிறகு பழைய புத்தகக் கடைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. கூழாகித் தாளாகின்றன.

பிரமிள் அரிய நண்பர். அவரிடமிருந்து ஒன்றிரண்டே வாங்க முடிந்தது. அவரிடம் இருந்த இதழ்கள் அவரைப் பாதுகாத்தவரிடம் சென்றுவிட்டன. தன் தந்தையின் நினைவாக, தலைவரின் நினைவாக, தன் படைப்பின் நினைவாக ஒவ்வொருவரும், வைத்திருந்த இதழ்களை நான் வாங்கி வரும்போதெல்லாம் என் நெஞ்சு நெகிழும்.

கோட்டையூர் ரோஜா முத்தையாவின் சேகரிப்பு அவருக்குப் பிறகு வெளிநாடு சென்று விட்டது. நூலகர் திரு சங்கரலிங்கம், அருமையான நண்பர். அவரிடம் மைக்ரோபிலிமின் குறை நிறைகளை நுட்பமாக அறிய முடிந்தது. தொடர்ச்சியான செலவுடைய இந்த முறைவழி நம் சேகரிப்பைப் பாதுகாக்க முடியாதே என்று வருந்தினேன். ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைத்தற்கரிய பொன்னி, பிரசண்ட விகடன், முல்லை எனப் பல இதழ்களைப் பார்த்தேன். சிலவற்றி்ன் பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருந்தன.

திரட்டுதலில் எனக்குக் கிடைத்த மணிக்கொடி இதழ்களில் (12 இதழ்களிலும்), புதுமைப் பித்தனின் கதைப் பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டிய அந்த இதழ், தனி மனிதனுக்கு மட்டுமே பயன்பட்டிருப்பது கண்டு வேதனை அடைந்தேன். அப்பொழுது....

நண்பர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்தார். சூறாவளி இதழிலிருந்து புதுமைப்பித்தன் கட்டுரைகளை மட்டும் படியெடு்த்துக் கொடுங்கள் என்று கேட்டார். அவர் கேட்டது அழகிய குழந்தையின் கட்டை விரலை மட்டும் வெட்டித்தா என்று கேட்பது போல இருநத்து. நான் தரவில்லை. முழுமையாக - அட்டை முதல் அட்டை வரை - பாதுகாப்பதாக இருந்தால் மட்டுமே தருவது என்று முடிவு செய்தேன்.

இதழ்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட வேண்டும் என்ற நினைவு ஓடிக் கொண்டே இருந்தது.

அப்பொழுதுதான் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, போன்றவை - நூல்களைத் - தட்டச்சு செய்து படவடிவாக்கிப் பாதுகாப்பது பற்றி அறிந்தேன். மிகப் பெரிய முயற்சி இது. கிடைத்தற்கரிய பல சங்க இலக்கிய நூல்களைப் படிக்கவும், வலையிறக்கிச் சான்று காட்டவும் உதவிய அவை வணங்குதற்குரியவை.

என் சேகரிப்பில் உள்ள இதழ்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட வேண்டும் என்ற நினைவு என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது.

இந்தச் சூழலில்தான்...

நூலகம்.நெட் பார்த்தேன். படவடிவக் கோப்பாக - உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக் கண்ணாடியாக - நூல்களையும், இதழ்களையும் பார்த்தேன். (இதுவரை இதழ்களை இப்படிப் பாதுகாத்தவர் யாருமிலர்) என்னிடம் உள்ள இதழ்களை இந்த முறையில்தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

நூலகம் நண்பர் திரு. கோபியின் தொழில் நுட்ப வழிகாட்டுதலுடன், இதழ்களைப் படவடிவக் கோப்புகளாக்கி வலையேற்றத் தொடங்கினேன். திரட்டுதல் மற்றும் பாதுகாப்பிற்கான தொழில் நுட்ப விளக்கமும் நண்பரின் வழியாகக் கிடைத்த பொழுது, அரிய நூல்களைத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. நூலகம் இணையதளத்தில் விடுபட்ட இதழ்களைத் தேடத் தொடங்கினேன்.

