[ திசைகாட்டி ] [ அதிகாலை ] [ மதிபாலா ] [ விக்கிபீடியா ] [ லக்கிலுக் ] [ ரவிடிரீம்ஸ் ] |
|
( கோவை - 28-02-2012 ) படிக்கப்பட்ட வாழ்த்துப்பா இளமையாய் வெயிலடிக்கும் நற்கொங்குக் கோவையிலே படித்தல் திறனுக்கொரு பயிற்சியினை ஆணையிட்டு வளமையாய்ச் சிந்தித்து அழைத்திங்கே கொண்டுவந்து அமரவைத்த அரசுக்கு நன்றிகள் நான்சொல்வேன் புலமையாய்ப் பூத்த புதுத்தமிழ் நறுமலராம் பொள்ளாச்சி நசனின் சொல்லமுதை நாம்பருகி தலைமையாய் அவருடைய வழிநடக்கக் கிடைத்த தனிப்பெரும் வாய்ப்புக்குத் தமிழால் நன்றிசொல்வேன் தற்பெருமை ஏதுமில்லை தன்னலம் சிறிதுமில்லை எளிமைக்குக் குறையில்லை எண்ணத்தில் ஊமையில்லை விற்பெருமை ஓரியைப்போல் சொற்பெருமை கொண்டநம் நசனின் சிந்தனைகள் நல்லதமிழ்ச் சிந்தனைகள் கற்பெருமை காட்டுகின்ற சோழர்தம் கோயில்கள்போல் அறிவின் பெருமைக்கு நசனின் சொற்களன்றோ ? பிற்பெருமை கொண்டவரின் புன்னகை மிகச்சிறப்பு நற்பெருமை கொண்டநசன் நாளும் வாழியவே. ஓலைச் சுவடிகளில் உறங்கிய நம்தமிழை அச்சுக்குக் கொண்டுவந்தார் அறிஞர் உ.வே.சா நூலைப் பதிப்பத்தார் நொசிந்த நிலையினிலும் அன்னவர் அவர்போல அரும்பாடு பலபட்டு வேலைபல செய்து இணையத்தில் தமிழ்வளர்க்கும் பொள்ளாச்சி நசனென்றும் பொலிவோடு வாழியவே பாலைப் புசித்து உயிர்வாழும் பூனையைப்போல் தமிழைப் புசிக்குமித் தலைமகன் வாழியவே. வலைதளத்தில் நசன்பதிக்கும் நற்கருத்துச் சிந்தனைகள் வையகத் தமிழுக்கு வழங்குகின்ற நல்லுணவு மலைத்தளத்தில் சிறக்கின்ற குறிஞ்சிமலர்போல தமிழ்க் கலைத்தளத்தில் இவரேதான் கவினுடைய குறிஞ்சிப்பூ சிலைத்தளத்தில் சிறப்பது சிற்பியின் கைவண்ணம் தமிழ் வலைதளத்தில் சிறப்பது இவருடைய நல்லெண்ணம் அலைத்தளத்தில் ஆடிவரும் ஆர்ப்பரிக்கும் கடல்போல தமிழ்வலைத்தளத்தில் நசன்புகழ் வாழ்க நாளும். தெங்கங்காய் புகழ்பாடும் பொள்ளாச்சி நகருக்குப் புகழ்ப்பெருமை பலவுண்டு என்றாலும் எங்கெங்கும் இடம்பிடிக்கும் இணையத்தில் இவரிறக்கும் தமிழ்ப்பயிற்றுச் சிந்தனைகள் இவருடைய புகழ்பாடும் பங்கெங்கும் கேட்காமல் பணமெதுவும் கேட்காமல் தூயதமிழ்த் தொண்டாற்றும் இத்தொண்டரின் புகழ்வாழ்க மங்கலெதும் இல்லாமல் மறத்தமிழ்ப் பணியாற்றும் நதிகள் மணலினும் நசன்வாழ்க பல்லாண்டு செ. எழில்வளவன், விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சி நடுவம், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம் அலைபேசி எண் - 73731 77109 |