அன்புடையீர்

வணக்கம். தமிழம் வலையின் இணைப்பாக - கல்வி - என்ற இந்தப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

2003 ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழம் வலை இணையதளம் தொடங்கப்பட்டது. இதழ்களின் தொடர்பிற்காகவும், எனக்கு வருகிற இதழ்களின் பெயர்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்ட இந்த வலை, கொஞ்சம் கொஞ்சமாகத் கல்வியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியது. அரசுப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும், அரசுப் பணியில், தொடர்ச்சியாகச் சென்னை சென்று கொண்டிருந்த எனக்குக் கிடைத்த பட்டறிவுகள் நுட்பமானவையாக இருந்தன. மேலும் நான் நடத்திய தாய்த் தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்ற முக்கோண வலைப்பின்னலில் சிக்கி மாணவர்களுக்குத் தரமாகக் கற்பிக்க வேண்டும் என்கிற உந்துதலில் தேடியவை, மற்றும் உருவாக்கியவை அரியவையாக இருந்தன. அவற்றை உலகரியச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.

இணையம் இருந்ததாலும், அதனை வடிவமைக்கிற நுட்பங்கள் என்னுள் பதிந்ததாலும், இணையப் பக்கங்களாக நான் பெற்ற பட்டறிவுகளைப் பதிவு செய்யத் தொடங்கினேன். கல்வி ஆராய்ச்சிகள், கல்வி வினாக்கள், கல்விக்கான இலவச படவடிவக் கோப்புகள், கல்விக்கான இறுவட்டுகள் என உருவாக்கத் தொடங்கினேன்.

தொடக்கத்தில் டாஸ்கி (tsc) வகை எழுத்துருக்களைப் பயன்படுத்தி அனைத்தையும் உருவாக்கினேன். அவற்றை அழகி மென்பொருள் விசுவநாதன் உதவியுடன் இணையத்தில் தமிழில் தெரியுமாறு வரிசைப்படுத்தினேன். ஒவ்வொரு பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனாகுகிற புதிய புதிய முறைகளை, செய்திகளை இணைத்துக் கொண்டே இருந்தேன். 40 அல்லது 50 பக்க நூல் அளவில் எழுதவேண்டிய கருத்துகளை சுருக்கி ஒரே ஒரு பக்கத்தில் ஒட்ட வைத்தேன்.

கல்வி வினாக்கள் என்ற பக்கத்தில் - பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்ட வினாக்களுக்கான விடையை உளவியல் அடிப்படையில் கண்டறிந்து வரிசைப் படுத்தத் தொடங்கினேன்.

அவை அனைத்தும் டாஸ்கி வகை எழுத்துருவிலேயே இருந்தன. இதனால் வலையேற்றிய இக் கருத்துகள், பல நண்பர்களுக்குச் சென்றடையவில்லை. ஒருங்குறியில் உருவாக்குங்கள் என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. குவிந்து கிடந்த பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி என்றே சோர்வே மேலெழுந்தது. புதியனவற்றை உருவாக்குவதா, அல்லது இருப்பதைச் சரி செய்வதா - குழப்பத்திலேயே நாள்கள் கடந்தன. இப்பொழுது அனைத்தையும் ஒருங்குறிக்கு மாற்றி விட்டேன்.

வெளிநாட்டிலிருந்து, நண்பர்கள் பலர் தமிழை எளிமையாகக் கற்பிப்பதற்காகவும், மகிழ்ச்சியான / நுட்பமான வகுப்பறைச் செயற்பாட்டிற்காகவும் எந்த வகையில் உதவு முடியும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

நண்பர்களின் வேண்டுகோளின்படி, தமிழம் வலையில் தற்பொழுது கல்வி என்ற பகுதி முழுமையாக ஒருங்குறியில் மாற்றப்பட்டு வலையேற்றப் படுகிறது. பாடங்கள் தொடர்பாக எழும் அனைத்து வகையான வினாக்களுக்கும் விடையளிக்கக் காத்திருக்கிறேன். இதனை நம் மழையர்களிடம் எப்படி முழுமையாக எடுத்துச் செல்வது என்பதைத் திட்டமிடவும். உங்கள் செயற்பாடு பற்றிய குறிப்பை அனுப்பினால் தமிழ்ப் பள்ளிகள் என்ற பகுதியில் உங்கள் மாணவர்களின் படங்களுடன் இணைத்து விடுகிறேன்.

தமிழ்க் கற்பித்தல் தொடர்பாகத் தங்களுக்கு ஏற்படும் வினாக்களை தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்கைப் ( ID : pollachinasan1951) அல்லது கூகிள் உரையாடலின் வழி பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தவும். எப்படி எளிமையாக நடத்துவது, எப்படி ஈர்ப்புடையதாக நடத்துவது, என்பதற்கான வினாக்களுக்கு கூகிள் உரையாடல்வழி விளக்கவும் அணியமாக உள்ளேன். நீங்கள் செய்வேண்டியது என்ன? pollachinasan@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு மடல் எழுதி உரையாட விரும்பும் நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் போதும். உங்கள் மின் அஞ்சலை கூகிள் உரையாடலில் இணைத்துக் கொண்டால் போதும. நம் மழலையர்கள் தமிழை எளிமையாகவும், நுட்பமாகவும் படிக்க நாம் முனைப்புடன் செயற்படுவோம். (இதற்கான கட்டணம் எதுவும் இல்லை)

தமிழம் வலையில் உள்ள தமிழ்க் கற்பித்தலை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி பயன்பெற ஊக்குவிக்கவும்

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம் வலை,
கைபேசி : 890 300 2071, மின்அஞ்சல் pollachinasan@gmail.com