இந்த நிலையில்தான் என்னுடன் இணைய வழி தொடர்பு கொண்ட ஈரோடு நண்பர் திரு.கே.பி.இரவி, மறைந்த திருமிகு வி.பி. தெய்வநாயகம் பிள்ளை மற்றும் ஆறுமுகம் பி்ள்ளையின் சேகரிப்பை முழுமையாகத் தந்து உதவினார். கிடைத்தற்கரிய பல நூல்களைப் பாதுகாத்து வைத்த பெருமை அவரையே சேரும். நூல்கள் அனைத்தையும் ஈரோடு நண்பர் தனது சொந்தச் செலவில் எனது வீ்டு வரை கொண்டு வந்து கொடுத்தது என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு.

இலக்கணம் தொடர்பான நூலை வெளியிடுவதற்கு, தெளிதமிழ் இதழாளர் திருமிகு இரா.திருமுருகனார் அவர்களிடம் அனுமதி கேட்டதற்கு, மன மகிழ்வுடன் இசைவு தந்தார்.

இன்னும் நிறைய நண்பர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள இதழ்களையும் நூல்களையும் தருவதாகச் சொல்லியுள்ளார்கள்.

தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலை இறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும் தான்.

தமிழில் வெளி வந்த அனைத்து நூல்களையும், இதழ்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு இலவசமாக, எளிமையாகக், கிடைக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வகையில்..

20 - 09 - 2011 வரை 4000 வகையான படவடிவக்கோப்புகளை உருவாக்கி இணையத்தில் இணைத்தேன். நண்பர்கள் பலரும் இலவசமாக வலைஇறக்கத் தொடங்கினர். வரிசை எண் 3000 எண்ணிலிருந்து அளவில் பெரிய (500 பக்கங்களுக்கு மேற்பட்ட) பழைய நூல்களை படவடிவக்கோப்பாக்கி இணைத்து வந்ததேன். ஒவ்வொரு கோப்பும் அளவு அதிகம் உடையதாக இருந்தது. படவடிவக் கோப்பினை வலையேற்றுவதும், வலைஇறக்குவதும் அதிக நேரம் ஆனது. அகண்ட அலைவரிசை இணைப்பில் கூட வலை ஏற்றுவதும் இறக்குவதும் சிரமமானதாகவே இருந்தது.

மேலும் 2011 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வலை இறக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வரிசை எண் 1 லிருந்து படவடிவக் கோப்புகளை ஒவ்வொருவரும் வலைஇறக்கத் தொடங்கினர்.

அதன் விளைவு ?


எனக்கான இணைய இணைப்பு வழங்குதளம் தன் செயற்பாட்டை இழந்தது. குறிப்பிட்ட எல்லைக்குமேல் சென்றதால், இணைப்பு வழங்கியவர்கள், சுட்டிக்காட்டி, அறிவுறுத்தினர். பழைய நூல்களையும், இதழ்களையும், அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாத்து, எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் தமிழம் வலையின் இலக்கு. எனவே இனி, பழைய நூல்களையும் இதழ்களையும் வருடி படவடிவக்கோப்புகளாக்கிக், கணினியில் பாதுகாப்பது என்றும், பாதுகாத்த நூல்கள் மற்றும் இதழ்களின் பட்டியலை மட்டும் இணையத்தில் குறிப்பிடுவது என்றும் திட்டமிட்டேன்.

அதற்காக....

தமிழம் வலையின் வடிவமைப்பையும், இணைப்புகளையும் புதியதாக மாற்றி, அமைத்தேன். பார்க்கவும். கருத்து எழுதவும். அரிய, பழைய தமிழ் நூல்களையும், இதழ்களையும் வைத்திருப்பவர்கள் அருள்கூர்ந்து அனுப்பி வைத்து அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாக்க உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம்.வலை. கைபேசி எண் 890 300 2071